இந்தியாசெய்திகள்விளையாட்டு

இந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் முதல் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாஸ் : தேசிய கீதத்தின் போது கண் கலங்கி நெகிழ்ச்சி

இந்தியாவினுடைய பெருமைகள் பல இருக்கின்றன. குறிப்பாக பல விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றிப்பெற்று பதக்கங்கள் பெறும் போது அதை எல்லோரும் பெரு உவகையுடன் பார்க்கிறோம். சச்சின் டெண்டுல்கர், விஸ்வநாதன் ஆனந்த், குற்றாலீஸ்வரன், கர்னம் மலேஸ்வரி, பி.வி. சிந்து, பாரா ஒலிம்பிக் மாரியப்பன், சாக்ஷீ மாலிக் வரிசையில் தற்போது அஸ்ஸாமை சேர்ந்த ஹிமா தாஸும் பெயரும் குறிப்பிடத்தகுந்தவை.

தடகள போட்டியில் முதல் தங்கம் வென்ற வீராங்கனை

பின்லேண்டில் நடந்த உலக யூ-20 சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று  இந்தியாவிற்கு பெருமையை ஹிமா தாஸ் சேர்த்துள்ளார். இவர் சர்வதேச அளவில் முதல் தங்கம் வீராங்கனை என்ற பெருமையை பெறுகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போட்டியில் அவருடைய வெற்றிக் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. “முதலில் சற்று பின்தங்கிய நிலையில் ஹிமா தாஸ் கடைசி 80 மீட்டர் தூரத்தில் முன்னேறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 400 மீட்டர் தூரத்தை 51.13 நொடிகளில் கடந்து முதல் இடத்துக்கு முன்னேறினார். தன்னுடைய இரண்டு போட்டியாளர்களை விட வேகமாக முன்னேறிச் சென்றார்.

பெருமிதம் கொள்ளும் ஹிமா தாஸின் பயிற்சியாளர் நிபன், ஹிமாவின் வெற்றிக்குறித்து பேசுகையில், அவருடைய முன்னேற்றம் அவருடைய ஆற்றலைக் காட்டுவதாக பெருமிதம் கொள்கிறார். போட்டியில் கடைசி 80 மீட்டர் கடக்கும் போது தான் போட்டியே துவங்கியதாகவும் கூறுகிறார்.

முதலில் கால்பந்து விளையாடிக் கொண்டு இருந்ததாகவும், பின் அவர் வாழ்ந்த பகுதியில் இருந்த வேறொரு பயிற்சியாளரின் ஆலோசனையால் தடகளப்போட்டிகளில் பங்கேற்க பயிற்சி மேற்கொண்டார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. காற்று போல் கடந்து சென்று வெற்றிக்கனியை ஹிமா ஈட்டியதாக கூறும் நிபன் இது போன்ற திறமையை காண்பது அரிது என கூறுகின்றனர்.

எதிர்ப்பார்ப்பை மிஞ்சிய ஹிமா தாஸ்

நிபன், ஹிமாவின் வெற்றிக்கும் அவர் பயிற்சி மேற்கொள்வதற்கும் உதவியாக இருந்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் கவ்ஹாத்திக்கு வரச்சொல்லி பயிற்சி எடுத்துக்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளார் ஹிமாவின் உடைய பயிற்சியாளர். சாருசாய் விளையாட்டு வளாகமருகே தங்கும் வசதிகள் ஏற்ப்படுத்திக்கொடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தடகள  பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் நிபன். நிபன் மகிழ்ச்சியுடன் கூறுகையில் ஆசிய போட்டிகளுக்கு ஹிமாவை தயார் செய்ததாகவும், ஆனால் சர்வதேச போட்டியிலேயே வென்று எதிர்ப்பார்ப்புகளை மீறி முன்னேறியுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

ட்விட்டரில் ஹிமாவுக்கு பொழிந்த பாராட்டு மழை

ஹிமாவின் வெற்றியைத் தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ராஜ்ய்வர்தன் ரத்தோர், அமிதாப் பச்சன், சேவாக், பி.டி உஷா, முகமது கெய்ப் ஆகியோர் ஹிமாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர், இந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் வென்ற முதல் தங்கம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கும், அஸ்ஸாமுக்கும் பெருமைக்கொள்ளும் தருணம் என கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி,  ட்விட்டரில் கருத்துத்தெரிவிக்கையில், இளம் வீரர்கள் வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என கூறியுள்ளார்.

கண்கலங்கிய ஹிமா தாஸ்

நியூஸ் 18 வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், பரிசளிக்கும் போது ஹிமா கண்கலங்கியதாக குறிப்பிட்டுள்ளது. பரிசு வழங்கும் அரங்கில் நின்று கொண்டிருந்த ஹிமா, தேசிய கீதம் ஒலிக்கப்பட்டவுடன் அவர் கண்களில் கண்ணீர் வந்ததை அனைவரையும் நெகிழச்செய்தது. இதன் வீடியோவை ட்விட்டரில் பதிந்து நெகிழ்ந்துள்ளார் மகிந்தரா குழுமத்தலைவர் ஆனந்த் மஹிந்தரா.

ஹிமா தாஸுடைய வெற்றி பல வீரர்களை உற்சாகப்படுத்தி வாழ்வில் உயர வழிவகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை

Tags
Show More
Back to top button
Close
Close