இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றங்கண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இன்று காலை  மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 153 புள்ளிகள் உயர்ந்து 36 ஆயிரத்து 872 ஆக இருந்தது. இந்த அளவு இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். இதேபோல் தேசியப் பங்குச்சந்தை நிப்டி 52புள்ளிகள் அதிகரித்து 11ஆயிரத்து 137ஆக இருந்தது.

 

சென்செக்ஸ் ஜனவரி 29ஆம் தேதி வர்த்தகத்தின்போது 36,443 புள்ளிகளை எட்டியதே இதுவரை உச்ச அளவாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலைக்கு பிறகு இந்திய பொருளாதாரம் வலுவாக உயர்ந்து உள்ளது. குறிப்பாக இந்திய சில்லரை வர்த்தகத்துறை மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி போன்ற காரணங்களால் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அதன் தாக்கம் குறைந்து வருகிறது.

 

நடப்பு ஆண்டில் 7.4 சதவீத பொருளாதார வளர்ச்சியையும், 2019-ல் 7.8 சதவீத வளர்ச்சியையும் இலக்காக கொண்டு இந்தியா செயல்பட்டு வருவதாகவும் சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த பொருளாதார மற்றும் வர்த்தக ஆராய்ச்சி மையம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறும் என கடந்த ஆண்டு கூறியிருந்தது. மேலும், 2032 ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதன் தாக்கம் பங்கு சந்தையில் எதிரொலித்துள்ளது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டியது ஆகிய காரணங்களால் பங்குச்சந்தைகள் எழுச்சியுடன் காணப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Share