புது டெல்லியில், மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான, தர்மேந்திர பிரதான் தமிழகத்தில் மூன்று இடங்கள் உட்பட, நாடு முழுவதும், 55 இடங்களில், ஹைட்ரோ கார்பன் எடுக்க, வேதாந்தா நிறுவனம், ஓ.என்.ஜி.சி., எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கு அனுமதி வழங்கிட திட்டமிட்டு, தமிழகத்தில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் – காவிரி டெல்டா பகுதியில், இரண்டு இடங்களில் வேதாந்தா நிறுவனத்துக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்து கொள்ளும் விழாவில் கையெழுத்திட்டுள்ளார். பொதுவாக தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து மட்டுமே அரசியல் செய்து வரும் தி.மு.க, இதற்கும் அபாய ஓலமிட்டு வருகிறது. இத்திட்டம் குறித்த பின்னணியும், தி.மு.க-வின் தில்லு முல்லு பற்றியும் இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

ஹைட்ரோகார்பன் என்றால் என்ன?

இந்த கேள்விக்கு பதிலளிக்க நீங்கள் கொஞ்சம் உங்கள் பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் பாடங்களை இப்போது நினைவுக்கு கொண்டு வர வேண்டும். ஹைட்ரோகார்பன் என்பது ஹட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்த ஒரு கனிம கலவையாகும். இந்த ஹைட்ரோகார்பன்களில் ஆல்கேன் (alkanes), ஆல்கீன் (alkenes), ஆல்கைன் (alkenes), சைக்ளோ ஆல்கைன் (cycloalkanes) என 14 வகைகள் உள்ளன.   .

சுருக்கமாக சொல்வதென்றால் மீத்தேன் வகை வாயுக்களின் பொதுப் பெயரே ஹைட்ரோ கார்பன் என்று அழைக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டவற்றில் ஆல்கேன் என்பது ஒற்றை பிணைப்பு வகையாகும். இதன் சூத்திரம் CnH2n+2. நாம் குறிப்பிடும் மீத்தேன் இவ்வகையை சார்ந்தது தான். இதன் கெமிக்கல் பார்முலா  CH4 ஆகும். இது குரூட் ஆயில், இயற்கை எரிவாயு மற்றும் சாண எரிவாயுவில் காணப்படும். இதற்கு சதுப்பு நில வாயு என்ற பெயரும் உண்டு. எரியும் பொழுது மீதமின்றி முழுதாக எரிந்து விடும் தன்மையும் இதற்குண்டு. இரவு நேரங்களில் சதுப்பு நிலப்பகுதிகளில் இந்த வாயு வெளிப்படுவது பார்ப்பதற்கு ‘திடீர்’ என்று ஒரு தீப்பந்தம் எரிவது போல் இருப்பதனால் இதனைக் ‘கொள்ளிவாய்ப் பிசாசு’ என்று அழைப்பது உண்டு.

எப்படி உருவாகிறது மீத்தேன்?

இது மீத்தேனின் வேதியியல் அமைப்பு. இது விஷத்தன்மை பொருந்தியதாகும். இலை, மரங்கள், உயிரின உடல்கள் மட்கி பாக்டீரியாவினால் அழிக்கப்பட்டு கார்பனாக மாறி, காற்று மாசிலுள்ள ஹைட்ரஜனுடன் சேர்ந்து மீத்தேனாக மாறுகிறது. பூமிக்குள் இருக்கும் இந்த மீத்தேன் வாயுவானது தொடர்ச்சியாக நகரும் பண்புள்ளது, இவ்வாறு நகரும் மீத்தேன் இறுதியில் பூமிக்கு அடியில் உள்ள படிவுப்பாறைகளில் தங்கிவிடுகிறது.

இந்தியாவில் இது போன்ற வாயு படிவுப்பறைகள் கங்கை சமவெளியில் மிகுந்து காணப்படுகிறது. பூமியில் துளையிட்டு இந்த வாயுவை எடுத்த பின் அங்கு உருவாகும் வெற்றிடத்தில்  அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பாறைகள் எலாஸ்டிக் போல் வந்து நிரப்பிக் கொள்ளும், அத்துடன் அருகிலுள்ள நிலத்தடி நீரும் அங்கு நிரப்பிக் கொள்ளும். இவை போதாதென்று பூமியின் மேற்பரப்பிலுள்ள நீரும் சிறிதளவு கீழே செல்ல வாய்ப்பு மிக அதிகம்.

