சிறப்பு கட்டுரைகள்

சதி வலையில் வீழ்த்தப்பட்ட தமிழன்.. சாவிலிருந்து மீண்டு வந்து இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் படைத்த சரித்திரம், துரோக வரலாறு ஒரு பார்வை!

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதான சதி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்ற கேரள அரசு அவருக்கு ₹50 லட்சம் இழப்பீடை வழங்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றியவர் நம்பி நாராயணன். இவர், மேலும் இரு விஞ்ஞானிகள் உட்பட ஐந்து பேர், 1994-ல், விண்வெளி ஆராய்ச்சி திட்டம் குறித்த ரகசிய ஆவணங்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நம்பி நாராயணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனை சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. விசாரணையில் சதி திட்டம் நடக்கவில்லை என சி.பி.ஐ தெரிவித்தது. கடந்த செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் நம்பி நாராயணனுக்கு ₹50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ₹50 லட்சத்திற்கான காசோலையை நம்பி நாராயணனிடம் முதல்வர் பினராயி விஜயன் ஒப்படைத்தார்.

யார் இந்த நம்பி நாராயணன்?

பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி. பிறந்தது நாகர்கோவிலில். பள்ளி படிப்பும் அங்கேயே முடித்தார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்ரிலூயில் 1964-ல் பட்டம், 1966-ல் திருவனந்தபுரத்தில் ‘இஸ்ரோவில்’ விஞ்ஞானியாக பொறுப்பேற்றார். விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், அப்துல் கலாம் போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் பணிபுரிந்தவர். நமது ‘கிரையோஜெனிக்’ ராக்கெட் தொழில்நுட்பத்திற்கு அடிகோலியவர். ராக்கெட்டில் திரவ எரிபொருள் பயன்பாடு குறித்து ஆராய்ச்சிகள் செய்தவர். கைதாகும் போது ‘கிரையோஜனிக்’ தொழில்நுட்ப இயக்குனராக இருந்தார்.

அப்துல் கலாம் இடத்தில் நம்பி நாராயணன்

அது விண்வெளித் துறையில் இந்தியா அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்த ஆரம்ப நாட்கள். அந்தத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களித்தவர்களில் முக்கியமான இருவர் தமிழர்கள். இன்று இந்தியா அந்தத் துறையில் அடைந்திருக்கும் வானளாவிய வெற்றிக்கு அடித்தளம் அமைத்த பேராசிரியர் சதீஷ் தாவன் நேரடியாக அவர்களுக்குப் பயிற்சி அளித்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். அந்த இரண்டு தமிழர்களில் ஒருவர் அப்துல் கலாம். இன்னொருவர் நம்பி நாராயணன். கலாம் திடப் பொருள்களை எரிபொருளாகக் கொண்டு ராக்கெட்களை செலுத்துவது குறித்து ஆராய்ந்து கொண்டிருந்த போது, நம்பி திரவ எரிபொருட்களைப் பயன்படுத்தும் ராக்கெட் என்ஜின்களை உருவாக்குவதில் இறங்கியிருந்தார்.

அவர் தனது குழுவினருடன் சேர்ந்து உருவாக்கிய என்ஜின்கள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன(அவர் அந்த என்ஜின்களுக்கு விக்ரம் சாராபாய் நினைவாக விகாஸ் என்று பெயர் வைத்தார்) 2008ம் ஆண்டு சந்திரனுக்கு அனுப்பப்பட்ட பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் கூட இந்த ‘விகாஸ்’ பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

உலக அளவில் இந்தியா தலைநிமிரக் காரணமாக இருந்த இந்த விஞ்ஞானி வார்த்தைகளால் எளிதில் விவரிக்க முடியாத அவமானங்களையும் மனவேதனையையும் சந்திக்க நேர்ந்தது. காரணம்? அவர் மீது புனையப்பட்ட ஒரு பொய் வழக்கு.

