மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் இரண்டு நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழக அரசியல் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் நீதி மையத்தை ஆரம்பித்த பிறகு கமல் அவர்கள் பல மாவட்டங்களில் சுற்று பயணம் மேற்கொண்டார். விசில்(Whistle) என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த செயலி மக்களிடத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவரின் சுற்றுப்பயணமும் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து அடுத்த கட்ட காய்களை நகர்த்த தொடங்கியுள்ளார்.

காங்கிரஸுடன் இணக்கமாக கமல் செல்கிறார். கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்பு விழாவில் கமல் பங்கேற்றாலும், ஓட்டலுக்கு வந்து ராகுல் மற்றும் சோனியாவை மட்டுமே சந்தித்தார். இதற்காக தூத்துக்குடியிலிருந்து அவசரமாக கிளம்பி பெங்களூரு சென்றார். நேற்று முன்தினம், தன் கட்சிக்கான அங்கீகாரத்தை பெறுவதற்காக, கமல், டில்லி வந்திருந்தார். பொதுவாக இதுபோன்ற வேலைகளை மேற்கொள்ள, சில வழக்கறிஞர்களே போதும். ஆனாலும், கமலே, நேரில் வந்தார். கட்சியின் துவக்க விழாவுக்கு வந்திருந்த, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திப்பார் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்தார். இரவு டில்லியிலேயே தங்கி, சோனியாவையும், கமல் சந்தித்தார். இந்த சந்திப்புகளின் பின்னணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இருக்கிறார் என்றே தெரிகிறது.

தி.மு.க வுடன் கூட்டணி சேர தமிழக காங்கிரஸுக்கு உடன்பாடில்லை. அதனால், தமிழகத்தின் சில முக்கிய கட்சிகளின் தலைவர்களை தில்லி தலைமையுடன் சந்திக்க வைக்கிறது தமிழக காங்கிரஸ். இதற்காக நான்கு நாட்களாக தில்லியில் முகாமிட்டுள்ளார் திருநாவுக்கரசர். சமீபத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், டில்லி வந்திருந்தார். காங்ரஸ் மேலிடப்பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகிய இருவரும், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், திருமாவளவனிடம் நீண்ட நேரம் பேச்சு நடத்தினர். திருச்சியில் நடத்தவுள்ள, ‘தேசத்தை காப்போம்’ என்ற தலைப்பிலான மாநாட்டிற்கு ராகுலை அழைக்க வந்திருப்பதாக கூறப்பட்டாலும், திருமாவளவனை, ராகுலுக்கு, நேரில் பிறந்த நாள் வாழ்த்து கூற வைக்க வேண்டுமென்பதே, திட்டமாக இருந்தது.

இப்படி தி.மு.க அல்லாத கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. தினகரனுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரும் ராகுலை கூடிய விரைவில் சந்திக்க கூடும். தி.மு.க வுடன் நட்பில் உள்ள அனைத்து கட்சிகளையும் இழுக்க காங்கிரஸ் முயல்கிறது. இதை உறுதிப்படுத்துவதாக காங்கிரஸின் செயல்பாடு இருக்கிறது. தி.மு.க வின் போராட்டங்களில் காங்கிரஸ் பங்கேற்பதில்லை. காங்கிரஸ், கமல், தினகரன், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் ஒரு அணியில் கூடலாம் என்று கூறப்படுகிறது. பாராளமன்ற தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி காய்கள் எப்படி நகர்கின்றன என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Pradeep is a Techie, Entrepreneur and a Social Worker. He is the Co-Founder of Sixth Sense Foundation(@SixthSenseF).

Share