செய்திகள்

பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேர் நேரில் ஆஜராக சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவு

பி.எஸ்.என்.எல் சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் மீதும், வரும் 17ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த 2004-2007-ம் ஆண்டுகளில் சட்டவிரோத அதிவேக உயர் இணைப்புகளை தனது சொந்த நிறுவனத்திற்கு பயன்படுத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளார் என்று சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது.  இந்த இணைப்புகளை தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவிக்கு பயன்படுத்தியதாகவும் இதனால் அரசுக்கு ரூ1.78 கோடி  இழப்பு என்பதும் வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி  சிபிஐ விசாரணை நடத்தியது. சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் 2016-ம் ஆண்டு டிசம்பரில் தயாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக  சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜன் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதியன்று தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். தற்போது தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. சி.பி.ஐ.யின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. சமர்ப்பித்த ஆதாரங்கள் போதுமானவை என்று தெரிவித்தது.

குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, 7 பேரும் வழக்கை சந்திக்க வேண்டும் எனக் கூறினார். சி.பி.ஐ. நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீண்டும் பதிவு செய்து சாட்சி விசாரணையைத் தொடங்கவும், விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, இந்த வழக்கு, சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக, வரும் 17-ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி, அன்றைய தினத்தில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

Tags
Show More
Back to top button
Close
Close