சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்குச் சென்றார் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே விமானத்தில் அவருடன் பயணித்த தூத்துக்குடியைச் சேர்ந்த கனடாவில் படிக்கும் ஆராய்ச்சி மாணவியான ஷோபியா விமானத்தில் வைத்தே பாஜக குறித்து அவதூறாக  கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பினார். மேலும், தூத்துக்குடி விமான நிலையம் வந்தவுடனும் மீண்டும் தமிழிசையைப் பார்த்து கோஷம் எழுப்பியுள்ளார். இதுகுறித்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

மூக்கை நுழைக்கும் ஸ்டாலின்:

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் அப்பெண்ணின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து கருத்து பதிவிட்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின், “ஜனநாயக விரோத – கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அரசியல் நாகரிகம் அறிந்த பா.ஜ.க:

அரசியல் நாகரிகம் தெரியாமல் இதனை ஆதரிக்கும் ஸ்டாலினுக்கு பதிலடி தரும் வகையில் பேட்டியளித்த பேசிய தமிழிசை “உண்மையிலேயே இது தவறான அரசியல். சக அரசியல்வாதிக்கு அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டதை ஆதரிப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதே நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டால் நான் முதல் ஆளாக எதிர்த்திருப்பேன். ஸ்டாலின் அந்த ட்வீட் போட்டிருக்கக்கூடாது” எனக் கூறினார். இப்படி பா.ஜ.க பணிவுடன் அரசியல் நாகரிகம் அறிந்து செயல்பட்டு கொண்டிருக்கையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 70-களில் கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து வாய் திறக்காத தி.மு.க கட்சியினரெல்லாம் கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள் என்பது தான் வேதனையளிக்கிறது.

கருணாநிதியின் அரசியல் சூழ்ச்சியில் பலியான உயிர்கள்:

எத்தனையோ அப்பாவிகள் கருணாநிதியின் அரசியல் சூழ்ச்சியில் தி.மு.க-வின் அதிகார வெறிக்கு பலியாகி இருந்தாலும் அண்ணாமலை பல்கலைகழக மாணவர் உதயகுமார் மரணத்தை நினைத்தால் இப்படியும் ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இருந்துள்ளார் என்று வருங்காலங்களில் வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கும்.

தமிழக மக்கள் கருணாநிதியின் ஆரம்பகால ஆட்சியை மனதில் வைத்து இருந்ததால் தான் எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும் வரை தொடர்ந்து 3 தேர்தல்களில் தி.மு.க-வை தோற்கடித்து வந்தார்கள். இந்த நினைவுகள் மனதில் வரும் பொழுது கருணாநிதி பற்றிய எதிர்மறை எண்ணங்களே மனதில் எழுகின்றன. அதனால் தான் மனசு இரக்கமின்றி அவரை இந்த நிலையிலும் இகழ்ந்தே எழுத சொல்கின்றது. எதற்கு இரக்கப்படனும்? தான் பெத்த பிள்ளையையே ஒருத்தர் அது என் பிள்ளை இல்லை என்று சொல்ல வேண்டும் என்றால் அவர் எந்த அளவிற்கு இரக்கமின்றி மிரட்டப்பட்டு இருப்பார்?

கருணாநிதியின் பட்டத்தை எதிர்த்த உதயகுமார்:

1971-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. “இப்பொழுது எல்லாம் எனக்கு கூட டாக்டர் பட்டம் கொடுக்க தயாராக இருக்கிரார்கள். நான் தான் இப்போதைக்கு வேண்டாம் என்று ஒத்தி வைத்துள்ளேன்” என்று சொன்னவர் அவர். ஆனால், அந்த காலத்தில் ஒழுங்காக படிச்சவனுக்கே டாக்டர் பட்டம் கிடைக்காது ஆனால் கருணாநிதிக்கு கொடுக்க நினைத்தார்கள். காரணம்? அவர் அப்போதைய முதல்வர்.இதற்கான அறிவிப்பு வெளியானதும் மாணவர்களில் இருந்த மாணவ காங்கிரஸ் பிரிவினர் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். ஏனென்றால் கல்லூரிப் படிப்பைக்கூட எட்டாத கருணாநிதிக்கு எதற்காக டாக்டர் பட்டம் என்பது தான் பல்கலைகழக மாணவர்களில் இருந்த மாணவர் காங்கிரஸ் அமைப்பின் கோஷம்.

