சென்னை பெரியமேட்டில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 300 கிலோ கன்றுக்குட்டி கறியைப் பறிமுதல் செய்துள்ளதாக பாலிமர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. அவை சிக்கன், மட்டன் எனக் கூறி சாலையோர கடைகள் மூலம் விற்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை பெரிய மேட்டில் நேவல் மருத்துவமனை சாலையில் உள்ள கறி க்கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை சென்னை மண்டல நியமன அதிகாரி கதிரவன் உத்தரவின் பேரில் அதிரடி சோதனை அதிகாரிகளால் நடத்தப்பட்டதாக அந்த செய்தி குறிப்பு கூறுகிறது. அப்போது, குளிரூட்டும் பெட்டியில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த கறிகளையும், அங்கிருந்த கால்களையும் ஆய்வு செய்ததில் அவை கன்றுக்குட்டிகளின் கறிதான் என  அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  இந்த கன்றுக்குட்டி கறியை பாக்கெட்டுக்களில் அடைத்து சாலையோரகடைகளுக்கு விற்கப்பட தயாராக வைத்திருந்ததையும் கண்டறிந்தனர். மேலும் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டும், அரவை இயந்திரத்தில் நன்கு அரைத்த நிலையிலும் இருந்ததை அடுத்து அதுகுறித்த விசாரணையை மேற்கொண்டனர்.

இதையடுத்து, 300 கிலோ கன்றுக்குட்டி கறி, பிரியாணி மசாலா பாக்கெட்டுகள், சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த இஞ்சி பேஸ்ட் உள்ளிட்டவற்றை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மாநகராட்சி பதிவுப்படி இறைச்சிக் கடையை நடத்தும் முகமது உமர் மீதும், அவரது தந்தை ஸப்ருல்லா மீதும் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

வாணியம்பாடியில் இருந்து 3 அல்லது 4 துண்டுகளாக வெட்டப்பட்டு சென்னைக்கு கொண்டுவரப்படும் கன்றுக்குட்டி, கிலோ ஒன்றுக்கு 150 ரூபாய் முதல் விற்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது.

சட்டப்படி மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் கீழ் அரசு ஒதுக்கிய இறைச்சிக் கூடங்களில் மட்டுமே ஆடு, மாடுகளை வெட்ட வேண்டும். ஆனால், கன்றுக் குட்டிகளை இறைச்சிக்கு வெட்டக் கூடாது என்ற விதியை மீறி அவற்றை வெட்டினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் என்று வேறொரு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

கன்றுக்குட்டி கறிகளை பெரியமேடு, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பல சாலையோர கடைகளுக்கு விற்றது தெரியவந்துள்ளது. கன்றுக்குட்டி கறியை, கோழிக்கறி, ஆட்டுக்கறி எனக் கூறி பிரியாணி, சில்லி சிக்கன், கோலா உருண்டை உள்ளிட்ட விதவிதமான உணவுப் பொருளாக மாற்றி வாடிக்கையாளர்களுக்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Picture Courtesy : Polimer

Share