தமிழ் நாடு

#KathirExclusive பெரம்பலூர் டூ திருச்சி டூ சேலம் டூ மதுரை – தமிழ்நாடு எய்ம்ஸ் கடந்து வந்த சுவாரஸ்ய பாதை

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பீகார், உத்திர பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேச மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து சிகிச்சை பெறுவதை கண்ட முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தனது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வாரஜ் அவர்களை அழைத்து எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளை மற்ற மாநிலங்களிலும் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த சமயத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தவர் தி.மு.க-வை சேர்ந்த “ஸ்பெக்ட்ரம்” புகழ் அ.ராசா. சுஷ்மா ஸ்வராஜ் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் மாதிரி கொள்கையை அறிவிக்கும் முன்பு தனது இணை அமைச்சரான அ.ராசா அவர்களை அழைத்து தமிழகத்திற்கு எய்ம்ஸ் தேவையா? எந்த மாவட்டத்தில் அமைக்கலாம்? என்று கேட்ட போது, தான் பாராளமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தை அந்த நிமிடத்திலேயே பரிந்துரை செய்தார். இதை சுஷ்மா ஸ்வராஜ் அவர்களும் ஏற்றுக் கொண்டார். ஆனால், பிறகு அதிகாரிகள் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் ஆரம்ப காலங்களில் ஏதேனும் மருத்துவ கல்லூரியுடன் இணைக்கப்பட்டு தான் ஆரம்பிக்க வேண்டும் எனவும், பிறகு தான் எய்ம்ஸ்-க்கென தனியாக மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் எனவும், பெரம்பலூரில் அது போன்ற மருத்துவ கல்லூரி ஏதும் இல்லாத காரணத்தால் எய்ம்ஸ் மருத்துவமனையை அங்கு நிறுவ முடியாது என்று கூறி விட்டனர்.

பிறகு, திருச்சியை பரிந்துரைத்தார் அ.ராசா. கே.ஏ.பி விஷ்வநாதன் மருத்துவ கல்லூரியுடன் இணைத்து எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவலாம் என்று அ.ராசா மற்றும் அதிகாரிகள் முடிவு எடுத்தனர். திருச்சியில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்றும் அறிவித்தனர்.  கே.ஏ.பி விஷ்வநாதன் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து முதல்கட்ட வேலைகள் துவக்கப்பட்டு துரிதமாக சென்றுக் கொண்டு இருந்தது. இந்த நிலையில் தி.மு.க மத்திய பா.ஜ.க அரசில் இருந்து விலகி, பிறகு தேர்தல் நடந்து பா.ஜ.க தலைமையிலான மத்திய ஆட்சியும் கவிழ்ந்தது. 

2004-ஆம் ஆண்டு பா.ம.க-வின் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இவர், திருச்சி எய்ம்ஸ் திட்டத்தை கிடப்பில் போட்டு, சேலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவ கடுமையான முயற்சிகள் எடுத்தார். அது நடைபெறுவதற்கு முன்பே 2009 தேர்தலில் கூட்டணி மாற்றத்தால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார் அன்புமணி ராமதாஸ்.

பிறகு 2009 தேர்தலில் வென்று மத்திய அமைச்சரான தி.மு.க-வின் மு.க.அழகிரி, எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று காய்களை நகர்த்தினார். பல முறை இது தொடர்பாக அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சந்தித்து வந்தார். ஆனால், எதுவும் கை கூடுவதற்கு முன்பே 2013-ல் மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க விலகியது, அழகிரியும் மத்திய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். 

ஆக, பெரம்பலூர், திருச்சி, சேலம், ஈரோடு என்ற பரமபத விளையாட்டில் சிக்கிய தமிழக எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தற்போது மோடி அரசில் மதுரைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தனது கட்சிக்கு எந்த எந்த அமைச்சர் பதவி வேண்டும் என தர்ணா செய்து பெறத் தெரிந்த தி.மு.க-விற்கு தான் காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சி பொறுப்பில் இருந்த 9 ஆண்டுகளில்(2004-2013) தமிழகத்தில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை கூட தேர்வு செய்து அமல்படுத்தப்பட முடியவில்லை என்பது தி.மு.க-வுக்கு தமிழகத்தின் மீது இருக்கும் அக்கறையை தோலுரித்து காட்டுகிறது. இந்த லட்சணத்தில் 2006 முதல் 2011 வரை தமிழ்கத்திலும் மத்தியிலும் ஆட்சி பொறுப்பில் இருந்தது தி.மு.க தான்.

ஆக, பலர் கனவு கண்டும் நிறைவேற்ற முடியாத தமிழக எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி தான் தமிழகத்திற்காக தற்போது நிறைவேற்றி இருக்கிறார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close