ஏன் அந்தப் பொய் வழக்கு? அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு சர்வதேச சதி, கேரள அரசியலில் நிலவிய கோஷ்டிப்பூசல், காவல்துறை அதிகாரி ஒருவர் மீது ஒரு பத்திரிகைக்கு இருந்த வன்மம், அதிகாரிகளுக்கிடையேயான ஈகோ மோதல்கள் இவற்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஆட்டம் காட்டிய அமெரிக்கா

விண்வெளி என்பது விஞ்ஞான சாதனைகளுக்கான இடம் மட்டுமல்ல, அதற்குப் பின்னே தொலைத் தொடர்பு, தொலைக்காட்சி, கைபேசி என்ற துறைகளைச் சார்ந்த ஒரு பெரிய வணிகம் இருக்கிறது. 1970-களில் கிடுகிடுவென வளர்ச்சி காணத் துவங்கியிருந்த இந்தத் துறைகளைச் சார்ந்த இந்த வணிகமும் விரைவாக வளர்ச்சி காணும் வாய்ப்புக்களைக் கொண்டிருந்தது. 1970-ல் 7,700 கோடி டாலர்கள், 2000-ல் 12,000 கோடி டாலர்கள், 2010-ல் 30,000 கோடி டாலர்கள் என வளர்ந்து கொண்டிருந்த்து அந்த வணிக வாய்ப்பு.

ஆனால் இந்த வாய்ப்பு பூமியிலிருந்து 36,000 கீ.மீ. உயரத்தில் இருந்தது. புவியோடு இணைந்த சுற்று வட்டப் பாதை(Geo synchronous orbit) என்பது அந்தத் தொலைவில் இருந்தது. அதை எட்ட ராக்கெட்களுக்கு சக்தி வாய்ந்த என்ஜின்கள் தேவை. அதைக் கைவசம் வைத்திருந்த ஐந்து நாடுகள், – அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜப்பான் இந்த விண்வெளிச் சந்தையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. அடுத்தவர் யாரும் நுழைந்துவிடாதபடி அந்தச் சந்தையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

இந்தியா இந்தச் சந்தையில் அடியெடுத்து வைக்க ஆசைப்பட்டது. இதற்குத் தேவை கிரையோஜெனிக் என்ஜின்கள்(கிரையோஜெனிக் என்ஜின் என்பது வாயுக்களை திரவமாக்கி அவற்றைக் குளிர்ந்த நிலையில், மைனஸ் 150 டிகிரி செல்சியஸ்க்கும் கீழ் வைத்திருந்து அவற்றை எரிபொருளாகப் பயன்படுத்துபவை) அந்த க்ரையோஜெனிக் தொழில்நுட்பத்தை வாங்க இந்தியா சர்வதேச அளவில் டெண்டர் கோரியது. அமெரிக்கா 950 கோடிக்கும், பிரான்ஸ் 650 கோடிக்கும் ரஷ்யா 235 கோடிக்கும் அந்த தொழில்நுட்பத்தைக் கொடுக்க முன்வந்தன. இந்தியா ரஷ்யாவோடு ஒப்பந்தம் போட்டது. இதனால் எரிச்சலடைந்த அமெரிக்கா ரஷ்யாவின் கையை முறுக்கத் தொடங்கியது. அது சோவியத் யூனியன் உடைந்து 15 நாடுகளாகச் சிதறியிருந்த நேரம். (1992) அமெரிக்க அதிபர் சீனியர் ஜார்ஜ் புஷ், ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ஸ்டினுக்கு நீங்கள் இந்தியாவிற்குக் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை விற்றால் உங்களை ஒதுக்கி வைப்போம் என மிரட்டி கடிதம் எழுதினார். மிரட்டலுக்குப் பணிந்த ரஷ்யா தொழில்நுட்பத்தைக் கொடுக்காமல் பின்வாங்கியது.

இந்தியா திடுக்கிட்டது. தொழில்நுட்பம் கிடைக்காவிட்டால் பரவாயில்லை, முதலில் நான்கு என்ஜின்களை அரசின் மூலமாக இல்லாமல் ஒரு தனி நிறுவனம் மூலம் வாங்குவோம் பின் அந்த நிறுவனம் அது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் இஸ்ரோவிற்கு கொடுக்கட்டும் என திட்டமிட்டது இந்தியா, அதே நேரம் அந்தத் தொழில்நுட்பத்தில் தானே தேர்ச்சியடையும் நோக்கத்தில் இஸ்ரோவில் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்திற்கென ஒரு தனிப் பிரிவைத் துவக்கியது. ஏற்கனவே விகாஸ் என்ஜினை வெற்றிகரமாகத் தயாரித்துக் கொடுத்திருந்த நம்பி நாராயணனை அந்தத் திட்ட இயக்குநராக நியமித்தது.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த, இந்தியா விண்வெளித்துறையில் வளர்ச்சியடைவதை விரும்பாத, அமெரிக்கா இந்தியாவின் கிரையோஜெனிக் திட்டத்தை முடக்க சதி வலையைப் பின்ன ஆரம்பித்தது.

