ராணுவ அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், பாதுகாப்புத்துறை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடப்பதைப் போல், ரபேல் போர் விமானங்கள் வாங்கும் விவகாரத்தில் இடைத்தரகர்களின் தலையீடு எதுவும் இல்லை என்றும், இரண்டு நாட்டு அரசுகளுக்கு இடையில் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்றும் அவர் கூறியுள்ளார்.

விமானப் படைக்கு உடனடித் தேவையின் அடிப்படையில் 36 விமானங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும், அனைத்தும் விதிமுறைகளின் படியே ஒப்பந்தம் நடைபெற்றிருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஜெட் விமானங்களை தயாரிக்கும் திறன் ஹெச்ஏஎல் நிறுவனத்திற்கு இல்லை என்பதால்தான், அப்போது ரபேல் ஒப்பந்தம் நிறைவேறவில்லை என்றார்.

மேலும் விலை பேரத்திற்கான கமிட்டி ஒப்பந்தத்திற்கு இறுதி வடிவம் கொடுத்து கொண்டிருந்த நிலையில், 2013ஆம் ஆண்டில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணியின் தலையீடு ஒப்பந்தத்திற்கு சாவுமணி அடித்துவிட்டது என்றும் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் டசால்ட் நிறுவனம் பேச்சு நடத்தியதாகவும், ரபேல் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டால் விலை கணிசமாக அதிகரிக்கும் என டசால்ட் நிறுவனம் கருதியதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Share