நாட்டின் 72-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள், சாதனைத் திட்டங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்து பேசினார். அப்போது ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டம் செப்டம்பர் 25-ல் தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்:

மத்திய தொழிலாளர் மற்றும்  வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் 2008-ம் ஆண்டு தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் துவக்கப்பட்டது.  வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கும், ஐந்து உறுப்பினர்கள்  கொண்ட குடும்பங்களுக்கு, அமைப்புசாரா தொழிலாளர்கள் கொண்ட 11 பிரிவுகளுக்கு எந்தவித பிரீமியமும் செலுத்தாமல் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் வரை பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் துவக்கப்பட்டது.  மத்திய அரசு ஒருங்கிணைந்த சுகாதார இயக்கத்தில் தொலைநோக்குத் திட்டமாக தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை, சுகாதாரத் திட்டத்துடன் இணைத்து செயல்படுத்தியது இந்தத் திட்டம் 2015ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டது.   2016-17ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 278 மாவட்டங்களில் 3 கோடியே 63 லட்சம் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன. நாடு முழுவதும் உள்ள 8697 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மூலம் இந்தக் குடும்பங்கள் மருத்துவ சிகிச்சை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.   பல்வேறு அமைச்சகங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் மூலம் இந்த சுகாதாரத் திட்டம் பயனளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.  

அதன் ஒரு பகுதியாக நாட்டில், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும், 10 கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்என மத்திய அரசு தாக்கல் செய்த, 2018-19ம் நிதியாண்டு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, மருத்துவ காப்பீடு பெற முடியும். பணம் செலுத்தாமலேயே, நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள, தனியார் மற்றும் அரசு மருத்துவமனை களில் சிகிச்சை பெறலாம். வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பற்றிய ஆவணங்களில் இருந்து, பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ், 100 நோய்களுக்கு மேல் சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தடுக்கக் கூடிய, 70 நோய்களுக்கும், புற்றுநோய், இதய நோய் போன்ற, ஆபத்து மிக்க30 நோய்களுக்கும் சிகிச்சையளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், கிராமங்களில் வசிப்பவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வெகுதொலைவு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார மையங்களை புதிதாக திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

குறிப்பாகக் கிராமப் புறங்களிலும் நோய் ஆபத்துள்ள இடங்களிலும் அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்பை விரிவாக்குவதற்காக இந்திய அரசாங்கம் ஆயுஷ்மான பாரத் திட்டத்தை தொடங்கியுள்ளது. இத் திட்டத்தின் இரு தூண்கள் மூலம் நாடு முழுவதும் முக்கிய சேவைகள் வழங்கப்படும்:

முதல் முன் முயற்சி மூலம் 1,50,000 சுகாதாரம் மற்றும் நல மையங்களை அமைத்தல். இதன் மூலம் ஆரம்ப சுகாதாரம் மக்களுக்கு நெருக்கமாக எடுத்துச் செல்லப்படும்.

இரண்டாவது முன் முயற்சி, தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம்.  இது 10 கோடி ஏழை மற்றும் நலிந்த குடும்பங்களை (50 கோடி பயனர்கள்) சென்றடையும். இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவமனை சிகிச்சைகளுக்காகக் குடும்பத்துக்கு ரூபாய் 5 லட்சம் வரை இதன் மூலம் வழங்கப்படும். இதுவே ஓர் அரசால் ஏற்று நடத்தப்படும் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் ஆகும். கிராம சுயராஜ்ய அபியான் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஏப்ரல் 29-ஆம் தேதி ஆயுஷ்மான் பாரத் தினம் கொண்டாடப்படுகிறது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