கழுதையின் கழுத்தில் டாக்டர் பட்டம்:

இதற்காக அந்த மாணவர்கள் செய்த ஒரு செயல் தான் கருணாநிதியை ஆத்திர மூட்டியது. அந்த மாணவர்கள் ஆர்வ கோளாறுடன் கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதி தொங்க விட்டு பல்கலைக்கழக வளாகத்தில் கழுதையை நடமாட விட்டார்கள். இது மட்டுமின்றி பல்கலைக்கழக காம்பவுண்டு சுவற்றிலும் கழுதை படம் வரைந்து கழுத்தில் டாக்டர் பட்டத்தை மாட்டி விட்டு கருணாநிதியை கேவலப்படுத்தினார்கள். இது கருணாநிதி கவனத்திற்கு வந்தும் கண்டுக்கொள்ளாது மாணவர்களின் எதிர்ப்பினை மீறி, போலீஸ் படை பாதுகாப்புடன் பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்டார். சாதாரண கருணாநிதியாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நுழைந்த கருணாநிதி டாக்டர் கருணாநிதியாக புதிய பெயருடன் புறப்பட்டு விட்டார்.

என்னை கழுதையாக்கிய மாணவர்களை கவனித்து அனுப்புங்கள்:

போகும் பொழுது காவல் துறை அதிகாரிகளிடம் தன்னை கழுதையாக்கிய மாணவர்களை கவனித்து அனுப்புங்கள் என்று உத்திரவிட்டதாக கூறப்படுகிறது.அதற்கு பிறகு சாயங்காலம் மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்த போலீஸ் விடுதி அறைகளில் தங்கியிருந்த மாணவர்களை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். பல மாணவர்களின் மண்டை, கை, கால்கள் உடைந்தது. மாணவர்களுக்கும் போலீஸ் அடிக்கும் காரணம் முதலில் புரியாவிட்டாலும் ஏண்டா முதல்வரையே கழுதை என்று எழுதுவீர்களா என்று அடியோடு விழுந்த வார்த்தைகள் ஆஹா இது கருணாநிதியின் கைங்கரியம் தான் என்று புரிந்துக் கொண்டார்கள். அதை விட பெரிய கொடுமையே மறுநாள் பல்கலைக்கழக குளத்தில் மிதந்து கிடந்த சக மாணவன் உதயகுமாரின் பிணத்தை பார்த்த மாணவர்கள். உறைந்து நின்றார்கள். போலீஸ் தான் உதயகுமாரை அடித்து குளத்தில் போட்டார்கள் என்று மாணவர்கள் போராட ஆரம்பித்தார்கள். கொடுமை என்னவென்றால் உதயகுமாரின் தந்தை பெருமாள் சாமியோ “இது என் மகன் இல்லை” என்று கூறி விட்டார். இப்படிக்கும் அவரும் ஒரு ஆசிரியர். பெற்ற பிள்ளையையே என் மகன் அல்ல என்று ஒரு தந்தை கூறுகிறார் என்றால் போலீஸ் அவரை என்ன பாடு படுத்தி இருக்கும்? இதனால் வெகுண்டெழுந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டம் நடத்த ஆரம்பித்தார்கள். போலீசோ, இறந்து போனது உதயகுமாரே இல்லை என்று திட்டவட்டமாகச் சொன்னது.

அதற்கும் ஒரு விசாரனை கமிஷன்:

இறந்து போன மாணவன் உதயகுமார் இல்லை என்றால் வேறு யார்? உதயகுமார் எங்கே? பட்டமளிப்பு விழா காலையில் முடிந்த பிறகும் கருணாநிதியின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் படை மாலை வரை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தது ஏன்? திடீரென போலீஸ் மாணவர்கள் விடுதிக்குள் எதற்க்காக நுழைந்தார்கள் என்று “விசாரணை கமிஷன்” அமைக்க கேட்டார்கள் மாணவர்கள். கருணாநிதியோ சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட உதயகுமார் படுகொலை பற்றிய பிரச்சனையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் என்னும் பெயரில் என்னைக் கொல்ல மாணவர்கள் சதித் திட்டம் தீட்டியதாகவும் இறந்தது உதயகுமார் இல்லை என்றும் சட்டமன்றத்தில் பொய்யை கூறிக்கொண்டே இருந்தார்.

நினைத்தது போலவே நடந்தது:

எல்லாவற்றுக்கும் விடை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் என்.எஸ்.ராமசாமி என்கிற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. கடைசியில் விசாரணையின் முடிவில் “குளத்தில் இறந்து கிடந்தது உதயகுமார் தான் என்றும் அந்த மரணத்துக்கும் போலீஸ் தாக்குதலுக்கும் தொடர்பில்லை” என்று கூறி கருணாநிதிக்கு பரிசுத்த சர்டிபிகேட் கொடுத்தது விசாரணை அறிக்கை. இது நடந்து முடிந்து ஏழு வருடங்களுக்கு பிறகு பத்திரிக்கைகளில் ஒரு செய்தி வருகிறது. அதில் முந்தைய கருணாநிதி ஆட்சியில் கொல்லப்பட்ட உதயகுமாரின் தம்பி அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்-க்கு உதவி கேட்டு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.அந்த கடிதம் அப்பொழுது பத்திரிக்கைகளிலும் வந்ததாம்.

