சிறப்பு கட்டுரைகள்

சென்னை – சேலம் பசுமை சாலையை பயன்படுத்துவது 68 லட்சம் புதிய மரங்கள் நடுவதற்கு சமம், போக்குவரத்து செலவு குறையும்: ஒரு ஆய்வு

சென்னை – சேலம் இடையே அமையவுள்ள எட்டு வழி சாலைக்கு கண் மூடி தனமாக பல எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. நம் பாரத தேசம் வளர்ச்சி பெறுவதை சகித்துக்கொள்ள முடியாத பலர், மக்களிடையே பொய்யான கருத்துக்களை திணித்து, மக்களை திசை திருப்பி வருகின்றனர். காட்டுப்பகுதி வழியாக சாலை அமையவுள்ளதால் மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்ற பறப்புரைகளும் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலையும், மக்கள் பயன்படுத்தும் வாகனங்களின் புகை வெளியீட்டினால் மாசு படும் சுற்று சூழலையும் கணக்கிட்டு பார்த்தால், இந்த சென்னை – சேலம் எட்டு வழி பசுமை சாலை, 68 லட்சம்  மரங்கள் நடுவதற்கு சமம் என்ற அதிர்ச்சி தகவல் புலப்படுகிறது.

தற்போதுள்ள நிலவரம்

ஒரு நெடுஞ்சாலையின் போக்குவரத்து நெரிசலை கணக்கிடுவதற்கு, Passenger Car Unit (PCU) என்ற அளவுகோலை பயன் படுத்துகின்றனர். உதாரணமாக, சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் 60,000 PCU போக்குவரத்து நெரிசலை காண முடிகிறது. அதாவது அதன் கொள்ளளவை விட 20,000 முறை அதிகமானது. சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 40,000 PCU போக்குவரத்து இருக்க வேண்டிய இடத்தில், 80,000 – 90,000 வரை PCU போக்குவரத்து நெரிசலை காண முடிகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் போக்குவரத்து இப்போதிருப்பதை காட்டிலும் 2.1 முறை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு மூன்று நெடுஞ்சாலைகள் பயன் படுத்தப்படுகின்றன. சென்னை – உளுந்தூர்பேட்டை – சேலம் நெடுஞ்சாலையில், 8,000 முதல் 10,000 PCU வரை போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சேலம் – ஹரூர் – வேலூர் நெடுஞ்சாலையில்,4,000 முதல் 5,000 PCU வரை போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சேலம் – கிருஷ்ணகிரி – சென்னை நெடுஞ்சாலையில் 4,000 PCU வரை போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் நாடெங்கும் அதிகரித்து கொண்டு வருகிறதே தவிர குறைவதில்லை என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

68 லட்சம் மரங்கள் நடுவதற்கு சமம்

சென்னை – சேலம் இடையே அமையவுள்ள பசுமை வழி சாலை, 68 கிலோ மீட்டர் தொலைவை குறைக்கபோகிறது என குறிப்புகள் கூறுகின்றன. அது மட்டும் அல்லாமல், பயண நேரத்தை ஆறரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரம் பத்து நிமிடங்களாக குறைக்கும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை துறையின் (NHAI) கணக்கீட்டு மூலம், சென்னை- சேலம் இடையே அமையவுள்ள பசுமை வழி சாலையின் முதல் டோல் கேட்டிற்கு 41,959 வாகனங்கள் வரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த 41,959 வாகனங்களில் கன ரக வாகனங்கள், பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை அடக்கம்.

இந்த 41,959 வாகனங்களில், 20,000 கன ரக வாகனங்கள் செல்வதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், இதை பாதியாக குறைத்து, 10,000 கன ரக வாகனங்கள் செல்லும் என்று அனுமானித்து கொள்வோம். 10,000 கன ரக வாகனங்கள் இந்த சாலையை பயன் படுத்துவதன் மூலம், நாள் ஒன்றிற்கு 6,80,000 கிலோ மீட்டர்கள் குறைக்கப்படுகிறது. இன்றைய நிலையில், இந்தியாவில், கன ரக வாகனம் ஒன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கு, ஒரு லிட்டர் (தோராயமாக) எரிபொருள் தேவை படுகிறது. ஆக, 1,70,000 லிட்டர் எரிபொருள் பயன்பாடு குறைக்கப்படுகிறது.

