பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதை தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க, மத்திய அமைச்சர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நாட்டின் தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதில், மத்திய அரசு சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உண்டானால், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க சட்டம் இயற்றியது. இருப்பினும் இந்த குற்ற சம்பவங்கள் குறைந்தபாடு இல்லை.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு தபால் தலையை வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, “நாட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் இரவு நேர பணி செய்யும் போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதை தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க, மத்திய அமைச்சர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த குழுவில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், மேனகா காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பணியிடங்களில் பெண்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து, அவர்களை பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை இந்த குழு வகுப்பதோடு, இதுதொடர்பான சட்டத்தை மேலும் வலுவுள்ளதாக மாற்றுவதற்கான பரிந்துரைகளையும் வழங்கும். இதனை தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பையும், அவர்களது சுயமரியாதையையும் உறுதி செய்வதில், மத்திய அரசு அர்ப்பணிப்போடு இருப்பதாகவும் கூறியிருக்கிறது.

Share