சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், மிர்ச்சி சிவா நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் தமிழ் படம் 2.0. இவர்கள் கூட்டணியில் உருவான தமிழ் படம் என்ற படத்தின் இரண்டாம் பாகம் அல்லது தொடர்ச்சி என்று கூறும் அளவிற்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை ஓரிரு காட்சிகளை தவிர. இது ஒரு நையாண்டி திரைப்படம். ஆங்கிலத்தில் satire/spoof என்று கூறுவார்கள். ஏற்கனவே வெளியான திரைப்படங்களின் குறைகளை கேலி செய்யும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்கள் இந்த வகையில் சேரும். உதாரணமாக, திரு.சோ அவர்கள் எழுதி இயக்கிய முகமது பின் துக்ளக் ஒரு அரசியல் நையாண்டி திரைப்படம்.

இந்த திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் படங்கள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்று கூறினால் மிகையாகாது. அந்த அளவுக்கு விளம்பரப்படுத்தி இருந்தார்கள். சமீபத்தில் வெளியான சர்க்கார் திரைப்படத்தினை கேலி செய்யும் வகையில் கூட ஒரு படத்தை வெளியிட்டார்கள். நமக்கொரு நகைச்சுவை விருந்து காத்திருக்கின்றது என்ற நினைப்பில் திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா? உண்மையில் தமிழ் படம் நகைச்சுவை விருந்து படைத்ததா? ரசிகர்களின் சிரிப்பொலியில் திரையரங்குகள் அதிர்கிறதா?

இந்த படத்திற்கு விமர்சனம் எழுதுவது சற்றே சவாலான விஷயம் தான். ஏனென்றால், பொதுவாக ஒரு திரைப்படம் என்றால், ஏதோ ஒரு கதை இருக்கும், நடிகர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு நடிப்பார்கள். நம் போன்றவர்கள், விமர்சனம் என்கிற பெயரில் கதையையும் நடிப்பையும் பற்றி சில கருத்துக்களை வெளியிடுவோம். ஆனால் தமிழ் படம் 2.0 அப்படி பட்ட ஒரு படம் இல்லை. இங்கே இயக்குனர் கதையை பற்றியோ திரைக்கதையை பற்றியோ கவலைப்பட்டதாக தெரியவில்லை. நடிப்பை பற்றி நாம் சொல்வதை விட, சிவாவே ஒரு காட்சியில் சொல்கிறார், ‘எனக்கு நடிக்க தெரியாது, உனக்கு நடிப்புனா என்னன்னே தெரியாது’ என்று. இவர்களே இப்படி வசனம் பேசினால், நம் நிலைமை தான் என்ன? நடிகர் சூரி ஒரு படத்தில் கூறுவதை போல ‘எல்லா காமெடியும் நீங்களே பண்ணிட்டா, நாங்க என்னத்துக்கு’ என்று. இந்த படத்திற்கு விமர்சனம் எழுதுபவர்களுக்கு அதே நிலை தான்.

திரு.அமுதன், சமூக வலைத்தளங்களை பெரிதும் நம்பி களம் இறங்கி இருக்கிறார். ட்விட்டர், Facebook போன்ற தளங்களில் மக்கள் கேலி செய்யும் அனைத்தையும் ஒரே படத்தில் திணித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அதிகமாக மீம்ஸ் பகிரும் மக்களை நம்பி ஒரு முழு படத்தையும் எடுத்து விட்டார். அதாவது மற்றவர்களின் பதிவுகளையும் கருத்துக்களையும் மட்டுமே வைத்து ஒரு படத்தை இயக்கி இருக்கிறார். மற்றபடி ஒரு தரமான நகைச்சுவை படத்தை கொடுக்க வேண்டும் என்று எந்த ஒரு முயற்சியும் செய்ததாக தெரியவில்லை.

தமிழ் படம் 2.0 வை பொறுத்தவரையில், உங்களுக்கு வசனங்களும் காட்சிகளும் எந்த படத்தை குறிப்பிடுகின்றன என்று தெரிய வேண்டும். அது தெரிந்தால் ஒரு வேளை, அவர்கள் செய்வதை நகைச்சுவை என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். இவர்கள் எந்த திரைப்படத்தை குறிப்பிடுகிறார்கள் என்ற ஆராய்ச்சியில் இறங்கும்போது, நகைச்சுவை எடுபடாமல் போய்விடுகிறது. நமக்கு அவ்வளவு பொறுமை இல்லை.

