நீண்ட நாட்கள் தயாரிப்பிலிருந்து பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி இருக்கும் படம் தான் டிக் டிக் டிக். ஆங்கிலத்தில் science fiction என்று கூறப்படும் அறிவியல் புனைவுக்கதை வகை திரைப்படம் என்ற எதிர்பார்ப்போடு இப்படம் வெளியாகி இருக்கிறது.

விண்வெளி பற்றிய படம் என்பதால் இன்டெர்ஸ்டெல்லர் போல முழுக்க முழுக்க அறிவியல் பற்றிய படம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

முதல் காட்சியிலேயே இயக்குனர் கதைக்குள் சென்று விடுகிறார். தமிழகத்தை தாக்க வரும் ஒரு சக்தி வாய்ந்த விண்கல்லை தடுக்க ராணுவத்தின் விண்வெளி சார்ந்த பிரிவினர் எடுக்கும் முயற்சிகளே டிக் டிக் டிக். இந்த ஒரு வரியில் இருக்கும் சுவாரசியம் படம் முழுக்க இருக்கிறதா என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்று தான் கூற வேண்டும்.

பொதுவாகவே இது போன்ற படங்களில் லாஜிக் பார்க்க கூடாது என்பார்கள். உண்மை தான். ஆனால் சயின்ஸ் பிக்ஷன் வகை படங்களை எடுக்கும் போது ஓரளவிற்காவது நம்ப வைக்க முயற்சிக்க வேண்டும். இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் அந்த முயற்சியை அறவே தவிர்த்திருக்கிறார்.

இந்த தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு ராணுவத்தின் பேரில் அப்படி என்ன தான் கோபமோ தெரியவில்லை. ராணுவ தலைமை அதிகாரியாக ஜெயப்ரகாஷ். பொருத்தமான தேர்வு தான். இந்த விண்கல்லை சிதறடிக்கும் குழுவில் மற்ற ராணுவ அதிகாரிகளான வின்சென்ட் அசோகன், கதாநாயகி நிவேதா பெத்துராஜ். இந்த விண்கல்லை அழிக்க தேவையான ஏவுகணையை திருட இவர்களுக்கு ஒரு திருடன் தேவைப்படுகிறார். ஏன் ராணுவத்தில் ஒரு திறமைசாலி கூடவா இல்லை? படம் அனைத்து தரப்பினரிடமும் சென்றடைய இப்படி சில விஷயங்களை புகுத்துவது ஒன்றும் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல என்பது வாஸ்தவம் தான். அதோடு நின்றிருக்கலாம் இந்த கூத்து.

அந்த திருடன் தான் நம் கதாநாயகன் ஜெயம் ரவி. அவர் தன்னுடைய நண்பர்களான ரமேஷ் மற்றும் அர்ஜுனனோடு இந்த குழுவில் இணைகிறார். நமக்கு ஒரு விஷயம் புரியவில்லை. நாட்டுப்பற்று என்பது என்ன அவ்வளவு தவறான விஷயமா? ஒரு விண்வெளி ஆராய்ச்சி பற்றிய திரைப்படத்தில் கூட “எங்க நாட்டுப்பற்று இருக்கட்டும், நீங்க use பண்ற phone இந்தியாவிலே தயாரானதா?” என்ற கேள்வி எந்த அளவிற்கு இந்த கதைக்கு அவசியம் என்பது நமக்கு தெரியவில்லை. அதே போல, நிவேதா பெத்துராஜை ராணுவ அதிகாரியாக நடிக்க வைத்து விட்டு, அவரை பற்றி ‘ஒரு above average figure மச்சான்’ என்று ஜெயம் ரவி விமர்சிப்பதும், அவரை நீச்சல் உடையில் பார்த்து இவர்கள் குதூகலமாவதும், நிவேதா ஜெயம் ரவியின் உதட்டில் முத்தமிடுவது என ஒரு மூன்றாம் தர மசாலா படத்தில் இருக்கும் அத்தனை காட்சிகளும் டிக் டிக் டிக் என்கிற வித்தியாசமான படத்திலும் இடம் பெறுகின்றன.

இந்த மசாலா காட்சிகள் படத்தின் வர்த்தகத்திற்காக என்று வைத்து கொண்டாலும் கூட, சுவாரஸ்யமான திரைக்கதையாவது இருக்க வேண்டுமல்லவா? தமிழ் சினிமா ரசிகனின் ரசனை, முத்த காட்சிகள், அனாவசியமான சண்டை காட்சிகள், சில நகைச்சுவை காட்சிகள் என்ற வட்டத்தை தாண்டி செல்லாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போல சக்தி சௌந்தர்ராஜன்.

சீன நாட்டு விண்வெளி கப்பலில் நுழைந்து ஜெயம் ரவி சண்டையிடும் காட்சிகள், நம் பொறுமையை சோதிக்கின்றன. சீனர்களை கோமாளிகளாக சித்தரிக்கிறாயா என்று நம் கம்யூனிஸ்ட் தோழர்கள் கிளம்பாமல் இருப்பதே ஆச்சரியம் தான்.

கமல் நடிப்பில், விக்ரம் என்றொரு திரைப்படம் 1986-ல் வெளியானது. அதுவும் இதே போல அணுசக்தி ஏவுகணையை பற்றிய திரைப்படம் தான். அதிலும் மசாலா காட்சிகள் இருக்கும். ஆனால் 32 ஆண்டுகளுக்கு முன்பே அதை படமாக்கிய விதமும், சுவாரஸ்யமான கதையும் இன்று நினைத்தாலும் பிரமிக்க வைக்கிறது. எழுதியவர் சுஜாதா என்றால் சுவாரஸ்யத்துக்கு என்ன குறை இருக்க முடியும்?

