சிறப்பு கட்டுரைகள்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஹீரோ திரு. பொன் மாணிக்கவேலின் சாதனைகள் : ஒரு சிறப்பு பார்வை

ஒரு நாட்டினுடைய வளர்ச்சி அந்த நாட்டினுடைய மக்களின் உழைப்பை பொறுத்து அமைகிறது. பொது மக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முக்கிய பங்களிப்பது அந்த நாட்டினுடைய வலிமையான சட்டம் ஒழுங்கு நிலைமை. குற்றங்கள் நிகழாத நாடோ அல்லது பகுதியோ இல்லை. நிகழும் குற்றங்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பது, குற்றங்களுக்கு காரணமாக இருப்பவர்களை விரைவாக கண்டுப்பிடிப்பது, நிகழ்ந்த குற்றங்களின் உண்மையை கண்டு பிடிக்கும்  பொருட்டு விரைவாக ஆதாரங்களை திரட்டுவது, சட்டம் ஒழுங்கு சீர்குலைவை தவிர்க்கும் பொருட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை காவல்துறையின் தலையாய பணிகளாக இருக்கிறது.

நம் முன்னோர்களின் கட்டடக்கலை

பண்டைய தமிழர்கள், கடவுளை கோவிலில் வீற்றிருக்க வைத்ததோடு, கட்டடக் கலையையும் கலை நயத்தையும் விதைத்து விட்டு சென்றிருக்கிறார்கள். தொன்மை, அரிய வேலைப்பாடுகள், சிலை செதுக்கும் நுட்பம், கலைநயம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை நிறைவாக கொண்டவை நம் திருக் கோவில்களின் அரிய வகை பொக்கிஷங்களான மரகதச் சிலைகள், ஐம்பொன் சிலைகள், சுவாமி விக்ரங்கள். கங்கைக்கொண்ட சோழபுரம், தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், பழனி முருகர் கோவில் உள்ளிட்ட எண்ணற்ற கோவில்களை நம் முன்னோர்கள் நமக்கு அளித்துள்ளனர். கோவில் கட்டியதோடு நின்று விடாமல் கோவில்களின் அருகே குளங்கள்,இதர இடங்களில் கயம், வாவி, தடாகம், குட்டம் , ஏரி, மடு என்று பல நீர் நிலைகளை அமைத்து நீர் மேலாண்மையிலும் சிறந்து விளங்கினர். இதற்கு கரிகால சோழன் கட்டிய கல்லனையே சிறந்த எடுத்துக்காட்டு. பெரு நஷ்டத்தை ஏற்படுத்தும் மனிதனின் பேராசையால் இன்றைக்கு கோவில்களின் பொக்கிஷங்களும் களவாடப் படுகின்றன, நீர் நிலைகளும் அழிக்கப்படுகின்றன. எவ்வளவு விலை கொடுத்தாலும், ஈடாகாத பொக்கிஷங்களாக,  தமிழகத்தின் சுவாமி சிலைகள் இருக்கின்றன. பன்னாட்டில் வாழும் பலருக்கும் தமிழக பொக்கிஷங்களை அடைய வேண்டும் என்ற ஆசை இருப்பதையே சிலை திருட்டுகள் காட்டுகின்றன.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 

சிலை கடத்தும் சமூக விரோத கும்பல்,  சிலையை கடத்திய பின்னர், போலி சிலைகளை நிறுவி மாற்றிவிடுகின்றனர்பெரும்பாலான சிலை திருட்டுகள், வழக்குகளாகக் கூட பதியபடாமலிருக்கின்றனஆர்ட் லாஸ் ரெஜீஸ்டர்(Art loss Registry) என்னும் பதிவேட்டில் கூட திருடப்பட்ட சிலைகள் பற்றி பதிவிடுவதில்லைஆர்ட் லாஸ் ரெஜீஸ்டரி எனப்படுவது களவாடப்ட்ட பொக்கிஷங்கள் பதிவு செய்யப்பட்ட ஒரு கருவூலம்(சுருக்கமாக சொன்னால் ஒரு இணைய தளம்). இந்த கருவூலத்தில் களவாடப்ட்ட பொருளை பதிவு செய்தால் பிறகு அருங்காட்சியகத்தில் கொள்ளையர்களால் விற்க இயலாது. பெரும்பலான சிலை திருட்டு சம்பவங்களுக்கு புகார் கூட தெரிவிக்காமலிருப்பது கசப்பான உண்மை. என்றோ திருடப்பட்ட சிலைகளை காவல்துறை கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.  1980 ஆம் ஆண்டு சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வந்தது.1983 காலக்கட்டத்தில் பெருகிய சிலைகடத்தல் குற்றங்களை தடுக்கும் பொருட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டது. 

