சிறப்பு கட்டுரைகள்

கவிஞர் வாலி – சில நினைவுகள்!

ஜூலை 18, கவிஞர் வாலி அவர்களின் நினைவு தினம். தமிழ் சினிமா கண்ட எண்ணற்ற பாடலாசிரியர்களுள் ஒருவர் தான் இந்த வாலி என்று ஒதுக்கி விட முடியாது. வாலி நிறைய எம்.ஜீ.ஆர் படங்களுக்கு பாடல் எழுதியவர். கலைஞருடன் மேடைகளில் தோன்றியவர். வெறும் பணத்துக்கு பாட்டெழுதும் புலவர் தானே இந்த வாலி என்று நினைப்பீர்களே ஆனால், நீங்கள் கவிஞரை பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்.

வாலி எழுதிய முதல் பாடல் எந்த படத்தில் இடம் பெற்றது என்பது அநேகமாக பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை 50 வயதை கடந்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம். அவர் எழுதிய முதல் பாடல் ‘நிலவும் தாரையும் நீயம்மா உலகம் ஒரு நாள் உனதம்மா’ என்ற இனிமையான தாலாட்டு பாடல் தான். பாடல் இடம் பெற்ற படம் அழகர்மலைக்கள்வன். இந்த படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைத்ததே மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு தான்.

ஆமாம், வாலி அவ்வளவு எளிதாக சாதித்து விடவில்லை. கவியரசர் கண்ணதாசனைப் போலவோ அல்லது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போலவோ ஒரு சித்தாந்த ரீதியிலான பின்புலம் கூட இல்லாதவர். அவர்கள் திறமையை பற்றி எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. வாலி அவர்களின் சாதனைகளுக்கு தனி இடம் உண்டு. ஏனென்றால், பட்டுகோட்டையாரும் கவியரசரும் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த பொழுது திரையுலகிற்குள் நுழைந்து, தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி கொள்வது என்பது, வாலி போன்ற அசாத்திய திறமை கொண்டவர்களால் மட்டுமே முடியும். இதையே தான் வாலி அவர்களும் ‘கப்பல்களுக்கு நடுவே கட்டு மரத்தோடு கடலில் இறங்கினேன்’ என்று குறிப்பிடுகிறார்.

எம்.ஜீ.ஆர் அவர்களின் படகோட்டி படத்திற்கு இரண்டு பாடல்களை வாலி எழுதி கொடுத்தார். பொதுவாக எம்.ஜீ.ஆர் திரைப்படங்களை பொறுத்தவரையில் பாடல்கள் அவரின் அனுமதி இல்லாமல் ஒலிப்பதிவு செய்ய முடியாது. பாடல் வரிகளை படித்து பார்த்து, இசையை கேட்டு, இந்த இசைக்கு இந்த பாடல் பொருந்துமா? எந்த அளவுக்கு இந்த பாடல் தன் இமேஜை உயர்த்தும் என்றெல்லாம் அலசி ஆராய்ந்த பிறகு தான், ஒலிப்பதிவுக்கே அனுமதி வழங்குவார். அப்படி பட்ட எம்.ஜீ.ஆர், வாலி எழுதிய பாடல்களை படித்துவிட்டு, ‘இனிமேல் என் படங்களுக்கு வாலி என்கிற புதியவர்’ பாடல் எழுதுவார் என்று அறிவித்து விட்டார். கண்ணதாசனுக்கும் எம்.ஜீ.ஆறுக்கும் இருந்த மனக்கசப்பினால், கண்ணதாசனை போல தனக்கேற்றபடி பாடல் எழுத ஒருவர் வேண்டும் என்றிருந்த எம்.ஜீ.ஆர், அந்த இடத்தை வாலி நிரப்புவார் என்ற முடிவுக்கு வந்தார். வாலி எம்.ஜீ.ஆரை ஏமாற்றிவிடவில்லை.

‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’,’வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’,’புதிய வானம் புதிய பூமி… புதிய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்து கொண்ட வேளையிலே’,’நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்’ போன்ற பாடல்களை எழுதினர். இன்றளவும் நான் ஆணையிட்டால் பாடலுக்கு விசிலடிக்கும் இளைஞர் கூட்டம் உண்டு. தேர்தல் பிரச்சாரங்களில் ஒலிபெருக்கிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. இல்லை என்றால், ‘நான் ஆணையிட்டால்’, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ இல்லாத அரசியல் மேடைகள் இருக்காது. இன்றும் கூட நீங்கள் கிராமங்களிலோ அல்லது சிறு நகரங்களிலோ ஆட்டோக்களில் பிரச்சாரம் செய்யும் பொழுது இந்த பாடல்கள் ஒலிபரப்பப்படுவதை கேட்கலாம்.

இப்படி எம்.ஜீ.ஆர் வாலியை பயன்படுத்தியது சிலருக்கு எரிச்சலை உண்டாக்கியது. ‘பூணூலை கொண்டு போர்வாளை வீழ்த்த பார்க்கிறாரா எம்.ஜீ.ஆர்’ என்று பகிரங்கமாகவே மேடைகளில் கேட்டார்கள். வாலி ஒரு பிராமின் என்பதால். நாம் அவர் ஜாதியை குறிப்பிடுகிறோம் என்று நினைக்க வேண்டாம். ஒரு முறை அவரே மேடையில் தெரிவித்திருக்கிறார், ‘நான் ஒரு விரால் மீன் சாப்பிடும் பிராமின்’ என்று. தொடர்ந்து, ‘அதெல்லாம் மீன் சாப்பிடறது ஒன்னும் தப்பில்லை, mean mindedஆ இருக்கிறது தான் தப்பு’ என்று.

இப்படி மேடைகளில் மட்டுமல்ல, பாடல்களிலும் கூட கவர்ச்சியான வார்த்தைகளை பயன்படுத்தியவர். அவருடைய பாடல்கள் மெட்டுக்கு கச்சிதமாக பொருந்தும். உதாரணமாக ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலில், ‘நான் உன்னை நீங்க மாட்டேன்’,என்ற வரிக்கு அடுத்தது, ‘நீங்கினால் தூங்க மாட்டேன்’ என்று எழுதி இருப்பார். இதில் ஒன்றும் தொல்காப்பியமோ அல்லது சங்க இலக்கியத்தையோ அவர் புகுத்தி விடவில்லை. ஆனால், 27 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த பாடல் நம் மனதில் நிலைத்திருக்க இது போன்ற வரிகள் முக்கிய காரணம் என்றே சொல்ல வேண்டும். இதை அந்த பாடலுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜா அவர்களே மேடையில் தெரிவித்திருக்கிறார்.

இவ்வளவு திறமைகளுக்கு சொந்தக்காரரான வாலி சந்தித்த மிகப்பெரிய சோதனை என்னவென்றால், அவர் எழுதிய பெரும்பாலான பாடல்கள் கண்ணதாசனால் எழுதப்பட்டவை என்று பலரும் நினைத்தது தான். உதாரணமாக, உயர்ந்த மனிதன் படத்தில் வரும் ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’, ‘காசே தான் கடவுளடா’,’உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா’ போன்ற பாடல்கள் கண்ணதாசனால் எழுதப்பட்டவை என்றே இன்றும் நிறைய பேர் சொல்லுவார்கள். அன்று பத்திரிகை உலகில் கண்ணதாசனுக்கு இருந்த செல்வாக்கு வாலிக்கு இல்லை. இதை கண்ணதாசனை தவறான கண்ணோட்டத்தில் காட்ட வேண்டும் என்கிற நோக்கத்தில் எழுதவில்லை. உண்மை என்னவென்றால், எம்.ஜீ.ஆரிடம் வாலிக்கு இருந்த செல்வாக்கிற்கு அவர் நினைத்திருந்தால், தேசிய விருதுகளை வாங்கி குவித்திருக்கலாம். வைரமுத்துவுக்கு கருணாநிதிக்கும் இருக்கும் நெருக்கம் நாம் அறிந்ததே. அவர் வாங்கி குவித்த தேசிய விருதுகளும் நாம் அறிந்ததே. ஆனால், சாதாரண விளம்பரம் கூட தேடிக்கொள்ள நினைக்காதவர் தான் வாலி.