தலைமேல் ஏறிய ஈகோ யுத்தம்

எந்த நிறுவனத்தைப் பயன்படுத்தி என்ஜின்களைப் பெறலாம் என்பதைத் தீர்மானிக்கப் பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது. குழுவில் இஸ்ரோவின் விஞ்ஞானிகளும், மத்திய அரசின் விண்வெளித்துறையச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தார்கள். இந்த வாய்ப்பைப் பெற MTAR, KELTEC என்ற இரண்டு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி. MTAR நிறுவனத்தை சேர்ந்த ரவீந்திர ரெட்டி, விண்வெளித் துறையால் நிர்வகிக்கப்பட்டு வந்த ஆண்ட்ரிக்ஸ் காப்பரேஷன் என்ற பொதுத்துறை நிறுவனத்திலும் இயக்குநராக இருந்ததால், அவரது நிறுவனத்திற்கு ஆதரவாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நிர்பந்தித்துக் கொண்டிருந்தார்கள். இஸ்ரோவின் விஞ்ஞானி சசிக்குமாருக்கு இது எரிச்சலாக இருந்தது. இந்தக் கருத்து வேறுபாடுகளால் கமிட்டி முடிவெடுக்காமல் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தது. சீக்கீரமாக முடிவெடுங்கள் என்று இஸ்ரோ தலைவரின் கடிதம் வந்ததையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் விண்வெளித் துறையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் சசிக்குமாருக்குமிடையே பகிரங்கமாக மோதல் வெடித்தது. ஒரு கட்டத்தில் “உனக்கு டெக்னாலஜியைப் பற்றி என்ன தெரியும்?” என்று ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் சீறினார் சசிக்குமார். “நீ டெக்னாலஜியில பெரிய கொம்பனா இருக்கலாம், ஆனா உனக்கு முடிவு எடுக்கத் தெரியுமா? அது தெரியாததுனால தானே இந்த புராஜெக்ட் இப்படி இழுத்துக்கிட்டு கிடக்கு” என்று பதிலுக்குக் குரலை உயர்த்தினார் ஐ.ஏ.எஸ் அதிகாரி.

கடைசியில் KELTEC நிறுவனத்திடம் வேலையை ஒப்படைப்பது என முடிவாயிற்று. ஈகோ அடிபட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி, பழிவாங்க சரியான சமயத்திற்காகக் காத்திருந்தார்.

அறைக் கதவைத் தட்டும் சப்தம் கேட்டுக் கதவைத் திறந்தார் மரியம் ரஷீதா. கதவுக்கு வெளியில் இன்ஸ்பெக்டர் விஜயன் நின்று கொண்டிருந்தார்.

“நீங்கள் அளித்த விண்ணப்பம் தொடர்பாக ஒரு சிறு விசாரணை நட்த்த வேண்டியிருக்கிறது. அது ஒரு ஃபார்மலிட்டி” என்றார் இன்ஸ்பெக்டர் விஜயன்.

“வாருங்கள்” என்று உள்ளே அழைத்தார் ரஷீதா.

மரியம் ரஷீதா மாலத்தீவைச் சேர்ந்தவர். மாலத் தீவைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியா வர விசா தேவையில்லை. ஆறு மாத இடைவெளியில், ஒவ்வொருமுறையும் மூன்று மாதங்கள் தங்கலாம். அதற்கு மேல் தங்க வேண்டுமானால் காவல்துறையின் அனுமதி பெற வேண்டும். தன் குடும்ப நண்பர் ஒருவரின் மகளின் சிகிச்சைக்கு உதவ வந்திருந்த ரஷீதாவின் மூன்று மாதக்கெடு முடிய இன்னும் ஒரு மாதம் இருந்தது. அதற்கு மேலும் தங்க வேண்டியிருக்கும் என்பதால் முன் கூட்டியே ரஷீதா விண்ணப்பித்திருந்தார்.

“உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் விஜயன்.

“குடும்பம்? நான் விவாகரத்தானவள்” என்றார் ரஷீதா.

புருவத்தை உயர்த்தி ஒருமுறை அவரை ஏறிட்டுப் பார்த்தவர் எழுந்து நடந்து கொண்டே கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். பேசிக் கொண்டே ரஷீதாவை மெல்ல நெருங்கி, அவரது தோளில் கை வைத்தார். திடுக்கிட்ட ரஷீதா திரும்பிப் பார்க்கும் நேரத்தில் கையை மெல்லக் கீழிறக்கினார்.

