சினிமா

செக்க சிவந்த வானம் – அதிரடி : கதிர் விமர்சனம்

மணிரத்னம் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் செக்க சிவந்த வானம். இதற்கு முன் அவர் இயக்கிய காற்று வெளியிட காற்றோடு காற்றாக சென்று விட்டது. குரு திரைப்படத்திற்கு பிறகு, அவர் எடுத்து மக்களிடம் வரவேற்பை பெற்ற ஒரே திரைப்படம் ஓ கே கண்மணி மட்டுமே, அதுவும் காதல் கதை கொண்ட திரைப்படம். செக்க சிவந்த வானம் எப்படி?

ட்ரைலர் (ட்ரைலர் விமர்சனமும் நாம் முன்பே இங்கே வெளியிட்டிருந்தோம்) பார்த்தாலே தெரிந்திருக்கும் இது ஒரு ஆக்ஷன் திரைப்படம் என்று. அந்த எதிர்பார்ப்போடு சென்றவர்களை இம்முறை மணிரத்னம் ஏமாற்றவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இது ஒரு trendsetter வகை திரைப்படம் கிடையாது. இது போன்ற gangster , மாபியா பற்றிய திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. உதாரணத்திற்கு ஆரண்ய காண்டம், புதுப்பேட்டை போன்ற படங்களை சொல்லலாம். செக்க சிவந்த வானம் அந்த வகை திரைப்படமே.

சேனாபதியாக பிரகாஷ் ராஜ், மிகப்பெரிய தாதா. அவரது மகன்களாக அரவிந்த் சாமி, அருண் விஜய் மற்றும் சிம்பு, போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி. ரௌடியாக அரவிந்த் சாமி பொருந்தவில்லை. நாம் முன்பே குறிப்பிட்டதை போல அமுல் பேபி போன்ற அவர் முகத்துக்கு இந்த அடிதடி கதாபாத்திரம் பொருந்தவில்லை என்றே சொல்ல வேண்டும். தனி ஒருவன் படத்தில், சித்தார்த் அபிமன்யுவாக அவர் ஜொலித்தார், காரணம் அது ஒரு மேதாவித்தனமான வில்லன் கதாபாத்திரம். இங்கே அவர் பொருந்தவில்லை என்பதே கசப்பான உண்மை.

அருண் விஜய் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையே கச்சிதமாக செய்திருக்கிறார். சிம்புவின் கதாபாத்திரம் நன்றாக வந்திருக்கிறது. ஒரு சில காட்சிகளில் அவர் நகைச்சுவையாக தெரிந்தாலும், நன்றாகவே நடித்திருக்கிறார். அவரை வைத்து படத்தை குறிப்பிட்ட தேதிக்குள் முடிப்பதே ஒரு சாதனை. ஆனால் அவரையும் நடிக்க வைத்த மணிரத்னம் உண்மையில் மாபெரும் சாதனையாளர் தான். பழி உணர்ச்சியோடு அவர் பேசும் வசனங்களும் சரி, முக பாவனைகளும் சரி ரசிக்க வைக்கிறது.

பிரகாஷ் ராஜ் நன்றாக நடித்திருக்கிறார். பெரியவர் என்ற பெயருக்கு ஏற்ப  கம்பீரமான தோற்றம், வசன உச்சரிப்பாகட்டும், முக பாவனைகளாகட்டும், உடல் மொழியாகட்டும் சிறப்பாகவே செய்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜெயசுதா. திரைப்படத்தில் வரும் பெண் கதாபாத்திரத்தில் ஓரளவுக்கு நன்றாக நடித்திருப்பவர் என்றால் அது ஜெயசுதா மட்டுமே. ஆனால் அவருக்கும் அவ்வளவு பெரிய கதாபாத்திரம் இல்லை.

இவர்கள் ஒருபுறமிருக்க, தனக்கே உண்டான தனி பாணியில் விஜய் சேதுபதி. படத்தில் இவர் போலீஸ் அதிகாரி, அரவிந்த் சாமியின் நண்பர். இவருக்கு குறைவான காட்சிகளே. ஆக்ரோஷமான வசனங்களோ, சண்டை காட்சிகளோ இல்லை. மிக சாதாரணமான வசனங்களே. ஒரு கட்டத்தில் நட்சத்திர அந்தஸ்தில் உள்ள விஜய் சேதுபதியை ஏன் மணிரத்னம் இந்த சாதாரண கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார் என்று கூட தோன்றலாம். ஆனால் இந்த கதாபாத்திரத்தை சாதாரண ஒரு நடிகர் நடித்திருந்தால், அது ரசிகர்கள் மனதில் நின்றிருக்காது. கதாபாத்திரத்தின் முக்கியத்துவமும் புரிந்திருக்காது. கிளைமாக்ஸ் நோக்கி செல்லும் போதே இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் நமக்கு புரியும். கதாபாத்திரத்தின் பெயர் ரசூல், என்கவுண்டரில் கொல்லப்பட்ட gangster இப்ராஹிமின் மகன் போன்ற வசனங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் அருமை.

