ராணுவ நிலையங்கள், கண்டோன்மென்ட்டுகள், பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் சுமார் 238 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவிருக்கும் 17 புதிய துப்பாக்கி பயிற்சி மையங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ராணுவத்தின் தெற்கு கமாண்ட் பகுதியில் 7 மையங்களும், கிழக்கில் 3-ம், வடக்கில் 2-ம், தென்மேற்கு மற்றும் மத்திய பகுதியில் தலா ஒரு மையமும் அமைக்கப்படும். மத்திய கமாண்ட் பகுதியில் கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் அமைக்கப்படும். தற்போது நாடெங்கும் உள்ள இதுபோன்ற துப்பாக்கி பயிற்சி மையங்களுடன் கூடுதலாக இந்த 17 புதிய மையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. இந்த பயிற்சி மையங்களில் 300 முதல் 500 மீட்டர் வரையிலிருந்து துப்பாக்கியால் சுட்டுப் பழகலாம்.

துப்பாக்கி பயிற்சியின் போது விபத்தின் காரணமாக ஏற்படும் காயங்களை தடுக்கும் வகையில் துப்பாக்கி பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகின்றன. சமீப காலமாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைச் சுற்றி பொது மக்கள் அதிகமாகக் குடியேறியிருப்பதால், இதுபோன்ற விபத்துக்களுக்கான வாய்ப்புகள் பெருகியுள்ளன. பாதுகாப்பு படைகளின் பயிற்சிக்கான தேவைகள் பாதிக்கப்படாமல், காயமடையும் சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தோடு பாதுகாப்பு அமைச்சகம் இதுபோன்ற கூடுதல் துப்பாக்கி பயிற்சி மையங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Share