சிறப்பு கட்டுரைகள்

லோக் ஆயுக்தா: ஊழல்வாதிகளுக்கு அடிக்கப்படும் சாவுமணி..!

லோக்பாலும், லோக் ஆயுக்தாவும் ஊழலை ஒழிக்க வந்த இரட்டைக் குழல் துப்பாக்கியாக வர்ணிக்கப்பட்டுகிறது. மத்தியில் ஊழல் குற்றங்களை குடைந்து எடுக்க ‘லோக் பால்’, மாநிலத்தில் லோக் ஆயுக்தா என்று செயல்பட்டு வருகிறது.

லோக் பால் என்றால் என்ன..?

எதிர்காலத்தில் வல்லரசாக மாறும் வாய்ப்புள்ள ஒரு நாடு. அதற்க்கு எல்லா வளங்களும் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவு மனித வளம் மற்றும் இளைஞர்கள் நிறைந்த நாடு இந்தியா. இத்தனை வளங்களும் வாய்ப்புகளும் இருந்தும், இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் இருக்கின்ற பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமானது அதிகார மட்டத்தில் உள்ள ஊழலும் லஞ்சமும் ஆகும். இன்று நாட்டிலுள்ள மக்களின் பெரும்பாலானோர் வறுமையில் வாடும் போது அரசியல் வாதிகள் மட்டும் சுக போகத்தில் திளைப்பதை காணமுடிகிறது.

அருண் சென் குப்தா கமிட்டி அறிக்கை நாட்டிலுள்ள வறுமை கோட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை 74.7% என்று கூறுகிறது. இது போன்ற பசியிலிருந்தும், கல்வியின்மை, சுகாதாரச் சீர்கேட்டை விட்டும் இந்திய பூர்வீக மக்களை காப்பாற்ற வேண்டிய அரசாங்கம் என்ன செய்கிறது? அரசியல்வாதிகளும் அடிகாரவர்க்கத்தினரும் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் இந்த கருப்பு பணத்தை சுவீஸ் போன்ற வெளிநாட்டு வங்கியில் பதுக்கி வைக்கின்றனர்.

GLOBAL FINANCE INSTITUTE அறிக்கையின்படி கடந்த 59 வருடத்தில் 211 பில்லியன் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 17.7% அளவிற்கு மொத்த உற்பத்தியில்(Gross Total Production) இழப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதன் மூலம் 211 பில்லியன் டாலர் வரி ஏய்ப்பு நடந்துள்ளது. இது அரசாங்கத்திற்கு தெரிந்தே தான் நடக்கிறது. இது இந்தியாவில் முறையாக செலவழிக்கப்பட்டிருந்தால் ஏகப்பட்ட கடன் அடைக்கப்பட்டிருக்கும்.

லோக் ஆயுக்தா என்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போதும், லஞ்ச ஊழலில் ஈடுபடும் போதும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசாரணை மன்றம்.

இந்த விசாரணை மன்றம் முதன்முதலில் 1809- ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் அமைக்கப்பட்டது. அதன்பிறகு மேலும் பல நாடுகள் இந்த விசாரணை மன்றத்தை அமைத்தன. இந்தியாவில் 1996 ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான ADMINISTRATIVE REFORMS COMMISSION (ARC) என்று சொல்லப்படும் நிர்வாக மறு ஆய்வுக் குழு, இந்தியாவில் நடைபெறும் அதிகார முறைகேடுகளை விசாரிக்கவும், பொது மக்களை அதன் கண்காணிப்பாளர்களாக ஆக்கவும் இரண்டு பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது. அதில் ஒன்று, மத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் முறைகேடுகளில் ஈடுபடும் போது அவர்களை விசாரிப்பதர்க்கென தனியொரு விசாரணை மன்றம் “லோக்பால்” அமைக்க வேண்டும்.

லோக் பாலின் பயணம்:

லோக்பால்என்னும் சொல், லஷ்மி மால் சிங்வி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் உருவாக்கப்பட்டது. லோக்என்றால் மக்கள் என்றும் பலாஎன்றால் மக்களை காப்பவர்கள் என்றும் சமஸ்க்ருதத்தில் அர்த்தமாகும்.