“வெளிய போ!” எனச் சீறினார் ரஷீதா. “நான் ஐ.ஜி-க்கிட்ட உன்னைப் பற்றிப் புகார் செய்தால் என்னாகும் தெரியுமா?” என்றார் கோபம் பொங்க.

அது மிரட்டலுக்காகச் சொன்ன வார்த்தை இல்லை என்பது விஜயனுக்குத் தெரியும். ஏனெனில் தன் தங்கும் காலத்தை நீட்டிக்க ரஷீதா தனது நண்பர் இஸ்ரோ சசிக்குமார் மூலம் ஐ.ஜி ஸ்ரீவஸ்தவாவைத்தான் முதலில் அணுகியிருந்தார். அவர் சொல்லித்தான் விஜயனை இரு தினங்களுக்கு முன் சந்தித்து தன் விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டு வந்திருந்தார்.

மனதில் கறுவிக் கொண்டே அறையை விட்டு வெளியேறினார் விஜயன். ரஷீதா ஐ.ஜியை சந்தித்து முறையிடுவதற்கு முன் அவரை மடக்கிவிட வேண்டும் என நினைத்தார். ஹோட்டலில் இருந்த போனில் இருந்து அவர் யாரோடெல்லாம் பேசியிருக்கிறார் எனப் பார்த்தார். ஒரு நம்பருக்கு சில முறைகள் பேசியிருப்பதைக் கண்டு அந்த நம்பர் யாருடையது என ஆராய்ந்தார். அது இஸ்ரோ சசிக்குமாருடையது. அவர் நம்பி நாராயணனின் உதவியாளர். ரஷீதா ஒரு அயல் நாட்டுப் பெண். தொடர்பு இருப்பது இந்திய விஞ்ஞானியுடன். எப்படி முடிச்சுப் போடுவது என்று யோசித்தார்.

விஞ்ஞானியிடம் ராணுவ ரகசியங்களை வாங்க வந்த பாகிஸ்தான் உளவாளி, கைது என்று சில பத்திரிகைகளுக்கு செய்தியை கசிய விட்டார். உண்மையில் ரஷீதா அப்போது கைது செய்யப்பட்டிருக்கவில்லை.

நிர்வாணப்படுத்தியெல்லாம் சித்திரவதை

சர்வதேச அரசியல், இந்திய அரசியல், மாநில அரசியல், அதிகாரிகளுக்கிடையேயான அரசியல், பத்திரிகைக் குடும்ப அரசியல், என்ற அரசியல் புயல்களிடையே அகப்பட்டுக் கொண்ட தோணியானார் நம்பி நாராயணன். அவர் சிக்கவைக்கப்பட்டதற்குக் காரணம் அவர் கிரையோஜெனிக் திட்டத்தின் இயக்குநராக இருந்ததுதான். இந்தப் பொய் வழக்கில் கிரையோஜெனிக் திட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்த பலரும் தொடர்புபடுத்தப்பட்டனர். கடைசியில் அமெரிக்கா நினைத்ததுதான் நடந்தது.

நம்பி கைது செய்யப்பட்டதையடுத்து கிரையோஜெனிக் திட்டம் தடுமாறியது. விஞ்ஞானிகள் மனச் சோர்வடைந்தனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகப்போகிறது. நாம் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. நாமே தயாரித்த கிரையோஜெனிக் என்ஜினைப் பயன்படுத்தி முதன் முதலாக மே 2010-ல் நாம் அனுப்பிய GSLV D3 பரிதாபகரமாகத் தோல்வியைத் தழுவியது. அதற்கு இரண்டாண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மே 13-ம் தேதி நாம் இன்னொரு கிரையோஜெனிக் என்ஜினைத் தயாரித்து GSLV D5ஐ அனுப்பி வெள்ளோட்டம் பார்த்தோம். அந்த என்ஜின் 200 செகண்ட்கள் மட்டும் வேலை செய்தது.

