நெடுஞ்சாலை பணிகள் விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுப்பியுள்ள நியாயமான கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூற, தி.மு.க-வின் டி.ஆர்.பாலு மறுப்பது ஏன்? என, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும், மாநில நெடுஞ்சாலைத் துறைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் கூட புரியாதவராக இருக்கிறார். ஆப்பிளுக்கும் பேரிக்காய்க்கும் வித்தியாசம் தெரியாதவராக முதல்வர் உள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரது அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சொந்தக் கட்சித் தொண்டர்களுக்கு ரத்தக்கண்ணீர் வரும் வகையில் சுயநல அரசியல் செய்பவர் டி.ஆர்.பாலு. கனிகளுக்கிடையே வேறுபாடுகளைக் கண்டறியும் வித்தைகளைக் கரைத்துக்குடித்தவர் போலிருக்கிறதே என்று தோன்றும் வகையில் ஆப்பிள், பேரிக்காய் என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டுள்ளார். டி.ஆர்.பாலு, தன் மகன் நடத்திவந்த ‘கிங் கார்ப்பரேஷன்’, ‘கிங் கெமிக்கல்’ நிறுவனத்துக்காகத் தன் சொந்த மாவட்டத்தின் இயற்கை வளங்களையும், தேசத்தின் சொத்துக்களையும் சூறையாடியதை மறக்க முடியாது.

மாநில நெடுஞ்சாலைப் பணிகளைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை தெரியாமல், அறியாமல் ஆப்பிள், பேரிக்காய் என அரைவேக்காட்டு அறிக்கைகளை வெளியிடுகிறார். தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு பணி மேற்கொள்ளப்படும்போது, (evaluation commitee) (stering commitee) ஆகிய இரண்டு கமிட்டிகள் டெண்டர் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்கிறது. அது சரியாக இருந்தால் மட்டுமே உலக வங்கிக்கு அனுப்பி, பிறகு டெண்டர் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு குழுக்கள் தான் முடிவு செய்கிறது, அப்படியிருக்கும் போது, அந்தத் துறை அமைச்சராக இருக்கும் முதலமைச்சரை எப்படி தொடர்பு படுத்த முடியும்.

டெண்டர் தொடர்பான கோப்புகள் முதலமைச்சருக்கு வராத போது, எப்படி அவர் மீது குற்றம் சாட்ட முடியும்? 2006-ஆம் ஆண்டு, பாலு மத்திய அமைச்சராக இருந்த போது, சேலம் – குமாரபாளையம் நான்கு வழிச்சாலை திட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைப்பதற்கு 8.78 கோடி செலவாகியது எப்படி? என்று முதல்வர் கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க முடியாத டி.ஆர்.பாலு, ஆப்பிளுக்கும் பேரிக்காய்க்கும் முடிச்சு போடுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Share