கூழானாலும் குளித்துக்குடி கந்தையானலும் கசக்கிகட்டு என்பது முதுமொழி. புறந்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும் என்பது குறள் மொழி. இவ்வாறு தூய்மையை வலியுறுத்தி வந்துள்ள நம் பாரதத்திரு நாட்டின் நிலை என்ன தெரியுமா? தெருக்கள் சாலைகள் என எங்கு பார்த்தாலும் குப்பைகள் கழிவுகள் திடக்கழிவுகள் சிதறிக் கிடக்கின்றன.

ஆறு, ஏரி, குளம், குட்டை என எல்லா நீர் நிலைகளும் 75 சதவீதம் மாசடைந்துள்ளன். அண்மையில் பிணங்கள் கங்கையில் மிதந்தை செய்தி வாயிலாகவும் பத்திரிக்கை வாயிலாகவும் நாம் அறிகிறோம். இவை நாம் ஒவ்வொருவரும் நேரில் காணும் காட்சிகள். இது ஒருபக்கம் என்றால் திறந்த வெளியில் மலம் கழிப்பது தூய்மைக்கு பெரும் சவாலாக உள்ளது.

ஐ.நா. அமைப்பு கூறுவது என்ன?

 • இந்தியாவில் 28 சதவீதம் மக்களுக்கு மட்டும் தான் சுத்தமான கழிப்பறை வசதி உள்ளது.
 • 65 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை.
 • 50சதவீதம் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர்.
 • இந்தியாவை விட மிகவும் ஏழ்மை நாடான வங்கதேசத்தில் 3 சதவீதம் மக்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 • நகரப்புறங்களில் 25 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது.
 • கழிப்பறை வசதி இருந்தும் சுமார் 40சதவீதம் பேர் அதைப்பயன்படுத்துவதில்லை என்பது முக்கியமான தகவல்.

மத்திய அரசின் முயற்சிகள்

 • மத்திய  ஊரகச் சுகாதாரத்திட்டம் 1986, முழு சுகாதாரதிட்டம், நிர்மல் கிராம பாதுகாப்புத் திட்டம், நிர்மல் பாரத் அபியான், ஸ்வச் பாரத் 2014 எனப் பல்வேறு மத்திய அரசுத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
 • புதிய ஸ்வச் பாரத் 2014 திட்டத்தின் மூலம் வரும் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதிக்குள் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த தினத்திற்குள் தூய்மையான பாரதத்தை படைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • எல்லா குடியிருப்புகளுக்கும் கிராம மக்களுக்கும் தண்ணீர் வசதி, கழிப்பிடவசதி, முறையான கழிவுநீர் அகற்றும் விழிப்புணர்வு உண்டாக்குதல், மனமாற்றம் ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை கண்காணித்தல், கலைநிகழ்ச்சிகள், தொலைக்காட்சியில் தொடர்கள், கருத்து விவாதம் நடத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
 • “தூய்மைத்தூதர்” என்று பிரபலமானவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் நியமிக்கலாம்.
 • பள்ளிக் குழந்தைகள் கண்ணைக் கவரும் படங்களுடன் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
 • சமயவிழாக்கள், பண்டிகைகள் மற்றும் இதர விழாக்கள் கொண்டாடுவதில் சிறு மாற்றங்கள் கொண்டு வந்து குப்பைகளை குறைத்தல்.

இப்படி இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதிவரை சர்வதேச சுகாதார மாநாட்டை மத்திய அரசு நடத்த உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த மாநாடு தொடர்பான விளக்கக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலாளர் பரமேஸ்வரன் ஐயர், கிராமப்புற சுகாதார மேம்பாடு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கினார்.

‘தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 8.39 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சுமார் 4.4 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா கிராமங்களாக அறிவித்துள்ளன. தூய்மை இந்தியா திட்டம் தொடங்கியதில் இருந்து கிராமப்புற சுகாதார மேம்பாடு அதிகரித்துள்ளது. 2014ல் 550 மில்லியன் மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்திய நிலை இருந்தது. தற்போது அது 150 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது’ என்றார் பரமேஸ்வர ஐயர்

Share