1966 ல், மொரார்ஜி தேசாய் அவர்கள் தலைமையில், Administrative Reforms Commission (ARC) அன்மிஸிஸ்டிரேடிவ் ரிபார்ஸ் கமிஷன் ஒன்றின் பரிந்துரையில், மத்திய அரசில் லோக் பால், மாநில அரசில் லோக் ஆயுக்தா என்னும் அமைப்புக்கள் உருவாக்க வேண்டும் என்று கூறியது. லோக் பால் அல்லது லோக் ஆயுக்தா என்பவர் மத்திய மாநில அரசால் நியமிக்கப்படும் ஒரு அதிகாரி. அவர் ஒரு ஓய்வு பெற்ற ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதி மன்ற நீதிபதியாக இருக்கலாம். அவர் கீழ் அமையும் அமைப்புக்கு, பொது மக்கள் தொடுக்கும், புகாரின் பேரில், அரசு ஊழியர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் பற்றிய ஊழல்களை, தவறுகளை விசாரிக்கவும் தண்டனை அளிக்கவும் அதிகாரம் இருக்கும். அந்த மாதிரியான விசாரனையில், பொது மக்களின் குறைகளை விரைவில் களைய ஒரு வழி கிடைக்கும் என்று முடிவானது. லோக்பால் மசோதா மக்களவையில் 1968 ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மொராஜி தேசாய் தலைமையிலான நிர்வாக சீர்திருத்த கமிஷன் 1986 ல் தன் ‘Problems of Redressal of Citizen’s Grievances’ எனும் அறிக்கையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா என்னும் சிறப்பு அதிகாரமிக்க அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

மக்களவையின் 4 வது அமர்வு முடிவடைந்ததால் லோக்பால் மசோதா காலாவதியானது. 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2011,2011 ஆகிய ஆண்டுகளில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் நிறைவேற்றப்படவில்லை. 28 Oct 2011 43 வருடம் கழித்து மீண்டும் 2011 ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு 2013 டிசம்பர் 17,18 ல் இரு அவைகளிலும் நிறைவேறியது.

லோக் ஆயுக்தா தற்போது நடைமுறையில் உள்ள மாநிலங்கள்:

மகாராஷ்டிரா(1971), பீகார்(1973), ராஜஸ்தான்(1973), உத்திரபிரதேசம்(1975), மத்திய பிரதேசம்(1981), ஆந்திரா(1983), ஹிமாச்சல் பிரதேசம்(1983), கர்நாடகா(1985), அஸ்ஸாம்(1986), குஜராத்(1986), கேரளா(1988), பஞ்சாப்(1985), டெல்லி(1996), ஹரியான(1996) உட்பட 15 மாநிலங்களுக்கு மேல் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தின்படி எந்த ஒரு தனி மனிதரும், வழக்கு தொடுக்க முடியும். பொதுமக்கள் தங்களது புகார்களை எழுதி லோக் ஆயுக்தா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். நாம் கொடுக்கும் புகார் விசாரிக்கப்படும். விசாரணையில் ஏதேனும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தவறிழைத்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்படலாம்.

லோக் ஆயுக்தாவின் சிறப்புகள்:

குற்றம் சாட்டப்படும் அரசு அலுவலர்களின் அதிகாரத்தை குறைத்து பதவியிறக்கம் செய்தல், கட்டாய ஓய்வு அளித்தால், வேலையை விட்டு நீக்குதல், ஆண்டு சம்பள உயர்வு விகிதத்தை நிறுத்துதல் ஆகிய பரிந்துரைகளை லோக் ஆயுக்தா நிறுவனம் அரசுக்கு அளிக்கும்.மாநில அரசானது இந்த பரிந்துரைகளை ஏற்கலாம் அல்லது மாற்றலாம். அரசு ஊழியர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க மாநில உயர்நீதி மன்றம் அல்லது சிறப்பு தீர்ப்பாயம் ஆகியவற்றை அணுகலாம். லோக் ஆயுக்தாவின் அதிகாரிகளை மாநில கவர்னர் நியமனம் செய்கிறார். மேலும் நியமனம் தொடர்பான ஆலோசனைகளை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மற்றும் மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் பெற வேண்டும். லோக் ஆயுக்தாவின் நிர்வாகிகளாக பாராளுமன்ற உறுப்பினரையோ, சட்ட மன்ற உறுப்பினரையோ அல்லது ஏதேனும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களை நியமிக்க முடியாது.