வானத்தில் ஒரு மௌனத்தாரகை, திசை கண்டேன் வான் கண்டேன் போன்ற சில கதைகளை படித்திருந்தால் கூட விண்வெளி பற்றிய ஒரு திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்றொரு தெளிவு ஏற்பட்டிருக்கும். வானத்தில் ஒரு மௌனத்தாரகை ஒரு சிறுகதை. இந்த படத்தில் ஜெயப்ரகாஷ் கூறும் oxygen பற்றாக்குறை மற்றும் விண்வெளி சீருடை பற்றிய தொழில்நுட்ப நுணுக்கங்களை அன்றே, இந்த சிறு கதையில் சுஜாதா விவரித்திருப்பார். திசை கண்டேன் வான் கண்டேன் ஒரு குறுநாவல். இந்த நாவலின் கதைக்கும் டிக் டிக் டிக் படத்தின் கதைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஒரு வரியில் கூற வேண்டுமானால், பூமியை அழிக்க நோரா என்றொரு கிரகத்திலிருந்து ஒரு பிரஜை தமிழகத்திற்கு வருகிறான். அவன் பூமியை அழித்தானா இல்லையா? எப்படி அவனை சமாளித்தார்கள்? இவ்வளவு தான் திசை கண்டேன் வான் கண்டேன். வேற்று கிரகவாசிகள், ஒரு காதல் ஜோடி, நகைச்சுவையாக சில கதாபாத்திரங்கள் என சுஜாதா தனக்கே உரிய பாணியில் ஒரு கலக்கு கலக்கி இருப்பார். இந்த கதைகளை படிக்கும் போது விண்வெளிக்கே சென்று வந்த ஒரு உணர்வு ஏற்படும்.

இப்படி ஒரு கதையை வைத்து கொண்டு பொன்னான வாய்ப்பை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் வீணடித்து விட்டார் என்பதே உண்மை.

ஆனால் டிக் டிக் டிக்கில் சுவாரஸ்யமான தருணங்கள் இல்லாமல் இல்லை. இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியின் போது, மூன்றாவது நடுவரின் தீர்ப்பை மாற்றும் காட்சி ரசிக்கும் படியான நல்ல நகைச்சுவை. அதே போல நிலவில் காலடி எடுத்து வைக்கும் காட்சி மற்றும் விண்வெளியில் நடக்கும் மற்ற சில காட்சிகளும் அருமையாக படமாக்கியிருக்கிறார்கள். கலை இயக்குனர் மூர்த்தியின் உழைப்பு திரையில் நன்றாகவே தெரிகிறது. பாராட்டப்பட வேண்டிய ஒரு சில விஷயங்களில் இதுவும் ஒன்று.

இமானின் இசையில், டிக் டிக் டிக் என்ற பாடல் தவிர மற்ற பாடல்கள் சுமார் ரகம் தான். ஒரு சில காட்சிகளுக்கு தன் பின்னணி இசையால் கை கொடுத்திருக்கிறார்.

ஜெயம் ரவி ஒரு சில காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். அவரது மகன் ஆரவ் ரவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார். 4 காட்சிகளில் தான் தோன்றுகிறார். ரசிக்கும் படியாகவே இருக்கிறது அவரின் நடிப்பு. ஜெயப்ரகாஷ், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் ஆகியோரின் நடிப்பில் குறை காண இடமில்லை. இயக்குனரின் start camera action என்ற தாளத்திற்கு ஏற்ப ஆடி இருக்கிறார்கள்.

கலை இயக்குனர் ரசிகர்களை புரிந்து கொண்ட அளவிற்கு படத்தின் இயக்குனர் புரிந்து கொள்ளாமல் போனது ஏனோ புரியவில்லை. வசனங்களிலும் சொதப்பி இருக்கிறார். ‘நான் கேப்டன் பா சொல்லிட்டு செய்யுங்க’ என்று வின்சென்ட் அசோகன் கேட்க, ‘சும்மா ஏன் சார் டெபாசிட் போன கேப்டன் மாதிரி பேசிக்கிட்டிருக்கீங்க’ என்று வசனம் பேசி வெறுப்பேற்றுகிறார் அர்ஜுனன். ஆம், படம் பார்க்கும் நம்மைத் தான் வெறுப்பேற்றுகிறார். ரசிக்கும் படியான வசனம் படத்தில் ஒன்று கூட இல்லை.

பொதுவாகவே வித்தியாசமான திரைப்படம் என்றால் நல்ல படம் என்று ஒரு தரப்பினர் நம்மை நம்ப வைக்க முயல்வார்கள். வித்தியாசமான படம் என்பதாலேயே ஒரு மோசமான படம் நல்ல படமாக முடியாது.

டிக் டிக் டிக் வித்தியாசமான படமும் இல்லை அவ்வளவு மோசமான படமும் இல்லை. ரசிக்கும் படியான நல்ல படமும் இல்லை. படத்தை எப்படி எடுக்க வேண்டும் – பொழுது போக்கு படமாகவா அல்லது அறிவியல் புனைக்கதை படமாகவா என்ற தெளிவு இயக்குனருக்கு இல்லாமல் போனதே டிக் டிக் டிக் எடுபடாமல் போனதற்கு காரணம். இறுதியில் ஜெயம் ரவி, ‘அவன் என் புள்ளடா’ என்று ஆக்ரோஷமான வசனம் பேசும் காட்சி, தமிழ் சினிமா என்று தான் திருந்துமோ என்றே ஏங்க வைக்கிறது.

Share