செய்திகள்

தனது சொந்த தொகுதியிலேயே T.T.V தினகரனுக்கு எதிர்ப்பு : ₹20 டோக்கனால் ஏற்பட்ட வினை!

ஆர்.கே.நகர் தொகுதி M.L.A, திரு. T.T.V தினகரன் ஆதரவாளர்களுக்கும் எதிர்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட, ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக தினமலர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

ஆர்.கே.நகர், இரட்டை குழி தெருவில் உள்ள, எம்.எல்.ஏ., அலுவலகத்தில், 180 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா, ஜூலை 18 ஆம் தேதி காலை, 11:00 மணிக்கு நடந்தது. அப்போது, T.T.V தினகரன் அங்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 400-க்கும் மேற்பட்டோர், அங்கு குவிந்து, தினகரனுக்கு எதிராக, ₹20 நோட்டுகளை காட்டி, கோஷங்கள் எழுப்பினர். தரக்குறைவான வார்த்தைகளால் சரமாரியாக திட்டினர்.

இதனால், தினகரன் அணியினர் கோபமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தினகரன் ஆதரவாளர்கள், கோஷங்கள் எழுப்பியவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயர்சித்தும், ஒரு கட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று, கைகலப்பிலும் ஈடுபட்டனர்.
இந்த மோதலில், எண்ணுார், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், பிரேமா மற்றும் இரு பெண்கள் உட்பட, ஆறு பேர் படுகாயமடைந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

இதனை அடுத்து, தினகரன் அங்கு பேசுகையில், “ஒரு எதிர்க்கட்சி உறுப்பினராக, எப்படி செயல்பட முடியுமோ, அதை நான் செய்கிறேன். நான், எம்.எல்.ஏ.,வாக இருப்பதால், ஆர்.கே.நகரில் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மதுசூதனன் ஆதரவாளர்கள், எங்களை துாண்டி வன்முறையில் ஈடுபட வைத்து, எங்கள் நிர்வாகிகளை கைது செய்ய முயற்சிக்கின்றனர்.

நாங்கள் ஒருபோதும் சட்டத்தை கையில் எடுக்க மாட்டோம். கலவரம் செய்தால், நான் பயந்து, தொகுதிக்குள் வர மாட்டேன் என நினைக்கின்றனர். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை” என்று கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close