ஆவணி மாதம் பெளர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் கடை பிடிக்க பட்டு வருகிறது. கணவரின் ஆயுள் பலம் அதிகரிக்கவும், குடும்ப ஒற்றுமை சிறக்கவும் திருமணமான பெண்கள் இதனை அனுஷ்டிக்கின்றனர். இந்த விரதம் குறித்து ஒரு வரலாறு கூறப்படுகிறது.

வரலாறு

மகத தேசத்தில் குண்டினா என்னும் ஊரில் சாருமதி என்ற பெண் லட்சுமி தேவியின் பக்தையாக இருந்தாள். தனது குடும்பம் மீதும், குடும்ப நலன் மீதும் பெரும் ஈடுபாடு கொண்டவள். அவளது பக்தியை கண்டு ஆச்சரியப்பட்டு, அவளது கனவில் தோன்றிய மஹாலக்ஷ்மி தேவி, தன்னை வரலட்சுமியாக வழிபட்டால், வேண்டிய வரங்களைத் தருவதாக அருளினாள். சாருமதியும் தன் குடும்பத்தினரிடம் இதை தெரிவித்து, ஒரு வெள்ளிக் கிழமையில் வழிபாடு செய்தாள். மற்ற பெண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளத் தொடங்கினர்.

என்ன செய்ய வேண்டும்

வெண்கலம் அல்லது வெள்ளி குடத்தை கலசமாக அலங்கரிக்க வேண்டும். கலசத்தை சுற்றி சந்தனம் பூசி, அரிசி, தண்ணீர், நாணயம், எலுமிச்சை பழம், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை நிரப்ப வேண்டும். கலசத்தை வஸ்திரத்தால் மூடி மாவிலைகளை வைத்து அலங்கரிக்க வேண்டும். பிறகு முழு தேங்காயை கலசத்தின் மீது வைத்து மஹாலட்சுமி தேவியின் படத்தை வைக்க வேண்டும். பிறகு வர மஹாலக்ஷ்மியை கலசத்தில் ஆவாஹனம் செய்ய வேண்டும்.

லக்ஷ்மி சஹஸ்ரநாமம், அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் போன்றவற்றை பாராயணம் செய்து, கலசத்திற்கு ஆரத்தி எடுத்து, நெய்வேத்தியம் வைத்து வழிபட வேண்டும்.

திருமணமான பெண்களை வீட்டிற்கு அழைத்து, வெற்றிலை பாக்கு, தாம்பூலம், மஞ்சள் கயிறு போன்றவற்றை வழங்க வேண்டும்.

மறுநாள், அதாவது சனிக்கிழமை அன்று கலசத்தை விசர்ஜனம் செய்து கலச நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.

நன்மைகள்

அன்பு, அமைதி, புகழ், இன்பம், வலிமை ஆகிய இந்த சக்திகள் வரலக்ஷ்மியின் அம்சங்கள் எனவே வரலக்ஷ்மி விரதம் மேற்கொள்ளும் போது நம் வாழ்வில் இந்த அம்சங்கள் எல்லாம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். உயர்ந்த ஞானம் கிடைக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும். திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

Share