இந்தப் பொய் வழக்கை எதிர்கொண்டபோது நம்பி சந்தித்த கொடுமைகள் ஏராளாம். நாட்டின் ரகசியங்களை எதிரிக்கு விற்ற கைக்கூலி என சமூகம் அவரை ஏளனமாகப் பார்த்தது. அவர் குடும்பத்தினர் வெளியே செல்லும் போதெல்லாம், அவர்கள் காதுபட, ஏளனப் பேச்சுக்களையும், குத்தல் மொழிகளையும் மக்கள் பேசினர். அவர்களால் கோயிலுக்குக் கூடப் போக முடியவில்லை. இதனால் நம்பியின் மனைவி பெரும் மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளானர். நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது மூஞ்சியில் குத்து விழுந்தது. முகத்தில் காரி உமிழ்ந்தார்கள். லாக்கப்பில் அவரை நிர்வாணப்படுத்தி சித்தரவதை செய்தார்கள்.

தற்கொலை முயற்சி

விஞ்ஞானியான நான் ஏன் சிறைக்குள் இருக்கிறேன் என்பது தெரியாமல் நம்பி நாராயணன் தவித்தார். தன்னை வீழ்த்திய சதி பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. ‘இஸ்ரோவும்’ தன் விஞ்ஞானியை கை விட்டது. ‘பெரியாறு அணைக்கு ஆபத்து என்பது போன்று’ ஒன்றும் இல்லாத பிரச்னைகளை ஊதி பெரிதாக்கும் கேரள பத்திரிகைகள் சில,  நம்பி நாராயணனின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அவதூறு ஏற்படுத்தி அவரை தேசதுரோகி என்றும் உளவாளி என்றும் எழுதின. மிகவும் ‘சென்சின்ட்டிவாக’ பார்க்கப்பட்ட வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. ஐம்பது நாள் சிறைவாசத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்த நம்பி நாராயணன், தற்கொலை முயற்சியில் இறங்கினார். “நாட்டிற்காக உழைத்தும், நல்ல பெயரை இழந்து, உளவாளி, தேச துரோகி என ஆன பின்பு வாழ பிடிக்கவில்லை” என்று பின்னர் எழுதிய சுயசரிதை நூலான ‘ஓர்மகளுட பிரமணபதம்'(நினைவுகளின் விண்வெளி) என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தந்தையின் தற்கொலை முயற்சியை அறிந்த மகள், “நீங்கள் ஒரு தேசதுரோகியாக இறந்து விட்டால், இந்த சமூகம் எங்களை தேசதுரோகியின் வாரிசு என்றே பார்க்கும்; எனவே நீங்கள் குற்றமற்றவர் என்று நிரூபித்து விட்டு தற்கொலை செய்யுங்கள்” என்று கூறி கதறியிருக்கிறார். அதில் பிறந்த வைராக்கியம், நம்பியை, நம்பிக்கையுடன் வாழ வைத்தது. இறுதியில் சி.பி.ஐ., விசாரித்து இது பொய் குற்றச்சாட்டு என்று வழக்கை முடித்தது. ஏன் நம்பி நாராயணன் சிக்க வைக்கப்பட்டார், அவருடன் கைதான வெளிநாட்டு பெண்கள், இஸ்ரோ அதிகாரிகள் எல்லாம் ராக்கெட் ரகசியங்களை திருடினார்கள் என்று ஏன் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்பதற்கு எந்த விளக்கங்களும் வெளியாகவில்லை.

காங்கிரஸ் கட்சியின் கொடூர முகம்

நம்பி நாராயணன் ஒரு அதிகாரி; ஆனால் அவர் கைது செய்யப்பட்ட போது கேரளாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், அரசியல் சதிகள், காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதல்கள் இந்திய அரசியலில் என்றும் மாறாத வரலாற்று பதிவு. அதற்கு காரணங்கள் பல. கைதான மாலத்தீவு பெண்ணிற்கு, இந்தியாவில் அதிக நாட்கள் தங்க சலுகை காட்டினார் என தனது மேலதிகாரியான ஐ.ஜி., ரமண்ஸ்ரீவத்சவா மேல் குற்றஞ்சாட்டினார் வழக்கை விசாரித்த கேரள போலீஸ் டி.ஐ.ஜி., சி.பி.மாத்யூஸ். அப்போதய முதல்வர் கருணாகரனுக்கு நெருக்கமானவர் ரமண்ஸ்ரீவத்சவா. எனவே, கருணாகரனுக்கும் ரகசிய ஆவணங்களை வெளிநாட்டிற்கு தந்ததில் தொடர்பு இருக்கிறது என்று குற்றஞ்சாட்டியது காங்கிரசில் அந்தோணி தலைமையிலான கோஷ்டி. பத்திரிகைகளும் கருணாகரனை தொடர்பு படுத்தி எழுதின. அப்போது பிரதமராக இருந்தவர் காங்கிரசின் நரசிம்ம ராவ். தனக்கு போட்டியாளராக இருக்கும் ‘சீனியர்’ கருணாகரனை ஓரங்கட்ட சரியான சந்தர்ப்பம் தேடி காத்திருந்த ராவ், முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு அவரை கேட்டுக்கொண்டார்.

