96 விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு முழு நீளக் காதல் கதை. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், நல்ல தரமான காதல் கதை. நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் அவர்களின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் 96.

விஜய் சேதுபதி தனது மாணவ மாணவியருடன் புகைப்படம் எடுக்கும் காட்சியுடன் திரைப்படம் துவங்குகிறது. மேலும் பல இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுக்க திட்டமிட்டவர்கள், தஞ்சையைக் கடந்து செல்ல நேரிடுகிறது. விஜய் சேதுபதியின் சொந்த ஊரான தஞ்சைக்குள் நுழைகிறார்கள். பிறகு flashback காட்சிகள் என செல்கிறது திரைப்படம்.

Advertisement

பள்ளிக்கூட விஜய் சேதுபதி த்ரிஷா கொள்ளை அழகு. பள்ளிக்கூட காட்சிகள் ஏன் முடிய வேண்டும்? அது தொடரலாமே? இந்த காட்சிகளை பார்க்கும் பொழுது, நம்மையே நாம் காண்பதைப் போல் அல்லவா உள்ளது? திரைப்படத்தின் மிகப்பெரிய பலமே, இயக்குனர் தேர்வு செய்த நடிகர்கள் தான்.

ராமச்சந்திரன், ஜானகி தேவி, சுபா, சதிஷ், முரளி என இவர்கள் தேர்வு செய்திருக்கும் நடிகர்கள், நாம் அன்றாடம் பார்க்கும் முகங்கள் தான். காதல் கொண்ட பிறகு தன்னால் ஜானகியுடன் இயல்பாக பேச முடியவில்லை, அண்ணின்னு முறை வைச்சே கூப்பிடு போன்ற வசனங்கள் அத்தனை அழகு. பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் இவர்களின் நடிப்பும் பிரமாதம்.

ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு விதமான சீருடை உண்டு. ஆனால் இவர்கள் தேர்வு செய்திருக்கும் blue and white(நீளம் மற்றும் வெள்ளை), தான் பெரும்பாலான பள்ளிகளில் சீருடை. நம்மை அறியாமல் நம் பள்ளி நாட்களுக்குச் சென்று விடுகிறோம்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும், அந்த பழைய காலத்து தொலைக்காட்சி, பள்ளியில் கரும் பலகையில்(black board)  தண்டி சத்யாகிரஹத்தைப்(Dandi march) பற்றிய குறிப்பு, cell biology பற்றிய குறிப்பு, total, present, absent (அதாவது மொத்தம் எத்தனை மாணவர்கள், எத்தனை பேர் விடுப்பு எடுத்திருக்கிறார்கள் என்ற கணக்கு) இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது, இயக்குனர் நம்மை காலத்தை கடந்து பின்னோக்கி பயணிக்க வைத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

நீங்கள் நினைக்கலாம், இவை எல்லாம் கதைக்கு எந்த விதத்தில் வலு சேர்க்கிறதென்று, ஆனால் ஆங்கிலத்தில் perfectionist என்று கூறுவார்கள். அதாவது அனைத்து விஷயங்களிலும் 100 விழுக்காடு சரியாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள். நம் இயக்குனர் பிரேமும் அப்படி பட்டவர் தான் போல. அவரின் கலைஞானம் இதோடு நின்று விடவில்லை. ஜானகி தேவி(பள்ளி வயது திரிஷா) அறிமுக காட்சியில் அவர் பாடும் பாடல். விபூதி மட்டும் போட்டு வைத்த ஒரு தெய்வீகமான முகம், எந்த ஒரு இசைக்கருவிகளும் இல்லாமல் அவர் பாடும் ‘புத்தம் புது காலை’ மனதை ஏதோ செய்கிறது. இளையராஜாவை இன்னும் 1000 தலைமுறைகள் கொண்டாடும். ஏனென்றால், இப்படி இசைக்கருவிகள் இல்லாமல் பாடி வசீகரப்படுத்தும் விதமான பாடல்களை அதிகம் கொடுத்தது இளையராஜா தான். ஒரு இளையராஜா பாடல் மட்டுமில்லை அங்கங்கே நிறைய பாடல்கள் வருகின்றன. இடைவேளைக்கு முன்பு பாடும் “தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ” பாடல் சொர்கத்துக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறது. 90-களில் இளையராஜா பாடல்கள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அந்த காலக்கட்டத்தை கடந்து வந்தவர்களுக்கு புரியும். இந்த காட்சிகள் அவர்களை வேறு உலகிற்கு அழைத்து செல்லும் என்பதில் துளி கூட சந்தேகமில்லை. இளையராஜாவிற்கு நன்றி என்று டைட்டில் கார்டு போட்டு ஆரம்பித்திருக்கும் இயக்குனருக்கு, இளையராஜா ரசிகர்கள் சார்பில் நன்றிகள். Hats off Mr.பிரேம்.