விக்ரம் வேதா, மங்காத்தா, வேதாளம், 24, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களை கேலி செய்து படமாக்கி இருக்கும் காட்சிகள் ரசிக்கும்படியாகவே அமைந்திருக்கின்றன. ‘வீரம்னா என்ன தெரியுமா’ என்று சிவா ஓ.ஏ.கே சுந்தரிடம் பேசும் காட்சி சிரிப்பு வெடி என்றே சொல்ல வேண்டும். அதே போல, வேதாளம் தெறிக்க விடலாமா காட்சியும் நல்ல நகைச்சுவை. இப்படி சில நல்ல காட்சிகள் இருந்தாலும், ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பலவீனமே இது தான்.

நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட முகமது பின் துக்ளக் படத்தை பார்த்தீர்கள் என்றால், நாங்கள் சொல்வது புரியும். ஒரு கதை, அதற்கென சில கதாபாத்திரங்கள், அந்த கதைக்குள் அரசியல்வாதிகளை கேலி செய்வது போன்ற காட்சிகள், அந்த திரைப்படம்  இப்படித்தான் இருக்கும். அதனால் தான், இன்றும் முகமது பின் துக்ளக் ஒரு classic என்று புகழப்படுகிறது.

இங்கே திடீரென ஒரு கதாபாத்திரம் தோன்றும், சம்மந்தமே இல்லாமல் வசனங்களை பேசும். உதாரணமாக இறுதி சுற்று திரைப்படத்தை நையாண்டி செய்வதாக நினைத்து இவர்கள் சேர்த்திருக்கும் காட்சி, எரிச்சலையே ஏற்படுத்துகிறது.

காமெடி வில்லனாக சதீஷ் நடித்திருக்கிறார். மங்காத்தா காட்சியைத் தவிர, எந்த ஒரு காட்சியும் நமக்கு சிரிப்பை ஏற்படுத்தவில்லை. ஒரு வேளை, இந்த வில்லன் கதாபாத்திரம் இல்லாமல்,மற்ற காட்சிகளை அப்படியே வைத்திருந்தால் கூட எந்த வித்தியாசமும் இருந்திருக்காது. அந்த அளவுக்குத் தான் இந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அரசியல்வாதிகளுக்காகவும் சில காட்சிகளை படமாக்கி இருக்கிறார் இயக்குனர். தர்மயுத்தம் என்று ஓ.பி.எஸ்ஸை வம்புக்கிழுக்கிறார், சசிகலா செய்த சத்தியத்தை போல ஒரு காட்சி, தமிழிசை சௌந்தர்ராஜன், H ராஜா, செல்லூர் ராஜு என அதிமுக மற்றும் பாஜகவினரை கேலி செய்திருக்கிறார். பணமதிப்பிழப்பு(demonetization) பற்றியும் ஒரு காட்சி வருகிறது. ஆனால் திமுக-காங்கிரஸ் பற்றி ஒரு சாதாரண வசனம் கூட சேர்க்க்கப்படவில்லை. படத்தை இயக்கி இருக்கும் அமுதன், திண்டுக்கல் லியோனியின் உறவினர் என்று தகவல்கள் வருகின்றன. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது போன்ற நையாண்டி திரைப்படங்களை எடுக்கும் பொழுது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அதனால் தானோ என்னவோ லியோனியின் so called நகைச்சுவை பட்டிமன்றங்கள் எப்படி சிரிப்பையே வரவழைக்காதோ, அப்படியே தமிழ் படம் 2.0 உம் அமைந்திருக்கிறது.

தமிழ் படங்களை கேலி செய்து படமாக்கிய காட்சிகளே எடுபடாத நிலையில், Enter the Dragon, Forest Gump போன்ற ஆங்கில திரைப்படங்கள் மற்றும் Game of thrones என்கிற ஆங்கில தொடர் ஆகியவற்றை நையாண்டி செய்வதாக நினைத்து படமாக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அருவருப்பின் உச்சக்கட்டம் என்றே சொல்ல வேண்டும். மனோபாலா, சந்தானபாரதி, R சுந்தர்ராஜன் கூட்டணி நம் பொறுமையை சோதிக்கிறார்கள். ஒரு பாடல் கூட ரசிக்கும் படியாக இல்லை.

முதல் பாதியிலேயே ஒரு கட்டத்துக்கு மேல் உங்களை தூங்க வைத்து விடுகிறார் இயக்குனர். அவ்வளவு மோசமான திரைக்கதை. இரண்டாம் பாதி, அதைவிட மோசம். மற்ற படங்களை எல்லாம் கேலி செய்து தன் படத்தை விற்க நினைத்திருக்கும் இயக்குனர், தன் படமே ஒரு கேலிக்கூத்தாகிவிட்டது என்பதை உணருவாரா?

தமிழ் படம் 2.0 கேலிக்கூத்து.

Share