விளையாட்டு

விளையாட்டு மைதானம், நிரந்தர பயிற்சியாளர் இல்லாமலேயே கால்பந்து போட்டியில் தேசிய அளவில் தங்க கோப்பை பெற்று சாதித்த அரசு பள்ளி மாணவிகள்!

மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி மாணவிகள் காவியா, பிரியதர்ஷினி ஆகிய இருவர் கோவாவில் அகில இந்திய அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் தமிழக அணியில் விளையாடி தங்க கோப்பை வெல்ல காரணமாயிருந்திருக்கிறார்கள்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள சவளக்காரன் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவியர், கோவா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 20 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்ற தேசிய இளையோர் மகளிர் கால்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்றனர்.

இந்த அணியில் சேலம், கடலூர், நாமக்கல், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவியர் மொத்தம் 18 பேர் இடம் பெற்றிருந்தனர். இப்போட்டியில் தமிழக அணி தங்கப் பதக்கம் பெற்றது. இதையொட்டி, தமிழக அணியில் இடம் பெற்றிருந்த சவளக்காரன் ஆதிதிராவிடர் நலத் துறை மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவியர் எஸ்.பிரியதர்ஷினி, பி.காவியா ஆகியோருக்கும், பயிற்சியாளர் வி.முத்துகுமாருக்கும் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிடர் நலத் துறை மண்டல இணை இயக்குநர் வி.குணசேகரன் பங்கேற்று, பள்ளி சார்பில் ஊக்கத் தொகையாக இரண்டு மாணவியருக்கும் தலா ₹2 ஆயிரம் வழங்கினார்.

முன்னதாக கிராம பொது மக்கள், கிராம கமிட்டியினர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ – மாணவியர், இரு மாணவியரையும் தாரை தப்படை இசையுடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர். இதில் என்ன சிறப்பு என்றால் சவளக்காரன் பள்ளியில் முறையான விளையாட்டு மைதானமே இல்லை. மேலும் அங்கு முழு நேர உடற் கல்வி ஆசிரியரும் கிடையாது. வாய்ப்புக் கிடைத்தால் யாரும் சாதிக்கலாம் என நிரூபித்த மாணவிகளை மனதாரப் பாராட்டுகிறோம்.

Tags
Show More
Back to top button
Close
Close