கடந்த ஆகஸ்ட் 1, 2018 அன்று தென்னிந்திய சர்க்கரை ஆலை சங்க  நிர்வாகிகள், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர். சந்திப்பின்  போது , கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதை எடுத்துக்கூறினர். இதை  தொடர்ந்து, தென்னிந்திய சர்க்கரை ஆலை சங்க தலைவர் Dr. பழனி G. பெரியசுவாமி அவர்கள் தமிழ் கதிரிடம் கூறியதாவது : ” உலகின் இரண்டாம் பெரிய சர்க்கரை உற்பத்தி நாடாக இந்தியா விளங்குகிறது. முதலாம் இடத்தில் பிரேசில் உள்ளது. ஆனால்  சர்க்கரையை  உபயோகிப்பதில் இந்தியா முதிலிடம் வகிக்கிறது. சராசரியாக, 2.5 கோடி டன் சர்க்கரை இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான ஒரு ஆண்டை சர்க்கரை அரவை பருவம் என்று குறிப்பிடுவார்கள். 2013 – 2014 ஆண்டுகளில், தேவைக்கு அதிகமாகவே இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கரும்பிற்கான நியாமான மற்றும் ஆதாயமான விலையை  (FPR – Fair and Remunerative Price) அரசாங்கம் தான் நிர்ணயம் செய்கிறது. 2009-ஆம் ஆண்டு, ஒரு டன் கரும்பிற்கு ₹1,280.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது 2017-2018 ஆண்டிற்கான, ஒரு டன் கரும்பின் விலை ₹2,550 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2009-ஆம் ஆண்டு, ஒரு கிலோ சர்க்கரையின் விலை ₹29.50 ரூபாயாகவும், குவிண்டால் ஒன்றிற்கு ₹2,951 ரூபாயாகவும் இருந்தது. தற்போது 2018-இல் ஒரு கிலோ சர்க்கரையின் விலை ₹31.30 ரூபாயாகவும், குவிண்டால் ஒன்றிற்கு ₹3,130 ரூபாயாகவும் இருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில், சர்க்கரை விலை 6% மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் கரும்பின் விலை (FPR) இரட்டிப்பாகியுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில், நாடு முழுவதும் நல்ல கரும்பு உற்பத்தி இருந்து வருகிறது. சர்க்கரை உற்பத்தியில் தற்போது, உத்தர பிரதேசம், மஹாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன. தமிழகத்தில், 2011-12 ஆண்டுகளில், . 254.55 லட்சம் டன் கரும்பு உற்பத்தி இருந்த நிலையில், கரும்பு அரவையும் நன்றாக இருந்தது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டு காலமாக தமிழகத்தில் மழை சரியாக பெய்யவில்லை. 2016-ஆம் ஆண்டு இரண்டு பருவமழையும் பெய்யவில்லை. 2017-ஆம் ஆண்டு கடும் வறட்சி. நடப்பு ஆண்டு, கரும்பு அரவை பருவத்தில், 65 லட்சம் டன் கரும்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதாவது 25% கூட கரும்பு அரவை செய்யப்படவில்லை.

சராசரியாக, இந்தியாவில் ஒரு டன் கரும்பிற்கு, சர்க்கரை மீட்பு (Recovery) 10.77 சதவீதமாக இருக்கும். தமிழகத்தில்,  2011-ஆம் ஆண்டு 9.35 சதவீதமாக இருந்தது. நடப்பு ஆண்டில் வெறும் 8.71 சதவீதமாகவே இருக்கிறது. இதற்கு மேல், ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் இதர செலவுகள் சர்க்கரை ஆலைகளுக்கு இருக்கின்றது. நாடு முழுவதும் ஒரு கிலோ சர்க்கரை தயாரிக்க ₹24 ருபாய் ஆகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு கிலோ சர்க்கரை தயாரிக்க ₹38 ருபாய் ஆகிறது. கிட்டத்தட்ட ₹14-15 வரை நஷ்டம் ஏற்படுகிறது.

நாடு முழுவதும் சர்க்கரை உற்பத்தி நன்றாக இருப்பதால், சர்க்கரை விலை குறைவாகவே இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் வறட்சி காரணமாக சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சியை மையமாக கொண்டே சர்க்கரை ஆலைகள் இயங்குகின்றன. தமிழகத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள் 25 மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் 18 இயங்குகின்றன. சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டால், கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், 1 லட்சம் கிராமப்புற வேலை வாய்ப்புகள் இழக்கும் அபாயமும் ஏற்படும். இதற்கு நல்லதொரு தீர்வை மத்திய மோடி அரசாங்கம் வழங்கும் என்று நம்புகிறோம்”, என்று தெரிவித்தார்.

கரும்பு சக்கைகளின் மூலம் தயாரிக்கப்படும் எத்தனால், பெட்ரோலுடன் கலப்பது பிரேசில் நாட்டில் பின்பற்றப்பட்டு வருவதாகவும், இதனை இந்தியாவில் நடைமுறை படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

முன்னதாக, தென்னிந்திய சர்க்கரை ஆலை சங்க  நிர்வாகிகள், பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்த போது உடனிருந்த தமிழக பா.ஜ.க பொது செயலாளர் திருமதி.வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் கூறுகையில், “தமிழகத்தில் மட்டும் ஐந்து லட்சம் விவசாய குடும்பங்கள் மற்றும் ஒரு லட்சம் தொழிலாளர்கள் கரும்பு விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களாக ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக 20 சதவீதமே சர்க்கரை உற்பத்தி நடைபெற்றுள்ளது. தொடர்ச்சியாக சர்க்கரை ஆலைகள் மூடப்படும் நிலையை மாற்றுவதற்காக எடுத்த முயற்சிகள் பிரதம மந்திரியின் நேரடி பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டது.

உத்திர பிரதேசம், மகாராஷ்ட்ரா மாநிலத்தின் அதீத உற்பத்தி மற்றும் அவர்களின் நீர் வளம் இவற்றை தமிழகத்தோடு ஒப்பிட்டு பார்த்து தமிழகத்தின் கரும்பு விவசாயிகளை காப்பற்றுவதற்காக பிரதமர் தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டு இருக்கிறார். இதற்கு பெரும் துணை செய்த பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும், உடனிருந்த மத்திய அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

Share