சிறப்பு கட்டுரைகள்

தற்போது நடத்தப்படும் சர்வேக்கள் நம்பக தன்மையை இழந்து வருகிறதா ? – ஒரு பார்வை

இப்பொழுதெல்லாம் சர்வேக்களின் காலம். சர்வேயர்களைப் பற்றி மட்டுமே அறிந்திருந்த மக்களைச் சுற்றி, திரும்பின பக்கமெல்லாம் சர்வே, சர்வே என்று சர்வமும் சர்வே மயமாக இருப்பதைப் பார்க்க ஒன்றும் புரிவதில்லை. அதற்காகக் கவலைப்பட வேண்டாம். சர்வேயரிடம் தான் கவனமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் லோன் அப்ரூவல் கிடைக்காது. சர்வேக்களுக்கு என்ன,  நாம் சொல்வதுதான் அவங்களுக்கு லோன் கிடைத்த மாதிரி. வாய்க்கு வந்தபடி சொல்ல வேண்டியதுதான்.

இந்த எண்ணத்தில் எத்தனையோ சர்வேக்களையும் நாம் பார்த்து விட்டோம். மொபைல் சர்வீஸிலிருந்து மோபெட் வரை யாரிடம் போனாலும் கடைசியில், எங்க சர்வேயில் பங்கெடுத்துக் கொள்ளுங்களேன் என்று கேட்கிறார்கள். இணைய தளத்துக்கு வந்தால் எவ்வளவோ பேர் சர்வே போடறாங்க. அந்த சர்வேக்களில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் அவங்க போடற கேள்விக்கு, அவங்க எதிர்பார்க்கிற பதிலைத்தான் ஆப்ஷனாக வைத்திருக்கிறார்களே தவிர, அதற்கு சரியான பதில் இப்படித்தான் இருக்கும் என்று நாம் நினைக்கிற பதில் ஆப்ஷனாக இருக்கவே இருக்காது. ஆனால் சொத்தையான ஆப்ஷனுக்கு எதிரில் 60%, 70% என்று மட்டும் இருக்கும்.

அடேடே இவ்வளவு பேர் இந்த ஆப்ஷனையா தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்ற ஆச்சரியத்துடன், எவ்வளவு பேர் சர்வேயில் பங்கெடுத்துக் கொண்டார்கள் என்று பார்த்தால் பத்து பேர் என்று இருக்கும். இதுவா சர்வே என்று நினைத்தீர்கள் என்றால், இதுதான் சர்வே!

சமீபத்தில பாருங்க, ஒரு சர்வே வந்தது. உலகளாவிய சர்வேயாம். பல நாடுகளையும் சர்வே செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள் – பெண்கள் வாழ்வதற்கு  மிகவும் மோசமான நாடு இந்தியாவாம். பெண்களுக்குப் பாலியல் கொடுமை என்பதில் இந்தியாதான் முதலிடமாம்.

இது என்ன புதுக் கதை? பெண்களது செயின் பறிப்பில் முதலிடம் என்று சொன்னாலாவது  நம்பலாம். பாலியல் கொடுமையா?  யார் அப்படி சொன்னது என்று பார்த்தால், இந்தியாவிலிருந்து 41 பேர் சொல்லியிருக்கிறார்களாம். மொத்த சர்வேயிலும் 548 பேர் தான் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அட இது இன்டர்நெட் சர்வேக்கு தம்பி.  இதற்கு போய் யாராவது முக்கியத்துவம் கொடுப்பார்களா?

அதற்காக அந்த கால நம்பியார், அசோகன் சினிமா பார்த்து சர்வே எடுத்தாற்போல இருக்கிறது என்று விட்டுவிட முடியவில்லை. யார்தான் இந்த சர்வேயில் பங்கெடுத்துக் கொண்டார்கள் என்று ஆர்வமாகத் தேடினால்,  முற்போக்குக்காரர்கள் என்று சொல்கிறார்கள். நம் நாட்டில் முற்போக்குக்காரர்கள் என்றால் திமுகவும், காங்கிரஸும்தான். அவங்க கட்சியில இருக்கிற பெண்களுக்குத்தான் தொல்லையான தொல்லை. ஒரு போராட்டத்தில கூட கலந்துக்க முடியாது. அவன் என்னைக் கிள்ளினான், இவன் என்னைப் பார்த்தான் என்று திமுகவில் இருக்கும் பெண் நிர்வாகி ஒரு தனி போராட்டத்தையே செய்தாக வேண்டும்.

காங்கிரஸைப் பற்றி கேட்கவே வேண்டாம். காங்கிரஸ் ஆபீசுக்குக் கூட போக முடியாது. அப்படி ஒரு பாலியல் தொல்லை. வெளியில் சொல்லிக்கவும் முடியாது, சொல்லாமல் இருக்கவும் முடியாது. ரொம்ப கஷ்டம்தான்.

பாதிக்கப்பட்டது இவங்கமட்டுமில்லை. இன்னும்கூட இருக்கிறார்கள். முற்போக்குக்காரர்கள் என்றால், இந்தியாவில் இந்துக்களைத் தவிர மற்ற எல்லோருமே முற்போக்குக்காரர்கள் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. அந்த முற்போக்குக்காரர்களை நம்பி சர்ச்சுக்குக்கூட போக முடியாது. ஏனென்றால் பாதிரிமார்களால் பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்களும், குழந்தைகளும் இந்தியாவில் அதிகம். இந்த ட்ரெண்ட் உலகப் பிரசித்தம் என்று பிபிசி டாட் காம் கூறுகிறது. அமெரிக்காவில் கேட்கவே வேண்டாம். பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சர்ச்சிடமிருந்து நஷ்ட ஈடு வாங்கி கொடுப்பதைத் தொழிலாகக் கொண்ட லாயர்கள் கூட்டமே அங்கு இருக்கிறது.

இந்த முற்போக்குப் பாதிரிமார்களால் பாதிக்கப்பட்ட இந்தியப் பெண்கள் சர்வேயில் பங்கெடுத்துக் கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது. என்னவோ இந்தியப் பெண்கள் அனைவருமே பங்கெடுத்துக் கொண்ட மாதிரி, அவர்களில் பலரும் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டது போல ஒரு பிரமையை ஏற்படுத்துவதுதான் இந்த சர்வே.

சமீபத்தில பாருங்க, அபார்ட்மெட்டில வசிக்கற ஒரு சிறுமியை அந்த அபார்ட்மெட்டில வேலை செய்கிற ஆட்களே பாலியல் கொடுமை செய்திருக்காங்க. அந்த அபார்ட்மெண்ட்டில வசிக்கற மக்களிடம் இதைப் பற்றி சர்வே எடுத்தால், ஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் இருக்கிற எல்லா அபார்ட்மெண்ட்களிலும்  சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்றா சொல்வார்கள்?

அதனால் தெரிந்து கொள்ளுங்கள், எந்த சர்வேயும் நம்பகமானது இல்லை. நம்பகத் தன்மையிலிருந்து சறுக்கி விழுவதால்தான் அதற்குப் பெயர் சர்ர்வே‘. அதை படித்துவிட்டு பிளட் ப்ரெஷர் ஏறாமல் பார்த்துக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. இல்லாவிட்டால், இந்தியாவில்தான் அதிகமான பிளட் ப்ரெஷர் மக்கள் இருக்கிறார்கள் என்று ஒரு உண்மையான சர்வே வந்தாலும் வந்து விடும்.!

Tags
Show More
Back to top button
Close
Close