கருணாகரன் மறுக்கவே, அந்தோணி, உம்மன் சாண்டி ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்க அவர் ராஜினாமா செய்தார். இப்படி ஒரு முதல்வரையே அரியாசனம் இழக்க வைத்தது இந்த ஜோடிக்கப்பட்ட வழக்கு. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கருணாகரன் மகள் பத்மஜா இவ்வாறு கருத்து சொன்னார் “நம்பி நாராயணனுக்கு நீதி கிடைத்தது; ஆனால் என் அப்பா ‘தேசதுரோகி’ என்ற பட்டத்துடன் மரணமடைந்து விட்டார். அதற்கு காரணமான ஐந்து பேர்(பெயர்களை கூறவில்லை) இன்னும் காங்கிரசில் முக்கிய இடத்தில் உள்ளனர்”, இது கேரள அரசியலில் பெரும்புயலை கிளப்பி உள்ளது. ஏற்கனவே கோஷ்டி பூசலில் தவிக்கும் கேரள காங்கிரசில் இது புதிய குழப்பம் ஆனது தனிக்கதை.

17 வருட சட்டப்போராட்டம்

நம்பி நாராயணன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. சி.பி.ஐ விசாரணையில் இவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால், இவர் அதன்பின் மன உளைச்சலில் கஷ்டப்பட்டுள்ளார். பணி உயர்வும் இவருக்கு அளிக்கப்படவில்லை. அதன்பின் 2001-ல் இவர் ஓய்வும் பெற்றார். இந்த நிலையில் ஓய்வு பெற்றதோடு இவர் தன்னை கைது செய்த, வழக்கு தொடுத்த அதிகாரிகள் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த 17 வருடமாக விசாரணை நடந்தது வந்த கடந்த செப்டம்பர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ₹50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறை உயரதிகாரிகள் சி.பி.மேத்யூஸ், விஜயன் ஆகியோரும் மற்ற விசாரணை அதிகாரிகளும் இந்த பணத்தை அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 17 வருட சட்ட போராட்டம் நல்ல முடிவை எட்டியுள்ளது. அதேபோல், இந்த வழக்கில் தவறாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் படியே சமீபத்தில் நம்பி நாராயணனுக்கு ₹50 லட்சத்தை கேரளா அரசு வழங்கியுள்ளது.

இறுதியாக…

“உண்மை என் பக்கம் தான் இருக்குனு எனக்கு தெரியும். இன்னைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்கிற நம்பிக்கை இருந்தது. ராக்கெட் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இருந்தவன் நான்… எந்த உதவியும் இல்லாமல் தன்னந்தனியாக போராடி அதில் வெற்றி பெற்றவன்.. போராட்ட குணம் எனக்கு இயல்பிலேயே உண்டு.. என் பக்கம் இருந்த நியாயமும் உண்மையும்தான் எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. உண்மையின் பலமும் இறைவனின் அருளும் தான் என்னை இன்று தலைநிமிர செய்திருக்கிறது” என்று அழுத்தமான குரலில் பேசினார் நம்பி.

அரசியல் போட்டிகளிலும், ஈகோ யுத்தங்களிலும் இடையில் சிக்கிக் கொண்டு துன்புறும் அப்பாவி இந்தியர்கள் நம்பியைப் போல பலர் இருக்கலாம். இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நம்பியைப் போன்ற மன உறுதியும் தளராத நம்பிக்கையும் இருக்குமா? அப்படி இல்லாதவர்களின் நிலை என்ன? நாம் அவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம்? எதற்கெடுத்தாலும் ஊழல் என்று கடைவிரிக்கும் காங்கிரஸ் இப்படித்தான் பல அறிவுஜீவிகளை அடக்கி தன் இரகசியம் வெளியே தெரியாமல் இந்தியாவை உலக நாடுகளுக்கு கூறு போட்டு விற்றுள்ளது. இனியாவது உண்மை நிலை உணர்ந்து மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும்.

References: Articles from Indian Express, Dinamani, Vikatan, IE Tamil, Dinamalar & Writer Malan’s artilcle.

Tags
Show More
Back to top button
Close
Close