இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியான சாதனை..!

 

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இந்தியாவில் மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவதில் தமிழகம் முன்னோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மக்களின் நல்வாழ்வை மேம்படுத்த இந்தியா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், 1960ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, தற்போது மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 வயதாக அதிகரித்துள்ளது என்று கூறினார். ஆண்டுக்கு ஆயிரத்தில் 53 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துபோகும் நிலை இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

 

மக்களுக்கு சிறந்த மருத்துவச் சேவை வழங்க, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும், 10 கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தாக்கல் செய்த, 2018-19ம் நிதியாண்டு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளதாகவும்,
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, மருத்துவ காப்பீடு பெற முடியும் எனவும், பணம் செலுத்தாமலேயே, நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள, தனியார் மற்றும் அரசு மருத்துவமனை களில் சிகிச்சை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

வெளிநாட்டவர் மருத்துவம் பெறுவதற்கு இந்தியா வருவது அதிகரித்துள்ளதாகவும், மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவதில் தமிழகம் முன்னோடியாக இருப்பதாகவும் வெங்கய்ய நாயுடு கூறினார்.

Share