இந்த திட்டத்தின் மூலம் குடும்பம் ஒன்றிற்கு ஆண்டுக்கு ரூ 5 லட்சம் வரையிலான சுகாதார பலன்கள் வழங்கப்படும். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார நடைமுறைகளை இந்த திட்டம் கவனித்துக் கொள்ளும். இதன் மூலம் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உள்ளிட்ட யாரும் உரிய சிகிச்சை வழங்கப்படாமல் விடப்பட மாட்டார்கள். குடும்பத்தின் அளவு, வயது என்ற எந்த வரம்பும் இந்த திட்டத்தில் கிடையாது. மருத்துவமனைக்குச் செல்லத் தேவையான போக்குவரத்துச் செலவும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்பது இத்திட்டத்தின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நாடெங்கும் உள்ள நோயாளிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எவ்வித ரொக்கப் பரிமாற்றம் செய்யாமல் சிகிச்சை பெற இயலும். இந்த ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதாரப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் தகுதி பெற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் கீழ்  பொருளாதார ரீதியாக பின் தங்கிய, ஒரு அறை மட்டும் கொண்ட வீட்டில் வசிக்கும், 16 முதல் 59 வயதிற்குட்பட்ட பெரியவர் உறுப்பினர் இல்லாத குடும்பத்தினர், 16 முதல் 59 வயதிற்கு உட்பட்ட ஆண் உறுப்பினர் இல்லாத பெண்கள் தலைமையில் இயங்கும் குடும்பத்தினர், உடல் ஊனமுற்ற, மற்றும் வேலை செய்யும் உடல் திறன் இல்லாத உறுப்பினர் கொண்ட குடும்பங்கள், பழங்குடியின மற்றும் ஷெட்யூல்டு வகுப்பினர் குடும்பங்கள், நிலமற்றவர்கள், வீடு இல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள், பிச்சை எடுத்து பிழைப்பவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் குடும்பத்தினர், பழங்குடியின குழுக்கள், சட்ட ரீதியாக விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் என ஊரகப் பகுதியில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பலன் அடைவர். நகர் புறங்களில் வசிப்பவர்களுக்கு 11 வகையான தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதி உடையவர்கள் ஆகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சைகளைப் பெற அரசு நிர்ணயித்த தொகையின் கீழ் சிகிச்சைகள் வழங்கப்படும். அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கியதாக இந்த தொகை அமையும். நோயாளிகள் எவ்வித ரொக்கமும் செலுத்த வேண்டியதில்லை. காகித பரிவர்த்தனையும் இல்லாது இந்த திட்டத்தின் கீழ் பலன்கள் வழங்கப்படும். இந்த தொகைக்கான வரம்புகளில் திருத்தங்களைக் கொண்டு வர மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் மக்கள் தொகையில் 40 சதவீத மக்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிகிச்சை செலவை கட்டுப்படுத்த சிகிச்சைக்கான மொத்த செலவும் (அரசு முன்னதாகவே நிர்ணயித்துள்ளபடி) ஒரே தொகுப்பாக்கப்படும். இந்த தொகுப்புக்குள் சிகிச்சைக்கான அனைத்து செலவினங்களும் அடங்கும். பயனாளிகள் ரொக்கமாகவோ, காகித மூலமாகவோ பரிவர்த்தனை செய்ய தேவையில்லை. இந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செலவினங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள்/ யூனியன் பிரதேசங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம்.

கூட்டாட்சி ஒத்துழைப்பையும் மாநிலங்களுக்கு நெகிழ்வுத் தன்மையையும் வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று. மாநிலங்கள், ஒருங்கிணைப்பின் மூலம் பங்களிப்பாளர்களாக மாற்றுவதற்கு இதில் விதி உள்ளது. தற்போதைய சுகாதார காப்பீடு மத்திய அமைச்சரவைகள், துறைகள் மற்றும் மாநில அரசுகளின் துறைகள் (சொந்த செலவில்) ஆகியவற்றுடன் இணைப்பதை இது உறுதி செய்யும். தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கத்தை விரிவுபடுத்தவும் அனுமதிக்கப்படுகிறது. எந்த முறையை ஏற்றுக் கொள்வது என்பதை மாநில அரசுகளே முடிவு செய்யலாம். காப்பீடு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது அறக்கட்டளை/ சங்கம் அல்லது இரண்டும் இணைந்த முறையிலோ இதனை நிறைவேற்றலாம்.

எந்த திசையில் செல்வது என்பதற்கான கொள்கை வழியையும் மத்திய அரசுக்கும். மாநில அரசுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தலைமையின் கீழ் ஆயுஷ்மான் பாரத தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்க கவுன்சில் ஒன்றை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத பாதுகாப்பு இயக்க நிர்வாக குழுவின் செயலாளர் இணைத் தலைவராகவும், நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்), நிதி ஆலோசகர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் செயலாளர் மற்றும் இயக்குனர் ஆயுஷ்மான் பாரத தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் இதில் இடம் பெறுவார்கள். இதன் தலைவராக முழு நேர தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் இந்திய அரசின் செயலாளர் அல்லது கூடுதல் செயலாளர் நிலையில் இருப்பார். மாநில சுகாதார துறை செயலாளர்களும் உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள்.

