அசுரவதம், ஒரு திரில்லர் வகை திரைப்படம். நாடோடிகள் புகழ் சசிகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஆங்கிலத்தில் “Revenge Thriller” என்று கூறப்படும் பழிவாங்கல் வகை திரைப்படம் தான்.

யார் யாரை பழி வாங்குகிறார்கள்? எப்படி பழி வாங்குகிறார்கள்? அந்த பழி வாங்கும் கதையை இயக்குனர் எப்படி படமாக்கி இருக்கிறார்? பார்ப்போம்.

பொதுவாகவே ஒரு பழிவாங்கும் கதை என்றால், கதாநாயகன் வில்லன்களோடு மோதும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். திரைக்கதை விறுவிறுப்பாக இருக்க வேண்டும். அடுத்தது என்ன என்று ரசிகர்கள் யூகிக்க முடியாதபடி கதை நகர்த்துவது தான் இயக்குனரின் சாமர்த்தியம். அப்படி ஒரு திரைக்கதை அமைக்க வேண்டுமென்றால் கதாநாயகன் மட்டுமல்ல, வில்லனுக்கும் சரியான முக்கியத்துவம் இருக்க வேண்டும். அசுரவதத்தை பொறுத்தவரை முதல் பாதி முழுக்க விறுவிறுப்பாக படமாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வில்லனுக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய முக்கியத்துவத்தை மறந்து விட்டனர்.

முதல் பாதியில் நிறைய காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். ஆனால் அவற்றை ஒரே வரியில் கூறிவிடலாம். கதாநாயகன் துரத்துவார், அவருக்கு பயந்து வில்லன் ஓடுவார். இங்கே வில்லனாக நடித்திருப்பவர் வசுமித்ரா. அவர் கதாபாத்திரத்தை ஏதோ ஒரு கோமாளியின் கதாபாத்திரம் போல சித்தரித்திருக்கிறார்கள். இது ஒரு Sex Pervert எனப்படும் காம வெறி பிடித்த கதாபாத்திரம். இவரும் இவரது நண்பராக வரும் நமோ நாராயணாவும் ஒரு கட்டத்தில் லொள்ளு சபா போல, ஏதோ ஒரு நையாண்டி திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தான் ஏற்படுத்துகிறார்கள்.

முதல் காட்சியில் இருக்கும் சுவாரசியம் தொடர்ந்த வந்த காட்சிகளில் துளி கூட இல்லை.

இரண்டாம் பாதியிலாவது ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருந்தால், அசுரவதம் ஒரு குறைந்தபட்ச பொழுதுபோக்கு படமாகவாவது அமைந்திருக்கும். ஆனால் இரண்டாம் பாதியிலும் இயக்குனர் சொதப்பி இருக்கிறார். கதாநாயகி நந்திதா ஸ்வேதாவுக்கு எந்த வேலையும் இல்லை. வசுமித்ராவின் மனைவியாக வரும் ஷீலா ராஜ்குமாருக்கு இருக்கும் முக்கியத்துவம் கூட நந்திதா ஸ்வேதாவுக்கு கொடுக்கப்படவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாகவே பணியாற்றி இருக்கிறார்கள். குறிப்பாக ஒளிப்பதிவாளர் திரு. கதிர் மற்றும் இசையமைப்பாளர் திரு. கோவிந்த். கோவிந்த் தன் பின்னணி இசையால் ஒரு திரில்லர் உணர்வு கொடுக்க அசுர பிரயத்தனம் எடுத்திருக்கிறார். ஆனால் அவரது முயற்சியை இயக்குனர் திரு. மருதுபாண்டியன் வதம் செய்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

இந்த திரைப்படத்தில் மற்ற சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன. திரு.சசிகுமார் பக்கம் பக்கமாக வசனம் பேசவில்லை, டூயட் பாடவில்லை, ஒரே ஒரு பாடல் மட்டுமே.

பணம் கொடுத்து திரையரங்கிற்கு வந்த நல்ல உள்ளங்களை எல்லாம், அசுரர்கள் என்று நினைத்து விட்டாரோ என்னவோ, இயக்குனர். அவர்களை வதம் செய்வது போல படம் எடுத்து விட்டார்.

நம்மை பொறுத்த வரை, அசுரவதம் ஒரு தண்டனை என்றே கூற வேண்டும்.

Picture Credits – Indian Express

Share