‘மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்’,

‘நூலாடை என
மேலாடை என
பாலாடை மேனி மீது படரட்டுமா

நான் என்ன சொல்ல
நீ என்னை மெல்ல
தீண்டி தீவைக்கிராய்'(வைகாசி நிலவே, உன்னாலே உன்னாலே திரைப்பட பாடல்) இது போன்ற கவித்துவமான பாடல்களும் எழுதுவார்,

‘முஸ்தபா முஸ்தபா don’t worry முஸ்தபா
மூழ்காத ஷிப்பே friendship தான்’, ‘காதல் வைரஸ் ஒன்று கண்டேன் கண்டேன் நானும்’,’கோ என்பது முன் வார்த்தை தான் வா என்பது பின் வார்த்தை தான்'(Goa) போன்ற எளிமையான, இளமையான பாடல்களும் எழுதிவிடுவார். அது தான் வாலி.

‘ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூட தேக்கு விற்பான்’

‘மனிதர்களை எங்களால் மந்திரிகளாக்க முடிகிறது
மந்திரிகளைத்தான் மீண்டும்
மனிதர்களாக்க முடிவதில்லை’

இவையும் கூட வாலி எழுதியது தான்.

மற்ற பாடலாசிரியர்களை விட வாலி சிறந்து விளங்குவது எந்த விஷயத்தில் என்றால், நாம் அன்றாட பார்க்கும்,படிக்கும்,கேட்கும் செய்திகளை, பாடல்களில் மெட்டுக்கும், காட்சிக்கும் ஏற்ப பயன்படுத்தி விடுவார். தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு நிலவிய நாட்கள் அவை. ‘மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே, வாவா என் வெளிச்சப்பூவே வா’, ‘உசைன் போல்டை போல் நில்லாமல் ஓடு, Gold தேடி வரும்’ என்றெல்லாம் எழுதினர்.

இப்படி எழுத வேண்டுமென்றால் நிறைய படிக்க வேண்டும். தினசரி செய்தித்தாள் படிக்க வேண்டும், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் செய்திகளை கேட்டு பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.பாடலுக்கான சூழ்நிலையை உணர வேண்டும். உணர்ந்து, பார்த்து,படித்து,கேட்டவற்றை சரியாக பயன்படுத்த வேண்டும். இப்படி தன் இறுதி மூச்சு வரை செய்தவர் வாலி. இது நிச்சயம் இறைவன் அவருக்கு அளித்த வரம் என்றே சொல்ல வேண்டும். இல்லை என்றால் 1968 ஆம் ஆண்டு வந்த எதிர்நீச்சல், 2013 ஆம் ஆண்டு வந்த எதிர்நீச்சல் இரண்டுக்கும் பாடல் எழுத முடியுமா என்ன? தலைமுறைகளை தாண்டி வெற்றி கொடி நாட்டி விட முடியுமா என்ன?

வாலி என்றுமே தன்னுடைய இறைநம்பிக்கையை மறைத்தவரில்லை. திராவிட இயக்கங்கள் ஆட்சியில் இருந்த பொழுதும், அராஜகங்களை அரங்கேற்றிய பொழுதும், நெற்றியில் திருநீறு இல்லாமல் இவர் வெளியே வர மாட்டார். முருக பக்தர். இதை பொறுக்க முடியாமல் திராவிட இயக்கங்கள் அவர்களுக்கே உண்டான பாணியில் தூற்றினார்கள்.

“கற்பனை யென்றாலும் கற்சிலை யென்றாலும் –
கந்தனே! உன்னை மறவேன்!”

“ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்!- துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும்”

இந்த பாடல்களை TMS அவர்களுக்கு எழுதி அனுப்பிய பின்பு தான், TMS வாலியை திரைப்படங்களுக்கு பாடல் எழுத முயற்சி செய்யுமாறு கூறினாராம். முருகன் தானே வாலியின் இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் காரணம். அப்படி அவர் நம்புவதும் நியாயம் தானே?