இந்தியாவில் அதிகமாக பயன் படுத்தப்படும் கார்-களின் மைலேஜ், 20 KMPL முதல் 30 KMPL வரை இருக்கிறது. 13 KMPL மைலேஜ் தர கூடிய முன்னணி கார்களும் நெடுஞ்சாலைகளில் செல்கின்றன. தமிழக அரசு பேருந்துகளின் மைலேஜ் 5.4 KMPL ஆக இருக்கின்றன (2012 ஆண்டின் கணக்கீட்டு படி). ஆனால், நம் அனுமானத்திற்கு முன்னணி கார்களையும், அரசு பேருந்துகளையும்   கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், அதிகமாக பயன் படுத்தப்படும் கார்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால்  சராசரியாக ஒரு வாகனம், 25 கிலோ மீட்டர் செல்ல ஒரு லிட்டர் எரிபொருள் தேவை படுகிறது. 20,000 இதர வாகனங்கள் இந்த பசுமை வழி சாலையை பயன் படுத்த வாய்ப்புள்ளது. இதில் பாதியான, 10,000 கார்கள் இந்த சாலையை பயன் படுத்துகிறது என்று எடுத்துக்கொள்வோம். 68 KM செல்வதற்கு, 24,000 லிட்டர் எரிபொருள் தேவைப் படுகிறது.

கன ரக வாகனங்கள் மூலம் 1,70,000 லிட்டர் எரிபொருளும், மற்ற வாகனங்கள் மூலம் 24,000 லிட்டர் எரிபொருளும் ஒரு நாளில் சேமிக்கப்படுகிறது. ஆக மொத்தம் 1,94,000 லிட்டர் எரிபொருள் ஒரு நாளில் சேமிக்கப்படுகிறது. இதனால், ₹1,37,74,000 முதல் ₹1,51,32,000 ரூபாய் வரை சேமிக்க முடியும். எரிபொருளின் தேவை உலகம் முழுவதும் அதிகமாக இருக்கும் இன்றைய நிலையில், எரிபொருள் சேமிப்பது ஒவ்வொரு வளரும் நாட்டிற்கும் கட்டாயமாக இருக்கிறது.

வாகனங்களுக்கு பயன்படுத்தப் படும் எரிபொருள் வெளியிடும், CO2 எனப்படும் கரியமில வாயு, சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது. இதனால் உலக வெப்பமயமாவதும் அதிகரிக்கும். இதனால் ஏற்படும் காற்று மாசு, மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இருமல், தொண்டை அடைப்பு, மூச்சு பிரச்சனை துவங்கி உயிருக்கு ஆபத்து வரக்கூடிய அளவுக்கு கொடியதாக கருதப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் பயன் படுத்துவதால், 2.31 KG CO2 வெளியிடப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் பயன் படுத்துவதால், 2.68 KG CO2 வெளியிடப்படுகிறது. ஆக, 1,70,000 லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படுவதால், தோராயமாக நாள் ஒன்றிற்கு 4,08,000 KG CO2 வெளியிடப்படுவது தடுக்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு 14,89,20,000 KG CO2 வெளியிடப்படுவது தடுக்கப்படுகிறது.