மாநில சுகாதார முகமை மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம். தற்போதைய அறக்கட்டளை/ சங்கம்/ லாப நோக்கமில்லாத நிறுவனம்/ மாநில சுகாதார முகமை போன்றவை மூலமாகவும் இதனை நிறைவேற்றி மாநில அரசு இதனை கண்காணிக்கலாம். மாவட்ட அளவிலும் இதனை நிறைவேற்ற தனி அமைப்பு ஏற்படுத்துவது அவசியம்.

இதற்கான நிதியை மாநில சுகாதார முகமை உரிய நேரத்தில் பெறுவதற்கு மத்திய அரசின் நிதி ஆயுஷ்மான் பாரத தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கம் மூலமாக மாநில சுகாதார முகமைக்கு மூன்றாவது கணக்கின் மூலம் நேரடியாக வழங்கப்படும். இதற்கு இணையான தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் மாநில அரசு பங்களிப்பாக வழங்க வேண்டும்.

நிதி ஆயோக் பங்களிப்புடன் நவீன கையடக்கமான, துரிதமான தகவல் தொழில்நுட்ப சாதனம் ஒன்று அமைக்கப்பட்டு ரொக்கம் அல்லது காகிதமற்ற பரிவர்த்தனையை உறுதி செய்யும். மோசடியோ, துர்பிரயோகமோ நடக்காமல் இதன் மூலம் தடுக்கப்படும். குறைகள் தீர்க்கும் அமைப்பின் மூலம் இது உறுதி செய்யப்படும். இது தவிர இந்த முறை தவறாக பயன்படுத்தப்படாமல் தடுப்பதற்கான அங்கீகாரமும் இதில் கட்டாயமாகும்.

இந்த திட்டம் யாருக்காக உருவாக்கப்பட்டதோ, அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் இதன் பலன் கிடைப்பதை உறுதி செய்ய, பத்திரிகைகள், மின்னணு ஊடகங்கள், சமூக ஊடகங்கள், பாரம்பரிய ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்கள் வாயிலாகவும், இதர வழிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

இதனால் ஏற்பாடும் முக்கிய விளைவுகள்:

கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் உள் நோயாளிகளுக்கான செலவீனம் சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இவற்றில், 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட செலவுத் தொகை, சம்பந்தப்பட்ட நபரின் வருமானத்திற்கு அதிகமாக செலவிடுவது. கிராமப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது குடும்ப வருமானம்  / சேமிப்பில் 68 சதவீத அளவிற்கும், 25 சதவீதம் கடன் வாங்கியும் செலவு செய்கின்றனர். நகர்ப்புற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வருமானம்  / சேமிப்பில் 75 சதவீதமும், 18 சதவீதம் கடன் வாங்கியும் மருத்துவமனைகளுக்கு செலவிடுகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக மருத்துவச் செலவு செய்வதன் காரணமாக, இந்தியாவில் உள்ள சுமார் 60 லட்சம் குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.  

ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கம், இதுபோன்ற வருவாய்க்கு அதிகமான செலவுகளை குறைக்க, கீழ்கண்ட வகைகளில் உதவும்:

(i) மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேருக்கு மேம்பட்ட சுகாதார வசதிகளை அளித்தல்

(ii) அனைத்து இடைநிலை மற்றும் பெரும்பாலான மூன்றாம் நிலை மருத்துவச் செலவுகளை ஈடுகட்டுதல்

(iii) ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான செலவுகளை ஈடுகட்டுதல்

இதுபோன்ற நடவடிக்கைகள், தரமான சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்யும். அத்துடன், பணப் பற்றாக்குறை காரணமாக, மக்களால் எதிர்கொள்ள முடியாத தேவைகளையும் பூர்த்தி செய்யும். மேலும், குறித்த காலத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்கச் செய்தல், உடல்நலம், முன்னேற்றம், நோயாளிகளின் மனநிறைவு, உற்பத்தி மற்றும் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.

இதனால் அரசுக்கு ஏற்படும் செலவினம்:

