நம் நாட்டின் மொத்த தேவையில் வெறும் 20 சதவிகிதத்தை மட்டும்தான் நரிமணம், மும்பை, அஸ்ஸாம் போன்ற இடங்களில் இருந்து கிடைக்கும் உள்நாட்டு உற்பத்தி தீர்க்கிறது. மீதம் 80 சதவிகிதத்தை ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இதன் மூலமாக, ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய அந்நியச் செலாவணி இழப்பு ₹ ஆறு லட்சம் கோடி. இது ராணுவத்துக்குச் செய்யும் செலவைவிட இரண்டு மடங்கு அதிகம்.

சரி, தேவையாவது கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது பத்து சதவிகிதம் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. “இந்த நிலையில், இன்னும் 25 வருடங்கள் மட்டுமே பெட்ரோல் கிடைக்கும். பிறகு, படிப்படியாக உற்பத்தி குறைந்து வற்றும் நிலை உருவாகிவிடும்” என்று வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

பெட்ரோல் இருப்பே காலியாகிவிடும் என வரும் தகவல்கள் ஒட்டுமொத்தமாக வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழக்க வைக்கிறது. இந்த நிலையில், மாற்று எரிபொருளைக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. அந்த வகையில், எத்தனாலை மிகச் சிறந்த மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம். பிரேசிலையும், அமெரிக்காவையும் இந்த விஷயத்தில் முன்னோடியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

30 ஆண்டுகளுக்கு முன்பு, அதிகப்படியான பெட்ரோலிய இறக்குமதியால் நிதி நிலைமை மோசமாகி, உலகமெங்கும் கடன் வாங்கி, மிகப் பெரிய பொருளாதாரச் சீர்கேட்டைச் சந்தித்த பிரேசில், மாற்று எரிபொருளாக எத்தனாலைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகுதான் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் அளவுக்கு நிதி வசதியில் உச்சம் தொடக் காரணம், எத்தனால்தான். எதிலும் தீர்க்க தரிசனத்துடன் சிந்திக்கின்ற அமெரிக்காவும் எத்தனால் பயன்பாட்டுக்கு மாறி விட்டது. அமெரிக்காவில் ‘இ85’ என போர்டு போட்ட பங்க்குகளே இருக்கின்றன. சமீப காலமாக ஆப்பிரிக்க, கரீபிய நாடுகளும் எத்தனால் உற்பத்தியில் இறங்கி உள்ளன. சீனா, எத்தனாலை இறக்குமதி செய்ய ஆரம்பித்து விட்டது.

ஆக, இவர்கள் எல்லாம் படு புத்திசாலித்தனமாக செயல்படும் போது, நாம் மட்டும் இன்னும் கட்டியிருக்கும் கோவணத் துணியையும் விற்று, அந்தப் பணத்தில் பெட்ரோல் வாங்குவது மகா முட்டாள்தனமான விஷயம். நம் நாட்டில் இருக்கின்ற வளங்களை வைத்து, நம்மால் சிறப்பாக எத்தனால் உற்பத்தி செய்ய முடியும்.

இந்தநிலையில், மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, சத்தீஸ்கர் மாநிலம் ராஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “வருடம் தோறும் ₹8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைச் சமாளிக்க மத்திய அரசு 5 எத்தனால் உற்பத்தி ஆலைகளை நிறுவி வருகிறது. மரக்கழிவுகள், குப்பைகளில் இருந்து எத்தனால் தயாரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் பெட்ரோல் விலை ₹55 ஆகவும், டீசல் விலை ₹50 ஆகவும் குறையும். இது விரைவில் நடைபெறும். விவசாயிகள், பழங்குடியின மக்கள் எத்தனால் உற்பத்தியை மேற்கொள்ள முன்வர வேண்டும். இனி எத்தனாலே நமது எரிபொருளாக மாற்ற வேண்டும்” என்றார்.

Share