தமிழ்க் கடவுள், அவதார புருஷன், ஸ்ரீமத் அழகியசிங்கர், ராமானுஜ காவியம் போன்றவற்றை எல்லாம் எழுதிய வாலி, ஏன் ‘சின்ன ராசாவே சீட்டெறும்பு என்னை கடிக்குது’,’ ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் ஓ பியூட்டின்னா பியூட்டி தான்’ போன்ற பாடல்களை எல்லாம் எழுத வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஒரு முறை கவியரங்கமொன்றில் உரையாற்றிவிட்டு வரும் பொழுது ஒருவர் வாலியிடம் இதே கேள்வியினைக் கேட்டார்,அதற்கு கீழ்கண்டவாறு அவர் பதிலளித்தார்,

“இங்கே நான் வண்ணமொழிப் பிள்ளைக்கு தாலாட்டும் தாய்
அங்கே நான் விட்டெறியும் எலும்புக்கு வாலாட்டும் நாய்”

இருந்தாலும், நம்மை பொறுத்தவரை, இவ்வளவு பெரிய திறமைசாலி, சில பாடல்களை தவிர்த்திருக்கலாம் என்பதே நம் கருத்து.

ராமானுஜ காவியம் எழுதிய வாலி, கலைஞர் காவியம் எழுதியிருக்க வேண்டியதில்லை என்று நாம் நினைத்தாலும், தனிப்பட்ட முறையில் கலைஞர் கருணாநிதி, வாலி அவர்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். தனக்கு பாராட்டு விழா எடுக்கவே 5 ஆண்டுகள் ஆட்சி செய்திருந்தாலும், தன்னை பாராட்டியவர்கள் அனைவருக்கும் உரிய மரியாதை கொடுத்தவர் கலைஞர். என்னதான் வைரமுத்து ஜால்ரா அடித்தாலும், அது நிச்சயம் ரசிக்கும் படியாக இருந்ததில்லை. என்னதான் நமக்கு கலைஞர் மீது வெறுப்பு இருந்தாலும் ‘cooling glass அணிந்த குறுந்தொகையே’ என்று வாலி, கலைஞரை பாராட்டும் பொழுது, வெறுப்பையும் மீறி, மனிதர் எப்படித்தான் இது போன்ற வார்த்தைகளை பிடிக்கிறார் என்று ரசிக்கத் தான் தோன்றுகிறது.

ஒரு கட்டத்தில் கவிஞர் வாலியை, நாங்கள் பெரிதும் மதிக்கும் பத்திரிக்கையாளர் திரு.சோ அவர்கள், நகைச்சுவையாக “கவிஞர் வாலி ‘கலைஞர்’ வாலி ஆகிட்டார்” என்று குறிப்பிட்டார். அவ்வளவு தூரம் கலைஞரோடு நெருக்கமாக பழகினாலும், வாலி அவர்கள் தன்னை மதச்சார்பற்றவர் என்று அடையாளப்படுத்திக்கொள்ள ஒரு நாளும் தன் நம்பிக்கையையோ தான் சார்ந்த ஹிந்து மதத்தை பற்றியோ தவறான கருத்துக்களை எழுதியதுமில்லை பேசியதுமில்லை.

வாலி எந்த மதத்தைப் பற்றியும் தவறாக பேசியதில்லை. முஹம்மது பின் துக்ளக் படத்தில் வரும் பாடலில், உண்மையில் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை உயர்வாகவே எழுதி இருப்பார்.

அல்லா அல்லா லா அல்லா அல்லா
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு எண்பது வாசல்
உயிருக்கு உயிராய்க் காணும்
ஒரு வாசல் பள்ளிவாசல்

வசனக் கவிதை எழுதுவதில் வாலியை மிஞ்ச யாருமில்லை. கடைசியாக அவர் கலந்து கொண்ட ‘ஸ்ரீமத் அழகிய சிங்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் அவர் கவிதையில் இருந்து ஒரு சில வரிகளை ஒருவர் குறிப்பிட்டார்.