நிதி அமைச்சகத்தின் வழிகாட்டு நெறியின்படி குறிப்பிடப்பட்டுள்ள விகிதாச்சாரத்தில் இதற்காகும் பிரீமியம் தொகை மத்திய, மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும். காப்பீடு திட்டம் மூலம் நிதி ஆயுஷ்மான் பாரத தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கம் நிறைவேற்றப்படும். மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் இதற்கான பிரீமியம் தொகையை பொறுத்தே மொத்த செலவும் அமையும். அறக்கட்டளை/ சங்கம் மூலம் இந்த திட்டத்தை நிறைவேற்றும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு ஆகும் உண்மை செலவு அல்லது பிரீமிய வரம்பு (எது குறைவோ) அடிப்படையில் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சாரத்தில் மத்திய நிதி வழங்கப்படும். முதல் ஆண்டு பிரீமியம் தொகை, குறைந்தபட்சம், 20 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. இது, இரண்டாவது ஆண்டில், 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.அதனால், ஒரு குடும்பத்துக்கு, முதல் கட்டமாக, பிரீமியம் தொகை, 2,000ரூபாயாக இருக்கும். அடுத்து வரும் ஆண்டுகளில், 5,000 ரூபாயாக உயர வாய்ப்பு உள்ளது. எந்த நோய் பாதிப்பும் இல்லாத காப்பீடுதாரர்களுக்கு, மருத்துவ காப்பீடுபிரீமியம் தொகையை, காப்பீடு நிறுவனங்கள், குறைவாக வசூலிக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

இதில் பயன்பெறும் பயனாளிகள் எண்ணிக்கை:

அண்மையில் கிராமங்களில், நகரங்களில் எடுக்கப்பட்ட சமூக-பொருளாதார வகுப்பு கணக்கீட்டின்படி ஆயுஷ்மான் பாரத தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கம் ஏழை மக்கள், நலிவுற்ற கிராமப்புற குடும்பங்கள், அடையாளம் காணப்பட்ட நகர்ப்புற தொழிலாளர் குடும்பங்கள் என்ற 10.74 கோடி மக்களை இலக்காகக் கொண்டது. கிராமங்களில், நகரங்களில் எடுக்கப்பட்ட சமூக-பொருளாதார வகுப்பு கணக்கீட்டில் இடம் பெற்றுள்ள பிரிவுகள் நீக்கப்பட்டாலோ, சேர்க்கப்பட்டாலோ பொருந்தும் வகையில் இந்த திட்டம் உயிர் துடிப்புள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு:

இதில் இடம்பெற்றுள்ள நோய்களின் எண்ணிக்கையை, ஆண்டு தோறும் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சேர, பயனாளிகளுக்கு எந்த வரம்பும் விதிக்கப்பட மாட்டாது. மத்திய அரசின், ஆயுஷ் பாரத் திட்டம் செயல் படுத்தப்பட்டால், உலகளவில், இது மிகப் பெரும் காப்பீடு திட்டமாக இருக்கும். இத் திட்டத்தில், பிரீமியம் தொகையில், 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசுகளும் செலுத்த வேண்டும். நாடு முழுவதும், இத்திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. அத்துடன், இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும் நோய்களின் எண்ணிக்கை யும் அதிகரிக்கப்பட உள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டம், மக்களின் உடல் நலத்தை மேம்படுத்துவதுடன், அவர்களை வறுமையிலிருந்து மீட்கவும் உதவும் என்று உலகவங்கி தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில், அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, மூன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

  1. இத்திட்டத்தில், மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தரமிக்கதாக இருக்க வேண்டும். குறிப்பாக, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான், இத்திட்டத்தில் முக்கிய பங்காற்ற உள்ளன. அதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில், அடிப்படை வசதிகளுக்கு, எந்த குறைபாடும் இருக்கக் கூடாது.
  2. மேலும், மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதில், நர்சுகளும், சுகாதாரத் துறை ஊழியர்களும், பெரும் பங்கு வகிக்கின்றனர். அதனால், அவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
  3. இந்தியாவில், மருத்துவத் துறையில், தனியார் மருத்துவமனைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. நாட்டில், 70சதவீத மக்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். அதனால், இங்கு வழங்கப்படும் சிகிச்சை, தரமிக்கதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், செலவையும் அதிகரிக்கக் கூடாது. அப்போது, இத்திட்டத்தின் பயனை, மக்கள் முழுமையாக அனுபவிக்க முடியும்; திட்டமும் வெற்றி பெறும்.

இறுதியாக:

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முதல் பகுதியின் கீழ், 2022-ஆம் ஆண்டுக்குள்ளாக 1.5 லட்சம் சுகாதார மையங்களை அரசு திறக்கும். அவற்றில், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புற்றுநோய், வயோதிகம் காரணமாக ஏற்படும் நோய்கள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வசதிகள் இருக்கும்.
2-ஆவது பகுதியின் கீழ், தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் எல்லையை விரிவுபடுத்தப்படுவதுடன், அதன் கீழ் வரும் பயனாளிகளை அடையாளம் காண்பதை வரையறுப்பதற்கான இறுதிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

Share