செய்திகள்

1.7 கோடி தமிழக குடும்பங்கள் பயன் பெரும் ஆயுஷ்மான் பாரத் : மோடி அரசின் வரப்பிரசாதம்

மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 1.7 கோடி குடும்பத்தினர் பயனடைவார்கள் என்று தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் மருத்துவர் திரு. டி.எஸ். செல்வ விநாயகம் கூறினார்.

சென்னையில், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தைச் சார்ந்த மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் நடத்திய ஒருநாள் பயிலரங்கில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இந்தத் தகவலை தெரிவித்தார்.

மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அங்கமான இசை நாடகப் பிரிவு  கலைஞர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து மக்களிடையே விளக்குவது தொடர்பான பயிலரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் திரு செல்வ விநாயகம், இந்தத் திட்டத்தின்கீழ், மருத்துவ காப்பீட்டு பயன்களைப் பெறுவதற்கு தனியாக அடையாள அட்டை பெறவேண்டிய அவசியம் இல்லை என்றும், தமிழகத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையையே பயன்படுத்தலாம் என்றும், ஆதார் அடையாள அட்டையையும் பயன்படுத்த முடியும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் சுமார் 600 தனியார் மருத்துவ மனைகளிலும், 250-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ மனைகளிலும் இந்தத் திட்டத்தின்கீழ், பயன்பெற இயலும் என்று கூறிய அவர், சுமார் ஆயிரத்து 500 வகையான சிகிச்சைகளை பெறுவதற்கு இந்த காப்பீட்டு திட்டம் அனுமதி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பத்திரிகை தகவல் அலுவலகம், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகங்களின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு. ஈ. மாரியப்பன், தமிழக அரசின் சுகாதாரத்துறையும், மத்திய அரசும் கூட்டாக இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகக் கூறினார்.

பிரதமர் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 77 லட்சம் ஏழை குடும்பங்கள் பயனடையும் என்று கணக்கிடப்பட்டிருந்த போதிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக ஏற்கனவே முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின்கீழ், பயன்பெற்று வரும் 1.7 கோடி ஏழை குடும்பங்களும் இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் பயன்பெற இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் பயன்பெறுவதற்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை உச்சவரம்பு ஏதுமில்லை என்றும், கடந்த 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமூகப் பொருளாதார சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆதாரமாகக் கொண்டு இந்தத் திட்டம் உரிய பயனாளர்களைச் சென்றடையும் வகையில் அமல்படுத்தப் படுவதாகவும் திரு மாரியப்பன் குறிப்பிட்டார்.

இந்தப் பயிலரங்கில் தமிழக அரசின் சுகாதாரத்துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் கார்த்திகா மற்றும் அனுஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Based on inputs from Press Information Bureau

Tags
Show More
Back to top button
Close
Close