சொந்த வீடு என்பது மனித வாழ்க்கையில் பெருங்கனவு. அதிக வருவாய் ஈட்டுவோருக்குச் சொந்த வீடு கனவு எளிதாக நிறைவேறி விடும். நடுத்தரக் குடும்பத்தினர் பெரும்பாலும் வங்கிகளில் கடன் வாங்கி சொந்த வீட்டுக் கனவை நனவாக்கி கொள்கிறார்கள். ஆனால், ஏழை மக்களுக்குச் சொந்த வீடு என்பதெல்லாம் கனவாக மட்டுமே இருக்கும். காலம் முழுவதும் வாடகை வீட்டிலேயே வாழக்கையை நகர்த்தும் அவர்களுக்கும் வீடு கட்டும் ஆசையை நிறைவேற்றுகிறது அனைவருக்கும் வீடு திட்டம்.

“அனைவருக்கும் வீடு” என்கிற உயர்ந்த நோக்கத்தோடு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியால் 2015-ஆம் வருடம் ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட திட்டம்தான் “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா”. சமூகத்தில் வாழும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு 2022-ஆம் வருடத்திற்குள் சொந்தமாக வீடு கொடுக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் லட்சியம். இந்த திட்டத்தை செயல்படுத்த, இந்திய அரசு ₹43,922 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது.

இது தொடர்பாக சமீபத்தில் பேட்டியளித்துள்ள பிரதமர் மோடி, “கடந்த 4 ஆண்டுகளாக நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். முந்தைய அரசுகள் தங்களது குடும்பத்தின் பெயரை நிலை நாட்டுவதற்கு மட்டுமே முயற்சி எடுத்தன. ஏழைகள் வாழ்வில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படுத்தவில்லை. காங்கிரஸ் கட்சியின் இலக்கு என்பது வாக்கு வங்கிகளை உருவாக்குவதுதான்.

2022-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் வீடு கிடைக்க வேண்டும். அந்த ஆண்டில் நாடு விடுதலை பெற்று 75-வது ஆண்டை கொண்டாடும். அந்த நேரத்தில் அனைவருக்கும் வீடு திட்டம் முழுமை பெறும். முந்தைய அரசுகள் எல்லாம் மொத்தமே 25 லட்சம் வீடுகளைத்தான் கட்டிக் கொடுத்தன. ஆனால், 4 ஆண்டுகளாக எங்களது அரசு 1.25 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்திருந்தால் இந்த வீடுகளை கட்டி முடிப்பதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகியிருக்கும்” என்று கூறியுள்ளார்.

Share