பட்டியல் சமூகத்தவர்கள் அனுபவித்த தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்ட முதலில் 1955-ல் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் தனியாக கொண்டுரப்பட்டது. பின்பு அது குடியுரிமை பாதுகாப்புச் சட்டமாக உருமாறியது. பட்டியல் சமூகத்தவருக்கு இதில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருந்ததால் பல பட்டியல் சமூகத் தலைவர்களின் கடுமையான போராட்டத்திற்கும் நெருக்கடிகளுக்கும் பிறகு காங்கிரஸ் அரசால் 1989-ல் எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதிலேயும் பல குறைபாடுகள் இருந்தன. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கே பல ஆண்டுகள் ஆயின. பல தடைகளைக் கடக்க வேண்டியிருந்தது. அங்கங்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டு தடுக்கப்பட்டது. பல்வேறு தடைகளை கடந்து கடைசியாக 1995-ல் நடைமுறைக்கு வந்தது இந்தச் சட்டம்.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்தும்கூட பட்டியல் சமுதாயத்திற்கு ஏற்படும் வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. வழக்குகள் அதிகமாக பதிவானாலும்கூட அதை நீர்த்துப்போகும் அளவிற்கு மாநில அரசாங்கம் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் இருக்கின்றன.

இந்தியா முழுவதும் தொடர்ந்து எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை இன்னும் கடுமையானச் ஷரத்துகளைச் சேர்த்து வலிமைப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்தன. அப்போது ஆண்ட காங்கிரஸ் அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டது. காங்கிரஸ் தொடர்ந்து ஆண்ட 10 வருடங்களில் அச்சட்டத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கண்டுக்கொள்ளவே இல்லை. கடைசியாக தங்கள் ஆட்சி முடியும் தருவாயில் பட்டியல் சமூக மக்களிடம் அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்கு பெற வேண்டும் என்ற காரணத்திற்காக சில ஷரத்துகளை சேர்த்து 2014 பிப்ரவரில் பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பியது.

2014 மே மாதம் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி மத்தியில் அமர்ந்தது. ஆட்சி அமைத்த ஒருவருடத்திற்குள்ளாகவே பா.ஜ.க அரசு எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்ட திருத்த மசோதாவை 2015-ல் கொண்டு வந்தது. பா.ஜ.க-வின் சமூகநீதி அமைச்சர் தாவர்சந்த் கெலாட் 2015 ஆகஸ்ட் மாதம் மக்களவையில் புதிய திருத்தங்களை நிறைவேற்றினார். டிசம்பர் மாதம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2015, டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார். இது குறித்து மத்திய அரசிதழில் 2016 ஜனவரி 1-ம் தேதி உடனடியாக அறிவிப்பு வெளியானது. ஜனவரி 26-ம் தேதி இச்சட்டம் அமலுக்கு வந்தது.

பா.ஜ.க அரசு கொண்டுவந்த புதிய திருத்தங்கள் வெகுமுக்கியத்துவம் வாய்ந்தவை. பட்டியல் மற்றும் பழங்குடி சமுதாய மக்கள் பல்வேறு நிலைகளில் வெளியில் தெரியாமல் அனுபவித்து வரக்கூடிய கொடுமைகளை களைய கூர்மையான பார்வையுடன் இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

1. ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேகமான சிறப்பு நீதிமன்றங்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளை விசாரிக்க அமைக்கப்படும்.

2.அந்த பிரத்யேக சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு அரசு வழக்கறிஞர் மற்றும் ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞர் இருப்பார்கள்.

3.வன்கொடுமை வழக்குகளை இரண்டு மாதங்களுக்குள் இந்த நீதிமன்றங்கள் முடிக்க வேண்டும்.

4.உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் மேல்முறையீடுக்கு போனால் 3 மாதத்திற்குள் தீர்ப்பைச் சொல்ல வேண்டும்.

5.அரசு ஊழியர்கள் பட்டியல் சமுதாய மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யவில்லை என்றால் 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை தண்டனை கிடைக்கும்.

6.பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு 6 மாதங்கள் முதல் 5 வருடங்கள் வரை சிறைத்தண்டனை.

7.ஊர் விலக்கம் செய்வது போன்ற ஒட்டுமொத்த ஆதிக்க சாதியினர் செய்யும் குற்றங்களுக்கு ஊருக்கே ஒட்டு மொத்தமாக அபராதம் விதிக்கப்படும்.

8.வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியல் சமுதாயத்திற்கு பாதுகாப்பும் மறுவாழ்வும் ஏற்படுத்தித்தருவது மாநில அரசின் பொறுப்பாகும்.

9.வன்கொடுமை வழக்குகளில் சாட்சிகளாக இருப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும்.

10.செருப்பு மாலை போடுவது, கட்டாயப்படுத்தி மலம் அள்ளச் சொல்லுவது போன்ற குற்றங்கள் பட்டியல் சமுதாயத்திற்கு எதிரான வன்கொடுமைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டதிருத்தத்தில் உள்ள முக்கிய அம்சங்களாக, கூடுதலாக வன்கொடுமை குற்றங்களாக சேர்த்திருக்கிறார்கள். ஏற்கனவே இருந்த சட்டத்தின்படி, வன்கொடுமை வழக்குகள் சாதாரணமான வழக்குகளாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும். இனிமேல், வன்கொடுமை சட்டத்தின் கீழ் வன்கொடுமை வழக்குகளை பதியாத காவல்துறையினருக்கு 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை தண்டனை கிடைக்கும். பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது இதனுடைய சிறப்புஅம்சங்கள் ஆகும்.

