Image from Asia TV News - Proposed Jaya Memorial near to MGR square

கலைஞர் திரு மு. கருணாநிதி அவர்களின் மறைவை அடுத்து அவருக்கு மெரினாவில் சமாதி அமைக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. மெரினாவில் நினைவகங்கள் மற்றும் சமாதிகள் அமைக்கக்கூடாது என்று பதியப்பட்ட வழக்குகளை காரணம் காட்டியது மாநில அரசு. பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது திமுக. உயர் நீதிமன்றம் வழக்கை அவசரமாக விசாரித்து, மெரினாவில் கலைஞருக்கு சமாதி அமைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கப்படாததற்கு பல காரணங்கள் தமிழக அரசால் முன்வைக்கப்பட்டன. தற்போது கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது, முன்னாள் முதல்வர்கள் மூதறிஞர் ராஜாஜி மற்றும் கர்ம வீரர் காமராஜரின் மறைவின் போது, கலைஞர் எப்படியெல்லாம் நடந்துகொண்டார் என்பது நினைவு படுத்தப்பட்டுள்ளது.

ராஜாஜி டிசம்பர் 1972-ல் காலமானார். காமராஜர் அக்டோபர் 1975-ல் காலமானார். இருவரும் தேசியவாத கொள்கைகளை பின்பற்றியவர்கள். ராஜாஜி அவர்களின் ஸ்வதந்த்ரா கட்சி, திமுக வுடன் கூட்டணியில் இருந்தது.

Advertisement

ராஜாஜியின் கொள்ளு பேரன் திரு. சி.ஏ.கே. கேசவன் கூறுகையில் ராஜாஜி தனது விருப்பப்படி தகனம் செய்யப்பட்டதாக கூறினார்.

1971-76 ஆண்டுகளில் ஸ்வதந்த்ரா கட்சியின் தலைவராக இருந்த எச்.வி.ஹேண்டே, ராஜாஜியிற்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதற்கு எந்தவொரு கோரிக்கையும் முன் வைக்கப்படவில்லை என்றார். இறுதி சடங்கு முடிந்த பிறகு, “ராஜாஜியின் நினைவை போற்றுவதற்காக ஒரு ‘மணிமண்டபம்’ வேண்டும் என்பது தான் கலைஞருக்கு நாங்கள் கொடுத்த கோரிக்கை.ராஜாஜியை  கௌரவிக்கும் விதமாக, திரு.கருணாநிதி உடனடியாக எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்”, என்று கூறினார்.

ஆனால், காமராஜரைப் பொறுத்த வரையில், மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய குறிப்பிட்ட கோரிக்கை இருந்தது. காங்கிரஸ் (அமைப்பு) மாநில பொதுச் செயலாளர் திண்டிவனம் கே. ராமமூர்த்தி கூறும் போது, “பழ நெடுமாறன், கண்ணதாசன் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர் இந்த கோரிக்கையில் மிகவும் உறுதியாக இருந்தனர்,” என்று அவர் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை அவர்களின் நினைவிடத்தைப் பாதுக்கப்பதே  கடினமாக இருக்கிறது என்ற கூறி கலைஞர் திரு.கருணாநிதி இதை ஏற்றுக் கொள்ளவில்லை. கடலுக்கு அருகாமையில் இருப்பதை காரணம் காட்டி கலைஞர் அன்று மறுத்ததாக கூறப்படுகிறது. ஆட்சியில் இருப்பவர்கள் இறந்தால் மட்டுமே மெரினா என்று கூறி எந்த விதியையும் மேற்கோளிட்டுள்ளாரா என்ற கேள்விக்கு “இல்லை” என்று பதில் கூறினார் திண்டிவனம் கே. ராமமூர்த்தி. காந்தி மண்டபம் வளாகத்தின் மேற்கு பகுதியை தேர்வு செய்வதற்கு காங்கிரஸ் (O) தலைவர்களை சம்மதிக்க வைத்தார் கலைஞர் திரு.கருணாநிதி.

காந்தி மண்டபத்தை ஏற்றுக் கொள்ளுமாறு  சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான கே. ராஜராம் நாயுடு முதலில் கூறினார். இதையொட்டி, இந்த இடத்தை ஏற்றுக் கொள்ளும்படி தனது கட்சிக்காரர்களிடம் தெரிவித்த ராஜராம், இந்த விஷயத்தை சுமூகமாக முடிக்க எண்ணினார் என்று கூறப்பட்டது.

தமிழக முதல்வர்களாக இருந்து சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படாத முன்னாள் முதல்வர்களையும் தமிழகம் கொண்டுள்ளது.

அவர்களின் பட்டியல்..
பனகல் ராஜா
பி. சுப்பராயன்
பி. முனுசுவாமி நாயுடு
ராமகிருஷ்ண ரங்காராவ்
பி.டி. இராஜன்
கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு
சி. இராஜகோபாலாச்சாரி
த. பிரகாசம்
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
பூ. ச. குமாரசுவாமி ராஜா
கே. காமராஜ்
எம். பக்தவத்சலம்
இரா. நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)
ஜானகி இராமச்சந்திரன்

இவர்களும் நமது முன்னாள் முதல்வர்கள் தான்.

கலைஞர் கருணாநிதி வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்கையில், முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் மறைந்த போது, அப்போது அவருக்கு மெரினாவில் இடம் அளிக்க அப்போதைய முதல்வர் கலைஞர் மறுத்துவிட்டார் என்று வாதிட்டுள்ளது.

தமிழக முதல்வர்களாக இருந்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என 3 பேருக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கடற்கரையை நினைவிடங்களாக மாற்றிவிடுவார்களோ என்று அஞ்சி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது. இனி மெரினா கடற்கரையில் யாருடைய நினைவிடத்தையும் அமைக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நிலுவையில் இருக்கும் நிலையில்தான் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்தார். ஆனால் எந்த பெரிய சட்ட சிக்கல்களையும் சந்திக்காமல் எம்ஜிஆர் நினைவிடத்திலேயே ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்டு நினைவிடமும் கட்டப்பட்டு வருகிறது.

ஆக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கொண்டு மெரினாவில் இடம் அளிப்பதில் இரட்டை வேடம் போட்டுள்ளன. ஆனால், தற்போது அதிமுக அரசியல் நாகரிகத்தை பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டப்படுவது நடுநிலையான விமர்சனமாக தென்படவில்லை.

Share