முன்னோடியான மீத்தேன் எரிவாயு திட்டம்

2011-இல் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க அரசு மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு குஜராத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேசன் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. இந்த திட்டத்தின் படி பசுமை வளம் கொழிக்கும் தஞ்சை டெல்டா வயல்களில் வேதிக் கரைசல்களைச் செலுத்தி மீத்தேன் எரிவாயு எடுக்கப்படுவதாக திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால் நிலங்கள் முற்றிலும் பாழாகும். நிலத்தடி நீர் நஞ்சாகும், சுற்றுச் சூழலும் நாசமாகும் என்பதால், விவசாய இயக்கங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. அப்பொழுது, அது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில்  மீத்தேன் திட்டத்தின் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்த நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தமிழக அரக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

தற்போதைய ஹைட்ரோ கார்பன் திட்டம்

புதுக்கோட்டை மாவட்டம்  வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்குத்தான் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது நாம் முன்னரே பார்த்த, ஹைட்ரோ கார்பன் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படும் மீத்தேன் வகை வாயுக்களான மீதேன், ஈதேன், ப்ரோபேன், பியூட்டேன் எனும் அனைத்து வாயுக்களின் கலவையை பூமியில் துளையிட்டுஎடுப்பதுதான். இவற்றை ஷேல் காஸ், டைட் காஸ் என்று பிரிக்கலாம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

டெல்டா மாவட்டங்களின் ஏன் செயலாக்குகிறார்கள்?

காலங்காலமாய் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளின் போது அடித்து வரப்பட்ட மரங்கள், தாவரங்கள் படிந்து, படிந்து, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் மக்கி, இறுகி கட்டி தட்டி தொன்மபடிமங்களாய், திட மற்றும் திரவ வாயு வடிவங்களில் மண்ணில் படிந்திருக்கும். அதன் வாயு வடிவம்தான் மீத்தேன். சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து சுமார் 1.5 கோடி ஆண்டுகள் முன்பு வரை வாழ்ந்து மடிந்த உயிர்ப்பொருட்கள்தாம் இப்படி மாற்றம் அடைந்துள்ளன. அதற்குப் பிறகு பூமிப் பந்தைச் சுற்றியுள்ள வளி மண்டலத்தில் ஆக்சிஜன் அளவு கூடிவிட்டபடியால், மடியும் உயிர்ப்பொருள் ஆக்சிஜனுடன் இணைந்து சாம்பல் போலாகி விடுகின்றது. எனவே 1.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்றுவரையிலோ இனிமேலோ நிலக்கரியோ, பழுப்பு நிலக்கரியோ, எண்ணெய்யோ எரிவாயுவோ உருவாக வாய்ப்பு இல்லை. அதற்கான சூழல் இல்லை.

தி.மு.க-வின் பிதற்றலும் திடீர் ஞானோதயமும்

“கதிராமங்கலம் பிரச்சினைக்கு அ.தி.மு.க மட்டுமல்ல தி.மு.க-வும் காரணம் என்று ஒரு தவறான பிரச்சாரத்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர். நான் தெரிவிக்க விரும்புவது, திமுக ஆட்சியின்போது மத்திய அரசு இங்கு ஆய்வு செய்தது. மக்களுடைய கருத்துகளை கேட்டு, விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதன் பிறகு திட்டத்தை செயல்படுத்தும் முயற்சிக்கான ஆய்வில் ஈடுபடும் நிலைதான் தி.மு.க ஆட்சியில் இருந்தது. ஆனால், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, குத்தகை உரிமையை வழங்கியிருக்கிறது என்றால், கதிராமங்கலம் பகுதி மக்களுக்கு யார் துரோகம் செய்தார்கள் என்பதை நான் இதைவிட எப்படி எடுத்துச் சொல்ல முடியும்?” என்று வினா எழுப்பியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமின்றி, “தி.மு.க கொண்டு வந்த பல திட்டங்களை கைவிட்ட அ.தி.மு.க இந்தத் திட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து செயல்படுத்தியது ஏன்?” என்ற வினாவையும் ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.

மு.க.ஸ்டாலினின் இந்த விளக்கம் சிறுபிள்ளைத் தனமானது. எந்த நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் அதற்கு ஓர் தொடக்கப்புள்ளி ஒன்று உண்டு. அதை வைத்தது யாரோ அவர்கள் தான் அத்திட்டத்தின் காரணகர்த்தா என்பது உலகமறிந்த உண்மை. அந்த வகையில் கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கிணறுகள் தோண்டுவது குறித்து ஆய்வு செய்ய அனுமதி அளித்த தி.மு.க அரசு தான்.

