நீலகிரியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியின் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் மற்றும் பொதுச்செயலாளர் வசந்தராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் வினோஜ். “தமிழகத்தில் 67 ஆயிரம் பூத்துகளுக்கு இளைஞரணி சார்பில் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது. கரூர், பொள்ளாச்சியில் கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டு நீலகிரியில் கூட்டத்தை நடத்தியுள்ளோம். பா.ஜ.க-வின் திட்டங்கள் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெறுவதால் பல கல்லூரி மாணவர்கள் கட்சியில் சேருகின்றனர்” என்றார்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில்: “விலையை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ₹5 குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களின் அரசுகள் ஏன் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கேள்வியை எழுப்பினார்.

மோடியின் ஆட்சியில் பெரிய குறை ஏதும் இல்லாததால், காங்கிரஸ் கட்சி வீணாக ரபேல் குற்றச்சாட்டை முன்வைக்கிறது. தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை தங்களுடைய திட்டம் என்று மக்களிடம் எடுத்து செல்கின்றது. இது குறித்து பிரதமரிடம் கூறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது முழு கவனம் 67 ஆயிரம் பூத் கமிட்டிக்கும் பொறுப்பாளர்களை நியமிப்பதில் மட்டுமே என்றார்.

Share