சிறப்பு கட்டுரைகள்தமிழ் நாடு

ஓயாமல் உழைக்கும் ஓடந்துரை : உலகமே வியந்து பார்க்கும் ஒரு பசுமையான கிராமம்

நமது தேசத்தந்தையான மகாத்மா காந்தி எப்போதுமே கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தவர். அத்துடன் கிராமங்களுக்கு தன்னாட்சி உரிமை அளிக்கும் கிராம சுயராஜ்ஜியம் தொடர்பாக வலியுறுத்தி பேசி வந்தவர். அதற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது தமிழகத்தை சேர்ந்த ஒரு கிராமம். அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு, சுத்தமான சாலைகள், 100% வரி வசூல், பாதுகாப்பான குடிநீர் என்று ஆச்சர்யபட வைக்கின்றன இந்த அழகான கிராமம். அத்துடன் 850 வீடுகளில் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வீடுகளில் வசிக்கின்றனர்.

ஓயாமல் உழைக்கும் ஓடந்துறை:

கோவை மாவட்டத்தின் எல்லையாக, நீலகிரி மலைக்குக் கீழே, 12 குக்கிராமங்ளை உள்ளடக்கிய பசுமையான கிராம பஞ்சாயத்து தான் ஓடந்துறை. பத்து ஆண்டுகள் பஞ்சாயத்தின் தலைவராக இருந்த சண்முகம், கிராமம் முன்னேற வேண்டும் என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கியதன் விளைவாக, தேசிய அளவிலே முன்னோடி, முன்மாதிரி கிராமமாக திகழ்கின்றது ஓடந்துறை.

1996 தொடங்கி 2006 வரைக்கும் ஓடந்துறை பஞ்சாயத்து பொதுப் பஞ்சாயத்தாக இருந்திருக்கிறது. ஓடந்துறை கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக 1996 முதல் 2006 வரை முதல் பத்து வருடங்கள் சண்முகம் இருந்திருக்கிறார். 2006-இல் அந்த பஞ்சாயத்தை பெண்களுக்காக ஒதுக்கியதும், சண்முகம் ஒதுங்கிக் கொள்ள, அவரது மனைவியான லிங்கம்மாளை தலைவியாக தேர்ந்தெடுத்திருக்கின்றனர் கிராம மக்கள். கடந்த பத்து ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவராக தொடர்பவர் லிங்கம்மாள் சண்முகம்.
கணவன், மனைவி இருவருமாக இந்த கிராமத்தில் செய்திருக்கும் புதுமைகள், சாதனைகள் பலரையும் இந்த கிராமத்திற்கு வரவழைத்திருக்கின்றன.

பசுமை வீட்டில் படைத்த சரித்திரம்:

தமிழகம் முழுவதுமே பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதில் பயன்பெற அடிப்படை தகுதியாக சொந்த நிலம் வைத்திருக்க வேண்டும். இங்கு நிலம் இல்லாதவர்களுக்கு நிலத்துடன் வீட்டை சொந்தமாக்கிக் கொடுத்திருக்கிறார் லிங்கம்மாள். இங்கே தமிழக அரசுக்கு சொந்தமான பூமிதான நிலம் 3.22 ஏக்கர் இருந்திருக்கிறது. வருவாய் துறையிடம் பேசி, கிராம சபை தீர்மானம் மூலம் கிராமப் பஞ்சாயத்துக்கு அந்த நிலத்தை மாற்றி, அங்கு வீடுகளை கட்டியிருக்கிறார். தமிழக அரசின் சார்பில் 101 பசுமை வீடுகள் சோலார் மின் தொழில்நுட்பத்துடன் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் 101 பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப் பட்டிருக்கும் தமிழகத்தின் ஒரே பஞ்சாயத்து ஓடந்துறை மட்டுமே. அதுபோக இங்கு 850 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

நூறு சதவிகித கல்வியறிவு:

இந்த கிராமத்தில் நூறு சதவீதம் மாணவர்களும் கல்வி பெறுகிறார்கள். இடை நின்ற மாணவர் ஒருவர் கூட கிடையாது. மின்சாரத்தை மிச்சப்படுத்தும் சோலார் தெருவிளக்குகள், எல்.இ.டி. விளக்குகள் ஜொலிக்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் கிடைக்கிறது. தெருக்கள் தூய்மையாகப்பளிச்சிடுகின்றன. இதற்காக மத்திய, மாநில மற்றும் உலக நாடுகள்அளித்திருக்கும் விருதுகள் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தை அலங்கரிக்கின்றன.

அரசுக்கே மின்சாரம் விற்கும் சாதனை:

கடந்த ஐந்தாண்டுகளில் இவர்களது கிராம பஞ்சாயத்து செலுத்தியிருக்கும் மின் கட்டணம் சுமார் ₹1.20 கோடி என்கிறார்கள்! இதில் அதிசயமான விஷயம் இந்த பஞ்சாயத்தின் சார்பாக ஆண்டுக்கு 6.75 லட்சம் யூனிட் வீதம் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 67.50 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கிறார்கள். அதில் ஆண்டுக்கு 2.15 லட்சம் யூனிட் வீதம் கடந்த 10 ஆண்டுகளில் 21.5 லட்சம் யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். அதன் மூலம் சுமார் ₹65 லட்சம் வருவாய் கிடைத்திருக்கிறது. இப்போதும் இது தொடர்கிறது.

2001ஆம் ஆண்டில் இருந்து, 2006 ஆம் ஆண்டு வரை பஞ்சாயத்து நாற்பது லட்சம் ரூபாய் சேமித்துள்ளது. பின்னர் ஒரு கோடியே பதினைஞ்சு லட்ச ரூபாய் வங்கிக்கடன் வாங்கியுள்ளனர்.

2006-ம் ஆண்டு மே மாதம், ஓடந்துறை பஞ்சாயத்துக்குச் சொந்தமான காற்றாலையை உடுமலைப்பேட்டை பக்கமிருக்கும் மயில்வாடியில் நிறுவியுள்ளார்கள். இது வருடத்திற்கு 6.75 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கக் கூடியது. ஓடந்துறை கிராமத்தின் தேவை 4.5 லட்சம் யூனிட் மட்டுமே. ஆக மீதியை மின்சார வாரியத்துக்கு விற்கின்றனர். இதுவரை நாற்பது சதவிகித கடனை அடைத்து விட்டனர்.

உழைப்பு தொட்ட உச்சம்:

ராஜிவ்காந்தி தேசிய மக்கள் பங்களிப்பு குடிநீர் திட்டம் அறிமுகமான போது முதன்முதலில் மக்கள் பங்களிப்பு நிதியைக் கொடுத்தது ஓடந்துறை பஞ்சாயத்து. அதனை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு ஓடந்துறையில் வைத்தே தேசிய அளவிலான அந்தத் திட்டத்தின் தொடக்க விழாவை நடத்தியது. தொடர்ந்து டெல்லியில் நடந்த அந்த குடிநீர் திட்ட தேசிய மாநாட்டில் உரையாற்றினார்கள்.

உலகமே வியந்து பார்க்கும் ஒரு பசுமையான கிராமம் தனது முன்னேற்றத்தை அடுத்த படிக்கு எடுத்து செல்கிறது. நாம் இன்னமும் மத்திய மாநில அரசை குறைப் பேசி வருகின்றோம்.

Picture Courtesy : The New Indian Express

Tags
Show More
Back to top button
Close
Close