லோக் ஆயுக்தா சட்டங்கள் மாநிலத்திற்க்கேற்ப மாறுபடுகின்றன. டெல்லியில் உள்ள சட்டத்தின்படி முறையான புகார் கொடுக்கப்பட்டால், மாநில முதல்வர், மாநில அமைச்சர்கள், மாநகர மன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத்தலைவர், இயக்குநர்கள், ஆகியோரை விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இது அதிகாரிகளின் ஊழல், ஒருசார்பு நிலை, அடக்குமுறை, நெறிதவறுதல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு ஆகியவை குறித்து உரிய ஆவணங்களுடன் புகார் செய்யலாம்.

எந்த ஒரு தனி மனிதரும், அவர் அரசு அதிகாரிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அவ்வாறு இல்லாவிட்டாலும் உரிய ஆவணங்கள் தம்மிடம் இருப்பின் அவர் வழக்கு தொடுக்க முடியும். அதிகாரவர்க்கத்தை நடுநடுங்கச் செய்யும் இந்தச் சட்டம் தமிழகத்தில் அமுல்படுத்த வேண்டும் என்பதே நாட்டின் நலனில் அக்கறை உடையவர்களின் எதிர்பார்ப்பு.

லோக் ஆயுக்தா அமைப்பு மற்றும் அதன் பணி என்ன..?

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தெரிவுக்குழு அமைக்கப்படும். தெரிவுக் குழு தலைவராக முதல்அமைச்சரும், உறுப்பினர்களாக சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரும் இருப்பார்கள். அந்த தெரிவுக் குழுவுக்கு பெயர் பட்டியலைதயாரித்து வழங்க 3 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்படும். தெரிவுக்குழு தேர்ந்தெடுக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பார்.

 

லோக் ஆயுக்தா அமைப்புக்கு நீதிபதியோ, ஊழல் தடுப்பு கொள்கையில், பொது நிர்வாகத்தில், விழிப்புணர்வில், நிதியில், சட்டத்தில் 25 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவரோ தலைவராக நியமிக்கப்படுவார். ஏனைய 4 உறுப்பினர்களில் 2 பேர் நீதித்துறையை சார்ந்தவராக இருப்பார்கள். மீதமுள்ள 2 பேர் ஊழல் தடுப்பு உள்ளிட்ட கொள்கையில் 25 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றவர்கள் நியமிக்கப்படுவார்கள். தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்கும்போது அவர்களின் வயது 45க்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும்.

மேலும், அரசின் துணை செயலாளர் நிலைக்கு குறையாதவர் லோக் ஆயுக்தா அமைப்பின் செயலாளராக நியமிக்கப்படுவார். அவரை அமைப்பின் தலைவர் தேர்வு செய்வார். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள், ஊராட்சி நகராட்சி உறுப்பினர்கள், மத்திய மாநில பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் லோக் ஆயுக்தா அமைப்புக்கு தேர்ந்தெடுக்க முடியாது.

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது. இதில், எது முதலில் வருகிறதோ அதுவரை பொறுப்பில் இருப்பார்கள். லோக் ஆயுக்தா அமைப்பின் நீதிபதிக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் படித்தொகையும், உறுப்பினர்களுக்கு ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மற்றும் படித்தொகையும் வழங்கப்படும். இதற்கான நிதியை மாநில அரசு வழங்கும்.

தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக லோக் ஆயுக்தா இயங்கும். அதன் அதிகார வரம்புக்குள் முதல்அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் வருவார்கள். குற்றம் நடைபெற்றதாகக் கருதப்படும் தேதியில் இருந்து 4 ஆண்டுகளுக்குள் அது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட வேண்டும். அளிக்கப்படும் புகார்கள் மீது, புகார் பெறப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். பொய் புகார் அளித்தது நிரூபிக்கப்பட்டால், புகார் அளித்தவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் லோக் ஆயுக்தாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

லஞ்ச ஒழிப்புத்துறை மாநில அரசின் வரம்பிற்குள் வரும், லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள அதிகாரிகளை மாநில அரசு நினைத்தபடி தூக்கி அடிக்கலாம், தங்களுக்கேற்ற ஆட்களை நியமிக்கலாம். ஆனால் லோக் ஆயுக்தாவில் அப்படிச் செய்யமுடியாது. அதன் நியமனம் மாநில அரசு சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் நீக்க முடியாது, மாற்றவும் முடியாது.

