தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவதற்காக, ₹12,400 கோடி செலவில், 2017-18 ஆண்டிற்கான 66 திட்டங்கள் தமிழகத்திற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்ஷுக் மண்டாவியா வியாழக்கிழமை அன்று தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரேஸ் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பிற புதிதாக அங்கீகரிக்கப்பட்ட சாலை திட்டங்களை விரிவுபடுத்துவது குறித்து அ.தி.மு.க எம்.பி நாதன் நாடாளமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்கு, முன்னுரிமை மற்றும் நிதியின் அடிப்படையில் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் பதிலளித்தார்.

“சென்னை மற்றும் கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை சாலையில், 150 கி.மீ தொலைவிற்கு கட்டுமானத்திற்காக ₹5,470 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 610 கி.மீ தொலைவிற்கு நான்கு வழி சாலைக்கான ஒரு விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. ஒவ்வொரு திட்டமும் செயல்படுத்தப்பட்டு முடிவதற்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

விக்கரவாண்டி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் – நாகப்பட்டினம், ஸ்ரீபெரும்புதூர் – வாலாஜா, மதுரை – இராமேஸ்வரம், சென்னை – தடா சாலை, திருச்சி-சிதம்பரம், மாமல்லபுரம்-புதுச்சேரி மற்றும் மேலூர்-காரைக்குடி நான்கு-வழிப்பாதை ஆகிய சாலைகள் இதில் அடக்கம். கூடுதலாக, 16 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கான திட்டத்தையும் மத்திய மோடி அரசு செய்து வருகிறது.

Share