இந்தியாவில், 2010 முதல் 2017ஆம் ஆண்டு வரை எச்.ஐ.வி.யால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 27 சதவீதம் குறைந்து விட்டதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 21 லட்சம் பேர் எச். ஐ. வி. பாதிப்புடன் வாழ்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் மசோதா 2016­ல் திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் மசோதா 2014 எச்.ஐ.வி.-யுடன் வாழ்பவர்கள், எச்.ஐ.வி.-யினால் பாதிக்கப்பட்டவர்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கு என வரையப்பட்டது. இந்த மசோதாவின் பிரிவுகள் எச்.ஐ.வி. தொடர்பான பாகுபாட்டு பிரச்சினைகளை தீர்க்கவும், தற்போதுள்ள திட்டங்களை வலுப்படுத்தவும் வழிவகை செய்கிறது. சட்டப்படியான பொறுப்பு ஏற்கும் முறையையும், புகார்களை விசாரிப்பதற்கு முறையான அமைப்புகளை உருவாக்கவும், மக்கள் குறைகளை களையவும் இது உதவும்.

இந்த மசோதா எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் நோயை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் வகை செய்கிறது. மேலும் எச்.ஐ.வி. எயிட்ஸ் பாதித்த நபர்களுக்கு எதிரான பாகுபாட்டை தடைசெய்கிறது, அவர்களது சிகிச்சை தொடர்பாக அறிவார்ந்த சம்மதத்தை பெற்று ரகசியத்தை காக்க உதவுகிறது. நிர்வாகத்தினர் எச்.ஐ.வி. பாதித்தவர்களது உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்படுத்துகிறது.

புகார்களை களைவதற்கான அமைப்பை உருவாக்குகிறது. சுகாதார சேவைகள் கிடைப்பதை அதிகரிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது. எச்.ஐ.வி. தொடர்பான பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான அறிவார்ந்த சம்மதத்தையும், ரகசியத்தையும் இம்மசோதா உறுதி செய்கிறது. இதன் விளைவாக கடந்த சில ஆண்டுகளிலேயே குறிப்பிடத்தகு மாற்றம் நடந்துள்ளது. 2010ஆம் ஆண்டில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் 2017ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 88 ஆயிரமாக குறைந்து விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த 7 ஆண்டுகளில் எச்.ஐ.வி.யுடன் வாழ்ந்து கொண்டிருப்போரின் எண்ணிக்கை 23 லட்சத்தில் இருந்து 21 லட்சமாக குறைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் தொடர்பான மரணங்களும் ஒரு லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து 69 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டதாகவும் ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்சில் எச்.ஐ.வி. தொற்று பரவுவது அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reference: polimer, pmindia.gov.in

Share