காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் செக்க சிவந்த வானம்.  இப்படத்தின் ட்ரைலர் இணைய உலகத்தையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது.

ட்ரைலரைப் பார்க்கும் பொழுது, மணிரத்னம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படம் தரவே முயற்சி செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இதைப் பற்றி மேலே எழுதுவதற்கு முன்னர், நாம் ஒன்றை தெரிவித்தாக வேண்டும். மணிரத்னம் சார், வாழ்த்துகள். சிம்புவை எல்லாம் வைத்து ஒரு படத்தை இயக்கி வெற்றிகரமாக ட்ரைலர் கூட வெளியிட்டு விட்டீர்கள். உண்மையில் நீங்கள் திறமையான இயக்குனர் தான். மற்ற நடிகர்களை வைத்து படம் இயக்கி, நல்ல வசூல் கிடைத்தால் மட்டுமே வெற்றி என்று கருதுவார்கள். சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கி முடிப்பதே வெற்றி தான். அந்த விதத்தில் மீண்டும் வாழ்த்துகள்.

சமூக வலைத்தளங்கள் சிலாகிக்கும் அளவுக்கு ட்ரைலர் சிறப்பாக இருக்கிறதா? மிகப்பெரிய தொழிலதிபர் சேனாபதியாக பிரகாஷ் ராஜ், அவரது மகன்கள் வரதன் (அரவிந்த் சாமி), தியாகு (அருண் விஜய்), எதி (சிம்பு). அரவிந்த் சாமி ஆயுத எழுத்து இன்பாவை நினைவுபடுத்துகிறார், ஆனால் மாதவன் முகத்தில் இருந்த ஆக்ரோஷம் இவர் முகத்தில் துளி கூட இல்லை. சாரி சார், இவரை பார்த்தால் அமுல் பேபி போல தான் தோன்றுகிறது. சித்தார்த் அபிமன்யு ஒரு மாஜிக், அதை மீண்டும் ஒரு முறை திரையில் கொண்டு வர முடியுமா என்பது சந்தேகமே.

அருண் விஜய் ஸ்டைலாக வலம் வருகிறார். பொருத்தமான தேர்வு தான். சிம்பு வழக்கம் போல அதிகம் பேசுகிறார். எந்தளவுக்கு பொருத்தமான தேர்வு என்பதை திரைப்படம் வெளியான பின்பே கூற முடியும். தியாகராஜன் பேசும் விதத்தை எல்லாம் பார்த்தால் மணிரத்னம் நம்மை 1980களுக்கு அழைத்து செல்ல முயற்சிக்கிறாரோ என்றே தோன்றுகிறது.

ஆனால் ஒரு கதாபாத்திரம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அது தான் ரசூல் (விஜய் சேதுபதி). போலீஸ் அதிகாரியாக வரும் இவர் ஏமாற்ற மாட்டார் என்றே தோன்றுகிறது. இவர் சிகை அலங்காரம், மிடுக்கான நடை, கணீரென்ற குரல் என கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கதாபாத்திரம்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு பிரமாதம். அழகாக படம் பிடித்திருக்கிறார். இவருக்காக நீங்கள் டிக்கெட் பதிவு செய்கிறீர்கள் என்றால், நம்பி செய்யலாம். ஏ.ஆர்.ரகுமான் இசையைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. மணிரத்னம் படத்துக்கு இசையமைப்பதென்றால் 110% உழைப்பார். ஆனால் காற்று வெளியிடையில் பாடல்கள் சுமார் ரகம் தான். மீண்டும் அப்படி ஏமாற்ற மாட்டார் என்று நம்புவோம்.

செக்க சிவந்த வானம் மணிரத்னம் அவர்களுக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகள்.

Share