 

சிலை கடத்தல் பிரிவின் ஹீரோ பொன் மாணிக்கவேல்

மூத்த காவல்துறை அதிகாரி திரு. பொன் மாணிக்கவேல், சாதாரண நிலையில் தன்னுடைய வாழ்க்கையை துவங்கி, ஒரு இன்ஸ்பெக்டராக இருந்து, பிறகு ரயில்வே ஐ.ஜீ, கூடுதல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜீ என காவல்துறையில் உயர்ந்தவர். ஒரு காவல்துறை அதிகாரியின் வெற்றி, மக்களிடம் பெறும் ஆதரவை பொறுத்துத்தான் இருக்கிறது. திரு. பொன் மாணிக்கவேல் தன்னுடைய புலனாய்வு திறனாலும், நேர்மையாலும் மக்களிடம் இவருக்கு நல்ல மரியாதை. குறிப்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இவருடைய சக குழுவோடு ஆற்றிய பணிகள் மக்களிடம் இவருடைய நன் மதிப்பை உயர்த்தி இருக்கிறது. பல வழக்குகளில் தன் உழைப்பால் அரிய வகை தமிழ் பொக்கிஷங்களை மீட்டெடுத்தவர்.

இந்த துறையின் டி.ஐ.ஜி-யாக திரு.பொன். மாணிக்கவேல், 2012 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். 2015-இல் ஐ.ஜி பதவி உயர்வு பெற்ற பின்னரும்,  இதே துறையில் அவர் தொடர்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் அந்தப் பணியில் நீடித்த நிலையில், இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைவராக திரு.பொன் மாணிக்கவேல் நீடிக்க வேண்டுமென்றும், அவருக்குத் தேவையான வசதிகளை அரசு செய்துதர வேண்டுமென்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொன்மாணிக்கவேல் மீட்டெடுத்த தஞ்சை பெரிய கோவில் பொக்கிஷங்கள்

திரு. பொன் மாணிக்கவேல், பல நூறு சிலை திருட்டு வழக்குகளில் திறம்பட பணியாற்றியவர். அண்மையில் இவர் குஜராத் அகமதாபாத் அருங்காட்சியகத்திலிருந்து மீட்டெடுத்த தஞ்சாவூர் பெரிய கோவில் சொந்தமான ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு களவாடப்பட்டவை. அனைவரையும் மெய்சிலிர்க்கும் வண்ணம்  இவருடைய மீட்பு நடவடிக்கைகள் இருந்தது. அகமதாபாத் காலிகோ அருங்காட்சியகத்திலிருந்து கடத்தப்பட்ட சோழ மன்னன் மற்றும் லோகமாதேவி சிலைகள் மே மாதம் 31ம் தேதி தமிழ் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 2018 மே 29 ஆம் தேதி காலிகோ அருங்காட்சியகம் சென்று சிலைகள் தஞ்சை பெரிய கோவிலுக்குரியது என்பதற்கான ஆவணங்களை காண்பித்து சிலைகளை காண்பித்தனர். திரு பொன் மாணிக்கவேல் குழு நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டன. ராவ் பஹதூர் ஸ்ரீனிவாசா என்பவரால் சிலைகள் கடத்தப்பட்டு பல கோடி ரூபாய்க்கு விற்க்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

திருவண்ணாமலையில் பிடிப்பட்ட சிலை கடத்தும் கும்பல்     

2017-ல் செப்டம்பர் மாதம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஒரு உணவகத்தில் மாறுவேடமிட்டு சென்றிருந்தனர் பொன்மாணிக்கவேல் குழுவினர். கிடைத்த தகவலின்படி முருகன் மற்றும் நித்யாநன்தம் அந்த உணவகத்தில் கோவில் சிலைகளை சட்டவிரோதமாக கடத்தி விற்பது தெரியவந்தது. இந்த கும்பலை தொடர்பு கொண்ட போலீசார், சிலைகளை வாங்குவதற்காக  பணத்துடன் வந்திருப்பதாக தகவல் தெரிவித்து ஆசை வலை விரித்தனர். அதைத்தொடர்ந்து, கிரிவலப்பாதையில் 2, 3 இடங்களுக்கு வரவழைத்து அந்த கும்பல் அலைக்கழித்தது. கடைசியாக, கிரிவலப்பாதை எமலிங்கம் அருகே கும்பலைச் சேர்ந்த 3 பேர் ஒரு காரில் வந்தனர். அங்கு, மாறு வேடத்தில் போலீசார் சென்றனர். சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது. ஆனாலும், சிலைகளை கொண்டுவந்து காட்டாமல் கும்பல் அலைக்கழித்தது.

