சர்கார் படத்தின் மூலம் புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் சர்க்கார் திரைப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு பசுமை தாயகம் என்ற அமைப்பு ‘தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாடு’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்திய பொழுது இனிமேல் நான் சிகரெட்டே பிடிக்க மாட்டேன் என்று அடித்து சத்தியம் செய்வதை போல சொன்னார் நடிகர் விஜய்.

ஆனால் 2012-ஆம் ஆண்டு வெளியான ‘துப்பாக்கி’ படத்தின் போஸ்டரில் சுருட்டு பிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்று இருந்தது. அப்போது காரணம் கேட்டதிற்கு  ஏதோ சாக்கு போக்கு சொல்லி ‘இனி  அடுத்து வரும் படங்களில் உறுதியாக புகைபிடிக்க மாட்டேன்’ என்று கூறினார். சமூக ஆர்வலர்களும் உண்மை என்று நம்பி, திரைப்படங்களில் புகை பிடிப்பதை நிறுத்தி விட்ட திரை பிரபலங்களின் வரிசையில் நடிகர் விஜய்-யையும் சேர்த்து வந்தனர்.

இந்த நிலையில், புகைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட நடிகர் விஜய், தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரிடம் இருந்து அபராதம் வசூலிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சர்கார் படத்தின் விளம்பரம் புகைபிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் புகை பிடிக்க தடை சட்டங்கள் உள்ளதாகவும், புகைபிடித்தலின் அபாயம் குறித்த எச்சரிக்கை விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தகைய விளம்பரங்களை அனுமதிப்பது புகைபிடிப்பதை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில் இருப்பதால் விஜய், முருகதாஸ், சன்பிக்சர்ஸ் உள்ளிட்டோரிடம் இருந்து 10 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும் வசூலிக்கப்படும் 10 கோடி ரூபாய் அபராதத்தை சென்னை ராயப்பேட்டை அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கவும் உத்தரவிட வேண்டும என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

 

Picture Courtesy : IBTimes

Share