விளையாட்டு

“தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் நீங்கள் இந்தியாவின் சாம்பியன்” –  ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கத்தை இழந்த தமிழக வீரரை புகழ்ந்து தள்ளிய மத்திய பா.ஜ.க விளையாட்டுத்துறை அமைச்சர்!

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்று நிறைவுற்றுள்ளது. இந்த போட்டிகளில் இந்தியா 15 தங்கம் உள்ளிட்ட 69 பதக்கங்கள் வென்று ஆசிய நாடுகளின் பதக்க பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது. தடகள வீரர் வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வென்றனர்.

தமிழக தடகள வீரரான லட்சுமணன் 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது வீரராக வந்தார். ஆனால், லட்சுமணன் ஓட்டப்பந்தய தடத்துக்கு வெளியே கால் வைத்ததால், தகுதியிழப்பு செய்யப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, நான்காவதாக வந்த சீன வீரர் சாங்காங் ஷாவோவுக்கு வெண்கலப் பதக்கம் அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

நேற்று புது தில்லியில் பதக்கத்தை இழந்த தமிழக வீரர் லட்சுமணனை சந்தித்த மத்திய விளையட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் அவரைப் பாராட்டி அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பாக 10 லட்சம் ரூபாய் வழங்கினார். இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ரத்தோர், “லட்சுமணன் கோவிந்தன் ஆசியக் கோப்பை தொடரில் அபாரமாகச் செயல்பட்டார். சிறு தவறு காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். எப்படி இருந்தாலும் அவர் நமது சாம்பியன். நாம் அவருடன் துணை நிற்போம். அவரைப் சந்தித்தது எனக்குப் பெருமையான தருணம்” என்றார்.

முன்னதாக, பதக்கம் வென்ற இந்திய வீரர்களைப் பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, அடுத்து வரும் ஒலிம்பிக் தொடருக்கு தயாராகுங்கள் என்று ஊக்கப்படுத்தினார்.

 

Tags
Show More
Back to top button
Close
Close