எனவே, சூட்கேசில் வைத்திருந்த பணத்தை எடுத்து காட்டி, அவர்களை போலீசார் நம்ப வைத்தனர். அப்போது, இரண்டு பேர் வேறொரு காரில் சிலைகளை கொண்டு வந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக இரு சக்கர வாகனத்தில் 2 பேர் வந்திருந்தனர். காரில் வைத்தப்படியே சிலைகளை பார்வையிட அனுமதித்தனர். அப்போது, சுமார் ஒரு அடி உயரமுள்ள பச்சை மரகத நடராஜர் சிலையை 7 கோடி வரை விலை பேசினர். அதேபோல், சுமார் 2 அடி உயர 5 ஐம்பொன் சிலைகளுக்கு பல கோடி ரூபாய் விலை தெரிவித்தனர். முழு தொகையையும் செட்டில் செய்த பிறகே, சிலைகளை கொடுப்போம் என்றனர்.

இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த இரவு 7 மணியளவில், அப்பகுதியில் சாமியார், பிச்சைக்காரர், சாலையோர பழ வியாபாரி போன்ற வேடங்களில் ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருந்த போலீசார், துப்பாக்கி முனையில் சிலை கடத்தல் கும்பலை சுற்றிவளைத்து கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்தை பால்ராஜ், செந்தில் குமார், குணசேகரன், திவ்யா நந்தம் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷ்யாம் சுந்தர் ஆகிய ஐந்து பேர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. ஐந்து பஞ்ச லோக சிலைகள், மரகதத்தாலான நடராஜர் சிலை கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஒரு சிலையில் தலை வெட்டப்பட்டிருந்ததும், மற்றோரு சிலையில் துளையிடப்படிருந்ததும் தெரிய வந்தது.

2016 ஆம் ஆண்டு புதுச்சேரி கோலஸ் நகரில் நடத்தப்பட்ட சோதனை

2016 ஆம் ஆண்டு திரு பொன். மாணிக்கவேல் தலைமையில், புதுச்சேரி கோலஸ் நகரில் நடத்தப்பட்ட சோதனை பெருமளவு பேசப்பட்டது. சிலை கடத்தும் தீனதயாளனுடன் தொடர்பு வைத்திருந்த புஷ்பராஜன் இவருடைய குழுவால் கைது செய்யப்பட்டார். நடராஜர், மகிஷாசுரமர்த்தினி, சோமஸ்க்ந்தர், சிவன், பார்வதி ஆகிய சிலைகள் இவர் தலைமையேற்ற குழு நடத்திய சோதனையில் மீட்கப்பட்டது. இவர் நடத்திய சோதனையில் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே சோமநாத ஈஸ்வரன் திருக்கோவில் சிலைகளும் அடக்கமெனத் தெரிய வந்தது.

சோதனைகள்

ஒரு மனிதர், தனது அனைத்து சக்திகளையும் பயன் படுத்தி, தன்னுடைய கடைமையை சரி வர ஆற்றும் போது, அவருக்கு சோதனைகள் வருவது இயற்க்கை. ஒரு பொறுப்புள்ள போலீஸ் அதிகாரியாக இருக்கும் திரு பொன். மாணிக்கவேல் இதற்கு விதிவிலக்கல்ல.

தமிழக அரசு, அவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என பகிரங்கமாக குற்றம் சாட்டும் அளவுக்கு தள்ளப்பட்டார், திரு பொன். மாணிக்கவேல். சிலைகளை பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

அதற்கு அரசு தரப்பில், கோயில்கள் புனரமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் பாதுகாப்பு அறை கட்டுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

பணி மாற்றம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பணி மாற்றம் செய்யப்பட்டார் திரு. பொன்மாணிக்கவேல். இதைப் பற்றி விளக்கமளித்த முதல்வர், காவல்துறை தலைவர் மரியாதைக்குரிய திரு.பொன் மாணிக்கவேல் இடம் மாற்றத்தை பற்றி சொன்னார். “அவர் செல்வி. ஜெயலலிதா இருக்கின்ற போது தான், 2012-ம் ஆண்டு இந்த பணியிலே அமர்த்தப்பட்டார். அப்போது டி.ஐ.ஜி.யாக இருந்தார். 2015-ல் ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்ட போது, அந்த துறையிலேயே தொடர்ந்து இருந்தார். ஐந்தரை ஆண்டு காலம் அதே துறையிலே இருந்தார். ஆகவே, பணியிடம் மாற்றுவது எல்லா ஆட்சியிலும் நடைபெறும் ஒரு சம்பவம். நீண்ட நாட்கள் பணியிலே இருந்ததால், பணி மாறுதல் செய்வார்கள். அந்த அடிப்படையிலே தான் அவர் பணிமாற்றம் செய்யப்பட்டாரே தவிர, வேறு ஒன்றும் இல்லை”, என்று விளக்கமளித்தார்.

தனக்கு வரும் சோதனைகளையும் தாண்டி, சிலை கடத்தல் தடுப்பிற்காக போராடும், திரு. பொன் மாணிக்கவேல் அவர்களின் சாதனைகள், அணைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறது.

Picture Credits : The Hindu

Co-Authored by Vignesh

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close