செய்திகள்

காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்துக்கு விரைவில் ஒப்பந்தம் : நிதின் கட்கரி நம்பிக்கை

காவிரி-கோதாவரி நதிகள் இணைப்பு உள்ளிட்ட 5 நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

கோதாவரி – காவிரி இணைப்பது பற்றி 1970-ஆம் ஆண்டுகளில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போதே திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், அப்போதே அந்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன. அப்போதும், அதற்குப் பிறகும் எப்போதெல்லாம் காவிரிப் பிரச்சனையில் துரோகம் இழைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தை ஆசை காட்டி ஏமாற்றுவதற்கான கருவியாக மட்டுமே இத்திட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஒருமுறை கூட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலைக்கு வந்ததில்லை.

 

மராட்டிய-சத்தீஸ்கர் எல்லையில் ஓடும் கோதாவரியின் துணை நதியான இந்திராவதியில் அணை கட்டி, அதில் தேங்கும் தண்ணீரை தெலுங்கானா மாநிலம் காலேஸ்வரம் அணைக்கு கொண்டு செல்லவேண்டும். அங்கிருந்து ஆந்திர மாநிலம் போலாவரம் அணை, நாகர்ஜூனா சாகர் அணை வழியாக கிருஷ்ணா நதிக்கு கொண்டு செல்லப்பட்டு, சோமசிலா அணை மூலம் பெண்ணாறு வழியாக காவிரிக்கு தண்ணீரைக் கொண்டு செல்வது தான் கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் ஆகும்.

 

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 9 மாநிலங்களிலிருந்து நதிநீர் இணைப்பு தொடர்பாக 47 திட்டங்கள் வந்துள்ளதாக தெரிவித்தார். இதில், காவிரி-கோதாவரி நதிகள் இணைப்பு உள்ளிட்ட 5 திட்டங்களை  செயல்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதற்கான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close