அதேபோல தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் கடுமையான முறையில் தண்டனைக்கு உள்ளாக்கப்படும் என்றும் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்த ஷரத்துகளாகும்.

பா.ஜ.க அரசு சட்ட திருத்தங்களை கடுமையாக ஷரத்துகளுடன் கொண்டு வந்ததுடன் நிற்காமல் அதை தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டது. எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை இந்திய மாநிலங்கள் கடுமையாக கடைபிடிக்க 17-2-2016 மற்றும் 3-6-2016 ஆகிய தேதிகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூகநீதித்துறை முதன்மைச் செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இச்சட்டத்தை ஆய்வு செய்யும் 24வது கூட்டம் தாவர்சந்த் கெலாட் தலைமையில் 2018 ஜனவரி மாதம் 30ம்தேதி நடைபெற்றது. இதுபோலக் கூட்டங்கள் காங்கிரஸ் ஆண்டபோது தொடர்ந்து நடைபெறவில்லை.

மார்ச் 20, 2018 அன்றுஉச்சநீதிமன்றம் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வீரியத்தை குறைக்கும்வகையில் ஒரு தீர்ப்பை வெளியிட்டது.

1.வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கு தொடக்க விசாரணை நடத்தப்பட்டு 7 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

2.தொடக்க விசாரணை நடத்தப்பட்டு, வழக்கு பதிவுசெய்யப்பட்டாலும், கைது கட்டாயமல்ல.

3.குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசு ஊழியராக இருந்தால், அவன்/அவளின் நியமன நிர்வாகத்தின் அனுமதியி பெற்ற பின்னரே கைது செய்ய வேண்டும்.

4.அரசு ஊழியராக இல்லாத பட்சத்தில் அவன்/அவள் மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் அனுமதியோடு மட்டுமே கைது செய்யப்படலாம்.

5.கைது செய்வதற்கு முன்கூட்டியே பிணை வழங்கப்படுவது இல்லை என்று இந்த சட்டத்தின் பிரிவு 18 கூறினாலும், இந்திய உச்சநீதிமன்றம், கைதுக்கு முன்னரே பிணை பெறுவதை அறிமுகப்படுத்தியுள்ளது.

6.வன்கொடுமை தடுப்பு சட்ட நடைமுறை சாதியை வளர்ப்பதற்கு பங்காற்றுவதாக அமைந்து விடக்கூடாது. இதனால் சமூக ஒற்றுமைக்கும், அரசியல்சாசன மதிப்பீடுகளுக்கும் எதிர்மறையாக பாதிப்பு ஏற்படும். இது பற்றிய கவலைகளை எழுப்பவது அவசியமாகும். 14-16 சட்டப்பிரிவு உட்பட அரசியலமைப்பு சட்டம் அதன் முன்னுரையில் சாதி அல்லது மதத்திற்கு அப்பாற்பட்ட சமத்துவத்தை உறுதிப்படுத்துகிறது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு பட்டியல் சமூகத்தவருக்கு பேரிடியாக அமைந்தது. ஏற்கனவே புகார் கொடுத்தாலும் அதை எடுத்துக்கொள்வதில்லை எனும்போது இப்படிப்பட்ட தீர்ப்பு பட்டியல் சமூகத்தவருக்கு பாதிப்பாகவே அமையும் என்று கருதி பல்வேறு போராட்டங்கள் வடமாநிலங்களில் நடத்தப்பட்டது.

பா.ஜ.க-வின் சமூகநீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் உடனடியாக சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி மனுதாக்கல் செய்வது தொடர்பாக கடிதம் எழுதினார். அதில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் என்றே கருதுகிறேன். எனவே அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மனுதாக்கல் செய்வதே சரியான முடிவாக இருக்கும் என்று குறிப்பிட்டார். மார்ச் 28-ம் தேதி மத்திய அமைச்சர் தாவர்சந்த் மற்றும் பாஸ்வான் தலைமையில் பிரதமர் நரேந்திரமோடி அவர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கினர்.

இதன்காரணமாக, ஏப்ரல் 2-ம் தேதியே பா.ஜ.க-வின் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் 3-ம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் சார்பில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனிநபர் ஒருவரையும், அரசு ஊழியரையும் உடனடியாக கைது செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்பது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21 வழங்கிய உரிமைக்கு விரோதமானது, அரசியலமைப்புச் சட்டம் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு வழங்கிய சிறப்புரிமைகளை இந்தத் தீர்ப்பு நீர்த்துப்போகச் செய்யும். எதிர்காலத்தில் பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறைகள் இந்தத் தீர்ப்பினால் அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இதுபற்றி விரிவான விசாரணை நடத்தும் என்று தெரிவித்துவிட்டது.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்கள் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தன. கேரளாவும் தமிழ்நாடும் கூட சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தன. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் இதை கண்டுக் கொள்ளவேயில்லை. காங்கிரஸ் அந்த மாநிலங்களுக்கு சீராய்வுமனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட வைக்கவில்லை.

கடந்த ஏப்ரல் – மே மாதமே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மூத்த அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அவசர சட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதற்கிடையில், “பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை நீர்த்து போக விடமாட்டோம்” என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்திருந்தார்.

ஆகஸ்ட் 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்றம் நீக்கிய கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெற செய்வதற்கு வழிவகுக்கும் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதாவை நடப்பு மழைக்கால கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்வதற்கு பா.ஜ.க-வின் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பட்டியல் சமூகத்தவருக்கு தான் உறுதி அளித்திருந்ததை நிறைவேற்றியிருக்கிறார் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி.

Share