நடிப்பில் அனைவருமே பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். நரைத்த தாடியுடன் வரும் விஜய் சேதுபதி, முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் , அதிகம் அலட்டிக் கொள்ளாமல், அதே சமயம் உணர்வுகளை நமக்கு புரிய வைக்கும்படியும் நடித்திருக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் த்ரிஷா. அவர் ஒப்பனை ஆகட்டும், அவர் உடுத்தும் உடைகளாகட்டும் ஆடம்பரமில்லாத அழகு. ஒரு காட்சியில் அழுகிறார். இவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரம் இது என்று சொல்ல வைக்கும் நடிப்பு. இவரை விட்டால், யாரும் சிறப்பாக செய்து விட முடியாது என்று சொல்ல வைக்கும் நடிப்பு.

த்ரிஷாவின் கதாபாத்திரம் எத்தனை பேர் ஏற்பார்கள் என்பது நமக்கு தெரியவில்லை. திருமணமானவர், ஒரு குழந்தைக்கு தாய், தன் பள்ளிக்காதலனை நினைத்து உருகும் கதாபாத்திரம்.

ஒரு காட்சியில் என் கணவர் மிகவும் நல்லவர். நான் எதுவும் சொல்லாமலே என்னை புரிந்து கொள்கிறார், சந்தோஷமாக இல்லை என்றால் கூட நிம்மதியாக இருக்கிறேன் என்று பேசும் வசனம் யதார்த்தம். கலாச்சாரம் பற்றி நாமும் கூட 10 பக்கங்கள் கட்டுரை எழுதலாம். ஆனால் முதல் காதல் என்பது அவ்வளவு எளிதாக மறந்து விடக்கூடிய விஷயமில்லை. இதில் கணவனுக்கும் துரோகம் நினைக்காமல், காதலையும் மறக்க முடியாமல் ஒரு பெண். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? இந்த கதாபாத்திரம் ஒரு சிறிய நூலின் மேல் நடப்பதை போல கடினமான ஒன்று. இதைத் தாண்டி ஏதேனும் செய்திருந்தால், அதன் தன்மை கெட்டிருக்கும். ஆனால் சிறப்பாக செதுக்கி இருக்கிறார் பிரேம்.

நிஜத்தில், இது போல, ஒரு இரவு முழுக்க தங்கி, உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியுமா என்றால் முடியாது தான். நிறைய பேருக்கு, ஒரு முறையாவது தன் பழைய காதலனிடமோ காதலியிடமோ, “என்ன நடந்தது. என்னைப் பற்றி என்றைக்காவது நினைத்திருக்கிறாயா? நீயும் என்னை காதலித்தாயா? எங்கே சென்று விட்டாய்?” போன்ற கேள்விகளை கேட்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். அந்த தேடலைத் தான் பிரேம் அவர்கள், திரையில் கவித்துவமாக காட்டியிருக்கிறார்.

தேவதர்ஷினி, பக்ஸு, ஆடுகளம் முருகதாஸ் என அனைவருமே கலக்கி இருக்கிறார்கள். “இப்போ வந்து பேசுங்கடி, ஸ்கூல் படிக்கும் போது பேசினா மூஞ்சை திருப்பிகிட்டு போயிடுங்க” என்று முருகதாஸ் பேசும் வசனம் நல்ல நகைச்சுவை.

கோவிந்த் வசந்த் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டிலும் அசத்தி இருக்கிறார். பாடல்களாகட்டும் பின்னணி இசை ஆகட்டும் மனதை வருடும் இசை.

இது போன்ற படங்கள் இதற்கு முன்பு வந்ததே இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்கள் ஓரளவுக்கு இதே போன்ற கதைக்களத்தை கொண்டவை தான். ஆனாலும் 96 அழகு.

இயக்குனர் பிரேமின் 96 வெள்ளித்திரையில் ஒரு அழகான கவிதை என்றே சொல்ல வேண்டும்.

பின்குறிப்பு: இந்த விமர்சனத்திற்காக எந்த ஒரு சன்மானமும் படக்குழுவிடமிருந்தோ வேறு யாரிடமிருந்தோ பெறப்படவில்லை. தமிழ் கதிர் மற்றும் அதன் விமர்சகர்கள் பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் திரைப்படக்குழு உறுப்பினர்களுடன் எந்த வணிக உறவு கொண்டிருக்கவில்லை.

Share