செய்திகள்

எட்டு வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் இர்பான் மற்றும் ஆசிப் ஆகிய இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி, மத்திய பிரதேச மாநிலம், மண்டசாவூரில், பள்ளிக்கூட வாசலில் பெற்றோருக்காக காத்திருந்துள்ளார், இரண்டாம் வகுப்பு சிறுமி. இர்பான் மற்றும் ஆசிப் என்ற இரண்டு நபர்கள், அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளனர். சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தில் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

பள்ளிக்கூடத்தில் இருந்து 700 மீட்டர் தொலைவில் அந்த சிறுமி மீட்கப்பட்டார். வழக்கு பதிவு செய்து விசாரித்த காவல் துறையினர், சி.சி.டி.வி காட்சிகளின் உதவியால், முதல் குற்றவாளியான இர்பானை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல் துறையினர், இரண்டாவது குற்றவாளியான ஆசிப்பை கைது செய்தனர்.

சிறுமிக்கு நடந்த கொடூர தாக்குதலை கண்டித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகளுக்கான தண்டனையை மக்களே தீர்மானிக்க போவதாக கோஷங்களை வெளிப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து நேற்று(21 ஆகஸ்ட்)  இந்த வழக்கை விசாரித்த மண்டசாவூர் அமர்வு நீதிமன்றம், குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டது. போக்ஸோ சிறப்பு நீதிபதி நிஷா குப்தா அவர்கள் இந்த வழக்கை விசாரித்து, இர்பான் மற்றும் ஆசிப் ஆகிய இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

376 AB என்ற புதிதாக இயற்றப்பட்ட IPC சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு கீழ் உள்ள பெண்களின் கற்பழிப்புகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்ட பின் வழங்கப்பட்டுள்ள ஆறாவது மரண தண்டனை இதுவாகும்.

Tags
Show More
Back to top button
Close
Close