லோக் ஆயுக்தா தலைவர் லஞ்சப் புகாரின் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கலாம், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யலாம். அமைச்சர்கள், முதல்வர், அதிகாரிகள் வீட்டுக்குள் சென்றுகூட ரெய்டு நடத்த உரிமை உண்டு. பொதுமக்கள் சேவை புகாரின் பேரில் நோட்டீஸ் அனுப்பலாம். விளக்கம் கேட்கலாம்.

லோக்பால் மசோதாவின் முக்கிய கூறுகள்:

 1. தலைவர் மற்றும் அதிக பட்சமாக 8 உறுப்பினர்களை கொண்டது லோக்பால் அமைப்பு. இதன் உறுப்பினர்களில் பாதிப்பேர் நீதித்துறை சார்ந்தவர்கள்.
 2. லோக்பால் உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மகளிராக இருக்கவேண்டும்.
 3. பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தலைமை நீதிபதி அல்லது இந்திய தலைமை நீதிபதி நியமனம் செய்யும் உச்சநீதிமன்ற நீதிபதி, மற்றும் (தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள முதல் 4 பேர் பரிந்துரையின்பேரில்) குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் சட்ட வல்லுநர் ஆகியோர் இடம்பெற்ற தேர்வுக்குழு வாயிலாக லோக்பால் தலைவர், உறுப்பினர்கள் நியமிப்பு.
 4. லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர்.
 5. விசாரணை வரம்புக்குள் அரசு ஊழியர்களில் அனைத்துப் பிரிவினரும் வருவார்கள்.
 6. ஒரு ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கு மேல் அந்நிய நாட்டில் உள்ளவர்கள் மூலமாக நன்கொடை பெறும் எல்லோரும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரப்படு வர்.
 7. நேர்மை, நாணயம் மிக்க ஊழி யர்களுக்கு உரிய பாதுகாப்பு
 8. லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை சிபிஐ,உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும்போது அதைக் கண்காணிக்க, மேற்பார்வையிட லோக்பாலுக்கு அதிகாரம்.
 9. சிபிஐ இயக்குநரை பிரதமர் தலைமையிலான உயர் அதிகார குழு பரிந்துரைக்கும்.
 10. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரை பேரில் சிபிஐ வழக்கு தொடுக்கும் பிரிவின் இயக்குநர் நியமிப்பு
 11. லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் லோக்பால் ஒப்புதல் தந்தால் மட்டுமே பணியிடமாற்றம்.
 12. ஊழல் வழியில் சேர்த்த சொத்துக் களை, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பறிமுதல் செய்ய அதிகாரம் தரும் விதிமுறை கள் உள்ளடங்கும்.
 13. ஆரம்ப நிலை விசாரணை, புலனாய்வு, வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம், அதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் அதிகாரம்.

 

இறுதியாக:

மைய ஊழல் தடுப்பு ஆணையத்தில் கடந்த ஜனவரி 2007 தொடங்கி செப்டம்பர் 2014 முடிய அதிகாரமுறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பாக 3,634 புகார்கள் பதியப்பட்டுள்ளன. இதில் 1,063 புகார்கள் மட்டுமே விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதில் 78 வழக்குகளில் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் இடமாறுதல், பதவி உயர்வும் சம்பள உயர்வும் நிறுத்திவைப்பு என்ற வகையில் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஊழலில் ஈடுபட்ட ஒரு அதிகாரி மீதுகூட கிரிமனல் குற்றவழக்கு தொடர பரிந்துரைக்கப்படவில்லை. இது, ஊழல் தடுப்பு ஆணையம் என்பது சோளக்காட்டுப் பொம்மையைவிட நகைப்புக்குரிய நிலையில் இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது.

இப்படி கேலிக்குரிய ஆட்சி நிலவிய வேளையில் 2014ல் பொறுப்பேற்ற மோடி அரசு ஊழலை களையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பதினைந்து மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு திராவிட கழகத்தால் ஊழலுக்கு தோதாக புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் இச்சட்டம் நிறைவேறியுள்ளது. இனி ஒவ்வொரு களைகளும் பிடுங்கி எறியப்பட்டு, இந்தியா முழுவதும் ஊழல் இல்லா தாயகம் ஆகும் என்பது உறுதியாகியுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close