கதாநாயகிகளுக்கு திரைப்படத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவர்கள் இல்லை என்றால் கூட படம் நன்றாகவே இருந்திருக்கும். இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று கூட சொல்லலாம். ஜோதிகா போன்ற நடிகை இருக்கும் பொழுது, ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். ஆனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷை இலங்கை தமிழ் பேச வைத்து நம்மை கடுப்பேற்றுகிறார் மணிரத்னம். உடனே நாம் இலங்கை தமிழ் மீது வெறுப்பை காட்டுவதாக நினைக்க வேண்டாம். இதே மணிரத்னம் கன்னத்தில் முத்தமிட்டாள் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் இலங்கை தமிழ் பேசுவதை போன்ற ஒரு காட்சியை வைத்திருப்பார். அந்த நபரிடம், ‘உங்க தமிழ் என்ன வேற மாதிரி இருக்கு’ என்று கீர்த்தனா கேட்க, ‘இதுவும் தமிழ் தான், நாங்களும் தமிழர்கள் தான்’ என்று அந்த நபர் கோபமாக பதிலளிப்பார். அவரை  தமிழீழப் போராளி இயக்கத்தைச் சேர்ந்தவராக காட்டி இருப்பார் மணிரத்னம். அன்று, திரையரங்கில் இந்த காட்சிக்கு கை தட்டல் கிடைக்காமல் போகவில்லை. ஆனால் இந்த திரைப்படத்தில் இப்படி பேசுவதன் மூலம் அவர் நமக்கு எதை உணர்த்துகிறார்? எதையுமே இல்லை. இலங்கைத் தமிழர்களிடம் இந்த காட்சிகள் எதிர்ப்பை சம்பாதிக்காமல் இருந்தாலே பெரிய விஷயம் தான்.

முதல் பாதியில் விறுவிறுப்பை காட்டிய இயக்குனர், இரண்டாம் பாதியில் சற்றே தடுமாறி இருக்கிறார். இரண்டாம் பாதி வெறி, அடிதடி, துப்பாக்கி சத்தம், சேசிங்க்(chasing) காட்சிகள் மற்றும் கூச்சல் இவற்றால்  மட்டுமே நிறைந்திருக்கிறது. ஒரு இடத்தில் கூட அறிவை பயன்படுத்த ஒருவர் கூட முயற்சிக்காதது திரைப்படத்திற்கு ஒரு பலவீனம் என்றே சொல்ல வேண்டும். கதையையும் நாம் ஊகித்து விட முடியும். ஆனால், சந்தோஷ் சிவனின் அற்புதமான ஒளிப்பதிவு மற்றும் ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை, ரசிகர்களை கட்டிப்போட்டு விடுகிறது. சிம்பு மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பும் மேற்சொன்ன பலவீனங்களை மறக்கச் செய்து விடுகிறது என்றே சொல்ல வேண்டும்.

கம்மர்ஷியல் திரைப்படங்களுக்கே உண்டான ஒரு கிளைமாக்ஸ். ரசிகர்களின் பலத்த கைத்தட்டல்களுடன் படம் முடிகிறது.

நாயகன் போன்ற திரைப்படங்களை தந்த மணிரத்னம் எங்கே என்று தேடிக்கொண்டிருந்த வேளையில், நான் எங்கும் சென்று விடவில்லை என்று செக்க சிவந்த வானத்தோடு பதிலளிக்கிறார் இயக்குனர். நாயகன், இருவர் அளவுக்கு இல்லை என்றாலும் கூட, இன்றைய இளம் இயக்குனர்களுக்கு தான் எந்த வகையிலும் சளைத்தவரில்லை என்று நிரூபித்திருக்கிறார் மணிரத்னம்.

செக்க சிவந்த வானம் – அதிரடி

Tags
Show More
Back to top button
Close
Close