கேரள முதல்வர் பினராயி விஜயன் வருகிற 19-ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து அவர் சிகிச்சை பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏகாபத்திய கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து வரும், இடதுசாரி சித்தாந்தம் பாடும் கம்யூனிஸ்ட் தலைவர் தனது கட்சி கொள்கைகளையும் மீறி அமெரிக்காவில் சிகிச்சை பெற செல்ல இருப்பது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வருகிற 19-ந் தேதி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். அங்குள்ள மினிசோட்டா ரோஸ்செஸ்டர் மயோ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெறுகிறார். அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார். சிகிச்சை முடிந்து வருகிற செப்டம்பர் மாதம் 6-ந் தேதி அவர் கேரளா திரும்புகிறார்.அவருடன் அவரது மனைவி கமலாவும் செல்கிறார். பினராயி விஜயன் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது தொடர்பான ஒப்புதல் கேட்டு மத்திய வெளியுறவுத்துறைக்கு அவரது பயணத்திட்டம் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்ததும் பினராயி விஜயன் அமெரிக்கா செல்கிறார்.

பினராயி விஜயனின் அமெரிக்க பயணத்தை அவரது தனி செயலாளர் ஜெயராஜா உறுதிப்படுத்தி உள்ளார்.பினராயி விஜயன் அமெரிக்காவில் சிகிச்சை பெற உள்ள ஆஸ்பத்திரி புற்றுநோய் சிகிச்சைக்கு புகழ் பெற்றது ஆகும். இதற்கு முன்பு முன்னாள் சபாநாயகர் கார்த்திக்கேயன், நடிகை மம்தா மோகன்தாஸ் ஆகியோர் இந்த ஆஸ்பத்திரியில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று உள்ளனர்.

விருது வாங்க சென்ற இடத்தில் விதி மீறியது:

சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி 17 பேர் உயிரிழந்தனர். இந்த நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பினராயி விஜயன் தீவிர முயற்சி எடுத்தார். இதனை பாராட்டி அவருக்கு அமெரிக்காவில் Institute of Human Virology in Baltimore என்ற அமைப்பு அவரை கவுரவப்படுத்தி விருது வழங்கி இருந்தது. இதற்காக அவர் அமெரிக்கா சென்று இருந்தபோது தான் கம்யூனிஸ்ட் கொள்கைகளை மீறி ஏகாபத்திய நாட்டில் உள்ள மருத்துவமனையில் முதற்கட்டமாக மருத்துவ பரிசோதனை செய்திருந்தார். தற்போது 2-வது கட்டமாக அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்கிறார்.

கம்யூனிஸ்டுகளின் வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்பு:

வெளிநாடுகளில் இருந்து முதலீடு வந்தாலோ அல்லது இந்திய முதலீடு வெளிநாட்டிற்கு சென்றாலோ கம்யூனிஸ்டுகள் கூறும் வார்த்தை இது. “இன்று அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்காமல், மக்கள் ஜனநாயக அரசு சாத்தியமாகாது. இந்த தளத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பாரம்பர்ய வரலாறு கொண்டது. அண்மைக்கால வரலாற்றிலும் கூட இந்திய அரசு அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்த பேரத்தில் இறங்கி,இந்திய இறையாண்மையை அடகு வைக்க முனைந்தபோது, உறுதியாக எதிர்த்த கட்சி.இந்தியாவில் துவக்க காலத்திலிருந்தே,ஏகாதிபத்திய சுரண்டல் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும்,இது நடந்துள்ளது. அந்நிய மூலதன அரசியல்,பொருளாதார,ஆதிக்கம் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும் என்ற கருத்தியல் பிரச்சாரம் ஒரு தத்துவமாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது’ என்று தங்கள் கருத்தியலை திணித்து தற்சார்பு பொருளாதாரம் என்ற மாயயை காட்டி மக்களிடத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இதன் ஒரு பகுதியாகவே அந்நிய முதலீடுகளை எதிர்ப்பது, அந்நிய மருத்துவ முறை பற்றி குறை கூறுவது என்ற போக்கை கடைபிடித்து வந்தனர். இப்போது அது மெல்ல மெல்ல தோய்ந்து பகுத்தறிவில் படம் காட்டிய தி.மு.க-வை போல, ஏகாபத்திய எதிர்ப்பில் ஒன்றும் செய்ய இயலா ஏதிலிகளாக மாறியுள்ளனர் கம்யூனிஸ்டுகள்.

ஆணையம் அமைத்தால் போராடுவோம்:

நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்வாகித்து வருகிறது. இதில் தொடர்ந்து பல்வேறு வகை ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால், அதன் மாற்றாக இந்திய மருத்துவ ஆணையம் எனும் பெயரில் ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டுவந்து அமலாக்க முயற்சிக்கிறது. ஆனால் இதனையும் கம்யூனிஸ்டுகள் எதிர்க்கின்றனர். இதனால் ஆங்கில மருத்துவம் கட்டாயமாக நுழைக்கப்படும் என்று கோஷமிடுகின்றனர். இறுதியில் அவர்களே ஆங்கில மருத்துவத்தை நோக்கியும், அவசரத்திற்கு ஏகாபத்திய நாடுகளை நோக்கியும் செல்ல வேண்டிய கட்டாயம் தான் ஏற்பட்டுள்ளது; காலம் தான் எவ்வளவு கொடியது.

Share