கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக பெருத்த சேதாரத்தினை சந்தித்திருக்கிறது  கேரளா. அவர்களுக்கு உதவி புரிவதற்காக உலகின் பல்வேறு பக்கங்களில் இருந்தும் நிதியை திரட்டி மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள் அண்டை மாநிலத்தவர்கள்.

700 கோடி ரூபாய் நிதி உதவி

Advertisement

பல்வேறு மாநில அரசுகள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியினை கேரளாவிற்கு அளித்து வந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாயை நிதியாக கேரளாவிற்கு தர விருப்பம் தெரிவித்ததாக வெளியான செய்தி ஆதிகாரபூர்வமற்ற தகவல் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இந்தியாவுக்கான UAE  தூதர் Ahmed Albanna, அதிகாரபூர்வமாக இன்னும் UAE அரசு 700 கோடி அறிவிக்கவில்லை என்றும், இதற்கான எந்த நிதி தொடர்பான அறிவிப்பும் தங்களுக்கு வரவில்லை’ என்றும் கூறியுள்ளார்.   

மன்மோகன் சிங் அவர்களால் உருவாக்கப்பட்ட கொள்கை:

இந்திய பேரிடர் நிவாரண நிதிக் கொள்கை 2004-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதன்படி, எந்த ஒரு சூழலிலும் இந்தியா வெளிநாட்டு அரசிடம் இருந்து வரும் நிதியினை பெற்றுக் கொள்ளாது என்பதாகும். சுனாமி பேரலை வந்த பின்பு தான் இக்கொள்கைகள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு இந்தியாவில் ஏற்பட்ட பேரழிவுகளில் வெளிநாட்டின் நிதி உதவியை இந்தியா பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தர்காஷி நிலநடுக்கம் (1991), லத்தூர் நிலநடுக்கம் (1993), குஜராத் பூகம்பம் (2001), பிகார் வெள்ளம் (2004) காலங்களில் இந்தியா வெளிநாட்டின் நிதி உதவியை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

2004-ஆம் ஆண்டுக்குப் பின்பு நடந்தது

மன்மோகன் சிங் எந்த பேரிடராக இருந்தாலும் அதை இந்தியா சமாளித்துக் கொள்ளும். அதையும் மீறி ஏதேனும் உதவி தேவைப்படும் பட்சத்தில் பெற்றுக் கொள்ளலாம்என்று கூறியுள்ளார். அதற்கு பின்னாலான இந்த 14 வருடங்களில் ஒரு முறை கூட வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி உதவியை இந்தியா பெற்றதில்லை. இதற்கு இன்றளவும் இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒன்று இந்தியா இது போன்ற பிரச்சனைகளை தனியாளாக நின்று சமாளித்துக் கொள்ளும். மற்றொன்று பல்வேறு காரணங்களால் ஒரு சில நாட்டினரிடம் இருந்து நிதி உதவி பெறாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களிடம் முறையாக வேண்டாம் என்று மறுப்பதும், மற்றவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதும் மன வருத்தத்தினை உண்டாக்கும் என்பதால் பொதுவாக வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதை நிறுத்திவிட்டது இந்தியா. ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி தருவதாக கூறியது ஊடகங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட தகவல் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கான எந்த ஆதாரமும், UAE  அரசின் மூலம் அறிவிக்கப்பட்ட அறிவிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

14 வருடங்களில் ரஷ்யா, அமெரிக்கா, மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து உத்தரகாண்ட் வெள்ளம், காஷ்மீர் பூகம்பம், காஷ்மீர் வெள்ளம் ஆகியவற்றிற்காக தரப்பட்ட நிதி உதவியை இந்தியா நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கேரள அமைச்சரின் கொந்தளிப்பு

கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ‘நாங்கள் மத்திய அரசிடம் 2,200 கோடி ரூபாய நிதியுதவி கேட்கிறோம். அவர்கள் 600 கோடி ரூபாய் தருகிறார்கள். நாங்கள் எந்த நாட்டு அரசுக்கும் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் எங்களுக்கு 700 கோடி ரூபாய் நிதியுதவி தருகிறது. ஆனால், அதை வேண்டாம் என்று சொல்கிறது மத்திய அரசு. மத்திய அரசு எங்களுக்கு போதிய நிதியையும் கொடுக்க மறுக்கிறது. கிடைக்கும் நிதி உதவியையும் தடுக்கிறது என்றார்.என்று கொதித்துள்ளார்.

மத்திய அரசின் விளக்கம்

இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 700 கோடி வருவதாக எந்த அதிகாரபூர்வ தகவலும் UAE அரசிடம் இருந்து வரவில்லை. தற்போது இருக்கும் சட்ட நடைமுறைகள் படி, நிவாரணங்களுக்கானத் தேவையை உள்நாட்டிலிருந்தே பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளது. மேலும் இயற்கை பேரிடரின் போது வெளிநாடுகளிடம் நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை விடுப்பது இல்லை என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆவணத்தில் கூறப்பட்டு உள்ளது.

700 கோடி ரூபாயை இந்தியா மறுத்துவிட்டதாக வெளியாகி இருக்கும் தகவல், கேரள அமைச்சர்களால் பரப்பப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற யூக தகவலாகும். இல்லாத ஒன்றை இருப்பதாக சித்தரித்து கற்பனை உலகில் மிதப்பதை போல, வராத ஒரு நிதியை, இந்தியா மறுப்பது போன்ற ஒரு கற்பனை தோற்றத்தை ஏற்ப்படுத்தி, வெள்ளத்தால் ஏற்ப்பட்டுள்ள சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் மடை மாற்றும் முயற்சியே இந்த குற்றச்சாட்டு என்பது தெளிவாகியுள்ளது.

Share