“அரங்கநாயகியின் அகமுடையான்
அழுக்காறு அவா வெகுளியற்ற அகமுடையான்
நலிவு வந்து வருத்திய போதும்
இவன் அகமுடையான்”

இங்கே அகமுடையான் என்ற ஒரு சொல்லை எப்படி பயன்படுத்தி இருக்கிறார் என்பதை அவர் சிறப்பாகவே விளக்கினார். நரசிம்மாச்சாரியார் அரங்கநாயகியின் அகமுடையான் – இங்கே அகமுடையான் என்றால் கணவன் என்று பொருள் வருகிறது.இரண்டவாது அகமுடையான் (அழுக்காது அவா வெகுளியற்ற அகமுடையான்) – இங்கே அகமுடையான் என்றால் மனதை குறிப்பிடுகிறார். “நலிவு வந்து வருத்திய போதும் இவன் அகம் உடையான்” – இங்கே மனம் உடைந்து போக மாட்டான் என்று பொருள் வரும்படி எழுதியிருக்கிறார் கவிஞர்.

ஆக, வாலியை பொறுத்தவரை நேர்மையாகவே எழுதி வந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். ஆனால் காலக்கொடுமை என்னவென்றால், சிலரை திருப்தி படுத்தி,சில விருதுகளை ‘வாங்குவதற்காக’,விளம்பரம் தேடிக்கொள்ள, ஹிந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துபவர்களை எல்லாம் கவிப்பேரரசு என்று ஊடகங்கள் கொண்டாடுவது தான்.

இவ்வளவு தூரம் நேர்மையாக எழுதி இருந்தாலும், திராவிட இயக்கத்தினரை பொறுத்த வரையில், வாலி என்றுமே குறுக்கே நூல் போட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் தான். கருத்து சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழிய பேசும் இவர்கள், வாலிக்கு தராத தொல்லையா? ‘திருமகன் வருகிற திருநீறை நெற்றி மீது தினம் பூசி, அதிசய அதிசய பெரியார் தான் ஆனதென்ன ராஜாஜி’ என்று பாபா படத்தில் ஒரு வரி எழுதி இருப்பார். அதாவது, ஒரு நாத்திகவாதி, இறை நம்பிக்கையுடவனாக மாறுகிறான் என்பதே அதன் பொருள். இதை கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் திராவிட இயக்கங்கள் ஆட்சேபம் தெரிவித்தன. வாலி அந்த வரியை நீக்கிவிட்டார். ஒரே ஒரு கிராமத்திலே என்று ஒரு படத்திற்கு கதை வசனம் எழுதினர். இட ஒதுக்கீட்டை விமர்சித்து எடுக்கப்பட்ட படம். கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த படத்தையே தடை செய்யும் நிலைக்கு வந்து விட்டார்கள் அன்றைய ஆட்சியாளர்கள். இது போல, என்ன தான் கலைஞரும் வாலியும், துரியோதனனையும் கர்ணனையும் போல நட்பு பாராட்டி இருந்தாலும், திராவிட இயக்கங்களை பொறுத்த வரை, அவர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் தான்(அவரின் இயற்பெயர்).

வாலியைப் பற்றி எழுத வேண்டுமென்றால், எழுதிக் கொண்டே போகலாம். இன்று வாலியின் நினைவு நாள் என்பதால், அவரைப் பற்றிய இந்த கட்டுரையை வெளியிடுகிறோம்.

நாம் மேலே கொடுத்துள்ள தகவல்கள் அனைத்தும் வாலி அவர்கள் எழுதிய, ‘நானும் இந்த நூற்றாண்டும்’,’மண் மொழி மக்கள்’,’நினைவு நாடாக்கள்’ மற்றும் வாலி அவர்களின் மேடை பேச்சுகளில் இருந்து திரட்டப்பட்டவை தான்.

Tags
Show More
Back to top button
Close
Close