ஒரு முதிர்ச்சி அடைந்த மரம், ஒரு வருடத்திற்கு, தோராயமாக 21.7 KG CO2 வாயுவை உட்கொள்ளும். 14,89,20,000 KG CO2 வாயுவை உட்கொள்ள தோராயமாக 68,62,672 மரங்கள் தேவைப்படுகிறது. இதனை வைத்து பார்க்கும் போது, தற்போது உள்ள சாலையை தவிர்த்து புதிதாக வரப்படுவுள்ள சாலையை பயன் படுத்தும் தருணத்தில், தோராயமாக 68 லட்சம் மரங்களை காப்பதற்கு இந்த சாலை உதவி புரியும் என்பதே நிதர்சனமான உண்மை. எனினும், இந்த சாலையை நிறுவுவதற்கு 10,000-திற்கும் குறைவான மரங்கள் வெட்டப்படும் என்று கூறப்படுகிறது. இதனை ஈடு செய்வதற்கு 3,00,000 புதிய மரங்கள் நடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. எரிபொருள் பயன் பாட்டை முற்றிலும் நிறுத்துவதே ஒரு நாட்டின் நோக்கமாக இருக்கும் பட்சத்தில், அது சாதியப்படாத போது, இது போன்ற மாற்று வழிகளை ஒரு அரசாங்கம் கையில் எடுத்தே ஆக வேண்டும்.

இங்கு அனுமானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே, இங்கு குறிப்பிட்ட அளவை விட, உண்மை நிலவரம் அதிகமாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

காற்று மாசின் அபாயங்கள்

காற்று மாசுபடுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் சில நாடுகளின் வளர்ச்சியை நேரடியாக பாதித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு சீனாவில் காற்று மாசுபடுவது மூலம் ஏற்பட்ட 12 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள், 9.7 – 13.2 % சீனா நாட்டின் GDP-யை பாதித்துள்ளது. அமெரிக்காவில் காற்று மாசுபடுவதினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், 3.2 – 4.6% GDP யை பாதித்ததாக கணிக்கடப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள், 4.6 -7.1% GDP யை பாதித்தாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம்  எடுக்கப்பட்ட கணக்கின் படி, காற்று மாசுபடுவதில், உலகின் முக்கிய நகரங்களில் 4 வது இடத்தை பிடித்துள்ளது மும்பை மாநகரம். டெல்லி, கான்பூர் போன்ற நகரங்கள், உலகின் 15 மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள், போக்குவரத்து நெரிசலும், வாகனங்கள் உபயோக படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் போல், காற்று மாசுபடுவதை தடுக்கவும்,மற்ற நாடுகள் போன்று உயிரிழப்புகளை தடுக்கவும், இது போன்ற பசுமை வழி சாலைகள் மிக மிக முக்கியமாக கருதப்படுகிறது. இதை முன் கூட்டியே நிறைவேற்றினால் தமிழகத்திற்கு மேலும் நல்லது.

பயண செலவு குறைவு

கார்கள் செல்வதற்கான பயண செலவும், பயண நேரமும் வெகு அளவில் குறைகின்றன. தற்போதுள்ள சென்னை – கிருஷ்ணகிரி – சேலம் சாலையின் வழியில் சென்றால், கார் ஒன்றிற்கு ₹2913.92 செலவாகிறது. சென்னை – உளுந்தூர்பேட்டை – சேலம் சாலையில் செல்வதற்கு கார் ஒன்றிற்கு ₹2623.07 செலவாகிறது. ஆனால், புதிதாக கட்டப்பட உள்ள சாலையில், ₹2237.36 செலவாகும் என கணக்கிடப் பட்டுள்ளது. 68 கிலோ மீட்டர் குறைவதால், புதிய சாலை வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டால், கட்டணம் குறையவும் வாய்ப்புள்ளது. அதை, தமிழக அரசு நிறைவேற்றுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மற்ற நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைவு

அனைத்திற்கும் மேலாக, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலையும், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலையும் பெரும் அளவில் குறைத்து, காற்று மாசு படுவது ஒரு இடத்தில் தங்காமல் இருக்கவும் உதவும்.

குறிப்பு : புதிதாக அமையவுள்ள சாலை, 68 KM தூரத்தை குறைக்கும் என்ற செய்தியின் அடிப்படியில் இயற்றப்பட்டது இந்த ஆய்வு

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close