உருக வைக்கும் கடிதம்:

அந்த கடிதத்தில் உதயகுமாரின் தம்பி என்ன எழுதியிருந்தார்?

“ஐயா,

கொலையுண்ட உதயகுமாரின் (அண்ணாமலை ப்பல்கலைக்கழகம்) தம்பி கே.பி.மனோகரன் எழுதிக் கொண்டது. எங்கள் குடும்பம் முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசாங்கத்தால் பயங்கரமாக மிரட்டப்பட்டதும், சீரழிக்கப்பட்டதும் பெற்ற மகனை இல்லை என சொல்லச் செய்து தீராத பழியை ஏற்றுக் கொண்ட எங்கள் குடும்பத்தைப்பற்றி தாங்கள் அறிந்ததே.

இந்த சம்பவத்திற்காக எங்களுக்கு முன்னாள் முதல்வர்(கருணாநிதி) அரசாங்கம் 5 ஏக்கர் நிலம் தருவதாக வாக்களித்து இருந்தார்கள். வீடு கொடுப்பதாக கூறினார்கள். வீட்டிலேயே கோர்ட் சீன் உருவாக்கி ஜட்ஜ் என்ன கேள்வி கேட்பார்? என்ன பதில் சொல்ல வேண்டுமென என் தந்தையை மிரட்டி பயமுறுத்தி சொல்ல செய்தார்கள். எனக்கு அரசாங்க உத்தியோகம் வாங்கிக் கொடுப் பதாகக் கூறினார்கள். மற்றும் பல வசதிகள் செய்து கொடுப்பதாக கூறி இருந்தார்கள். ஆனால், நாங்கள் இதுவரை எந்தவித உதவியும் பெறவில்லை. என்னுடைய சகோதரனுடைய பிணத்தைக் கூட காட்டாமல் இறந்தவன் யாரோ அநாதை பிணம் என்ற சூழ்நிலையை உருவாக்கிப் புதைத்தனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியை நான் காணச் சென்று குறைகளை கூறிய போது: “தேவைப்பட்டால் ஆயிரமோ இரண்டாயிரமோ வாங்கிக் கொண்டு செல்” என்று அதிகார தோரணையில் கூறியது இன்னும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை. நான் பி.யு.சி.வரை படித்திருக்கிறேன். எனக்கு அரசாங்கத்தில் உத்தியோகமோ அல்லது பிரைவேட் கம்பெனியில் உத்தியோகமோ வாங்கித்தரும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எங்கள் குடும்பத்தினர் தங்களுக்காகவும், தங்கள் அரசாங்கத்திற்காகவும் என்றென்றும் கடமை ஆற்றகாத்திருக்கின்றோம்.

தாங்களே எங்கள் இதயதெய்வமாக இருந்து எனக்கும் என் குடும்பத்தினருக்கும் வழி காட்டுவீர்கள் என்று

உறுதியாக நம்புகிறேன்.

இப்படிக்கு..

கே.பி.மனோகரன்.”

என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனோகரன் குடும்பம் மாதிரி எத்தனையோ பேர் கருணாநிதியாலும் தி.மு.கவாலும் அழிந்து போய் இருக்கிறார்கள். அன்று படிக்காதவருக்கு டாக்டர் பட்டம் எதற்கு என்று கேட்டதிற்கு மாணவனை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இன்றைக்கு கருத்து சுதந்திரம் பற்றி பேச வந்து விட்டார்கள் தி.மு.க-வினர். இதே வார்த்தையை ஸ்டாலினிடம் ஒருவர் கூறி இருந்தால் அவர் தொண்டர்கள் சும்மா விட்டிருப்பார்களா? நிலையை சற்று யோசித்து பாருங்கள். இது மக்கள் நலனுக்கான கூச்சலா இல்லை. இல்லை தன் கட்சி நலனுக்கான கூச்சலா என்று தெரிய வரும்.

Sources for the Article:

  1. http://www.keetru.com/index.php/component/content/article?id=4638
  2. https://vimarisanam.wordpress.com/2016/05/09/முதலமைச்சர்-கருணாநிதி-ச/
  3. http://fbtamildata.blogspot.com/2017/03/blog-post_614.html
  4. http://tamil.thenseide.com/seide/index.php/articles/241-2012-06-07-15-01-26
  5. http://www.ithayakkani.com/ITHAYAKKANI/jsp/Content/display_content_front.jsp?linkid=1&content=835
  6. http://www.oreynaadu.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D–%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE
Share