என்னதான் திரைப்படத்தில் மூச்சுக்கு முந்நூறு தடவை மக்கள் மக்கள் என்று வீர வசனம் பேசினாலும், தான் ஒரு கைதேர்ந்த நடிகன் மட்டும் தான் என்பதை விஜய் மீண்டும் நிரூபித்து இருக்கிறார். ‘கத்தி’ படத்தில் மக்கள் படும் துயரம் குறித்து கத்தி கத்தி பேசிவிட்டு இப்போது புத்தி கெட்டது போல மீண்டும் சொன்ன வாக்கை இரண்டாவது முறையாக மீறியுள்ளார். வெற்றிடம் உருவான இடத்தில், நாலா புறமும் இருந்து காற்று வந்து அடித்து சுழல் ஏற்படுவதை போல, தமிழகத்தில் ஒரு கம்பீர பிம்பம் மறைந்ததில் இருந்து, பல மாய பிம்பங்களின் அலப்பறைகள் அதிகமாகிவிட்டது.

தமிழகத்தின் முன்னணி நடிகர்களான கமல், சூர்யா, விக்ரம் உள்ளிட்டவர்கள் சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என வாக்குறுதி அளித்து அதனை உறுதியாக பின்பற்றியும் வருகிறார்கள். புகைப்பிடிக்கும் ஸ்டைலில் பெயர் போன நடிகர் ரஜினியும் பாபா திரைப்படத்திற்கு பிறகு புகைப்பிடிக்க மாட்டேன் என்று உறுதி எடுத்து விட்டார். இதனை தொடர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு பசுமை தாயகம் என்ற அமைப்பு ‘தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாடு’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்திய பொழுது இனிமேல் நான் சிகரெட்டே பிடிக்க மாட்டேன் என்று அடித்து சத்தியம் செய்வதை போல சொன்னார் நடிகர் விஜய்.

ஆனால் 2012-ஆம் ஆண்டு வெளியான ‘துப்பாக்கி’ படத்தின் போஸ்டரில் சுருட்டு பிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்று இருந்தது. அப்போது காரணம் கேட்டதிற்கு  ஏதோ சாக்கு போக்கு சொல்லி ‘இனி  அடுத்து வரும் படங்களில் உறுதியாக புகைபிடிக்க மாட்டேன்’ என்று கூறினார். சமூக ஆர்வலர்களும் உண்மை என்று நம்பி, திரைப்படங்களில் புகை பிடிப்பதை நிறுத்தி விட்ட திரை பிரபலங்களின் வரிசையில் நடிகர் விஜய்-யையும் சேர்த்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘சர்கார்’ படத்தின் முதல் புகைப்படம் வெளியானது. அதில் மீண்டும் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. 2007-ல் ஒரு வாக்குறுதியும், மீண்டும் 2012-ல் ஒரு வாக்குறுதியும் கொடுத்து விட்டு, சீரான கால இடைவெளியில் இப்படி சொன்ன வாக்கை மீறி இருப்பது, சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயின் இந்த செயலை அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடி இருப்பதில் நிச்சயம் நியாயம் இருக்கிறது.

திரையின் தாக்கம் தான் இன்றைய இளைஞர்களிடத்தில் பிரதிபலிக்கிறது. படத்தில் காட்டப்படும் இது போன்ற காட்சிகளை பார்த்து விட்டு இந்த சமுதாயம் இதுதான் கெத்து என்று சீரழிந்து கொண்டிருக்கிறது.

Share