கதிராமங்கலத்தில் மட்டுமல்ல, நெடுவாசல், நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பெட்ரோலிய மண்டலம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் அனுமதி அளித்தது தி.மு.க அரசு தான். அதுமட்டுமின்றி, தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7049.70 சதுர கி.மீ பரப்பளவில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு 28.08.1989 அன்று அனுமதி அளித்ததும் தி.மு.க அரசு தான். தி.மு.க கொண்டு வந்த பல திட்டங்களை கைவிட்ட அ.தி.மு.க இத்திட்டத்தைக் கைவிடாதது ஏன்? என்று ஸ்டாலின் எழுப்பியுள்ள வினா மிகவும் அபத்தமானது.

தி.மு.க-வின் திட்டத்தை அ.தி.மு.க செயல்படுத்தியது ஏன்?

தி.மு.க ஆட்சியில் ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்ட கதிராமங்கலம் திட்டம் 2001-ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. அதன்பின் 2006-ஆம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த தி.மு.க 2011-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீடித்தது. இந்த காலத்தில் மத்திய அரசிலும் தி.மு.க தான் அங்கம் வகித்தது. அதைப் பயன்படுத்தி கதிராமங்கலம் திட்டத்தை தி.மு.க ரத்து செய்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியது ஏன்?

இப்போதும் கூட ஒன்றும் குறைந்து விடவில்லை. காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது தான் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டால் அப்பகுதியில் ஹைட்ரோகார்பன், மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. எனவே, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு ஸ்டாலின் தயாரா? தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டதற்காக மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு சொந்தம் கொண்டாடும் ஸ்டாலின், தி.மு.க ஆட்சியில் ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு மட்டும் பொறுப்பேற்க மறுப்பது என்ன வகையான நியாயம் என்பது புரியவில்லை.

இறுதியாக

தி.மு.க-வும், ஸ்டாலின் அவர்களும் தாங்கள் ஆட்சியில் இருக்கும் போது செயல்படுத்திய, கையெழுத்திட்ட ஒவ்வொரு திட்டங்களையும் தற்போது எதிர்கட்சியாக இருப்பதால் அரசியலுக்காக எதிர்த்து போராட்டம் தொடுத்து வருவது குறைந்தபட்ச அரசியல் அறம் கூட தி.மு.க-விற்கு இல்லை என்பதை தெளிவு படுத்துகிறது.

1. மீத்தேன் திட்டம் – மீத்தேன் திட்டத்துக்கு தி.மு.க பங்கு பெற்ற அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் அனுமதியளித்தது. இந்த திட்டத்திற்கு கையெழுத்து இட்டு துவக்கியதே ஸ்டாலின் தான். தற்போது மீத்தேன் திட்டத்தை தெரியாமல் அனுமதித்தோம் என்று தி.மு.க எதிர்ப்பது எந்த வகை அரசியல் நாகரிகம்?

2. ஸ்டெர்லைட் ஆலையை 1994-ஆம் வருடம் நிறுவியது அ.தி.மு.க அரசு. 1996-ஆம் ஆலையை திறந்தது தி.மு.க அரசு. 2009-ஆம் ஆண்டு இதே ஆலையின் விரிவாக்கத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதும் மாநில தி.மு.க மற்றும் மத்திய காங்கிரஸ் அரசாங்கங்கள். இருவரும் கூட்டணியில் இருந்த காலம் அது. இந்த உண்மைகளை மடைமாற்றி மத்திய பா.ஜ.க-வையும் பிரதமர் மோடி அவர்களையும் இந்த போராட்டத்தில் தொடர்பு படுத்துவதும்,  தாங்கள் நிறுவிய ஆலைகளை தாங்களே மூட வேண்டும் என்று போராட்டம் நடத்துவதும் நகைப்புகுறியதாகவே இருக்கின்றது. தமிழக மக்கள் இந்த உண்மைகளை அறியாமல் இல்லை.

3. அடுத்தது நீயூட்ரினோ திட்டம் மிகவும் ஆபத்தான திட்டம் என்று ஸ்டாலின் குறிப்பிடுகிறார். இந்த திட்டத்திற்கும் தி.மு.க அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசாங்கம் தான் 2010-ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று சுற்றுப்புற சூழல் மற்றும் வன அனுமதியை கொடுத்தது. இன்று அவர்கள் அனுமதியளித்த திட்டதிற்கு எதிராகவே போராட்டம் அறிவித்துக் கொண்டு இருக்கிறார் ஸ்டாலின் அவர்கள். ஆக தாங்கள் ஆட்சியில் இருக்கும் போது துவக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் தற்போது எதிர்த்து பா.ஜ.க எதிர்ப்பு அரசியல் மட்டுமே செய்து வரும் ஸ்டாலின் அவர்கள் ஆக்கப்பூர்வமான அரசியல் செய்ய முன் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share