தமிழ் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் காவிரி பிரச்சனையை அணுகும் விதத்தில் பல வருடங்களாக இரட்டை வேடம் போட்டு வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த போராட்டங்களை பொது மக்கள் நடத்தவில்லை, அரசியல்வாதிகள் மற்றும் பிரிவினைவாத குழுக்கள் நடத்தினர். இந்த போராட்டங்களால் பல இடங்களில் பொது வாழ்வு பாதிக்கப்பட்டது. பல மாவட்டங்களில் தி.மு.க போன்ற கட்சிகள் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். தமிழ் ஊடகங்களும் இந்த போராட்டங்களுக்கு தேவையில்லாத முக்கியத்துவம் கொடுத்து பிரச்னையை பெரிதுபடுத்தி மக்களுக்கு எடுத்து சென்றது.

நாம் தமிழர் போன்ற கட்சிகள் சில திரைப்பட இயக்குனர்களின் துணையை கொண்டு சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐ.பி.எல் போட்டியை காவிரி பிரச்னையை காரணம் காட்டி எதிர்த்தார்கள். சில ரசிகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தாக்கினார்கள். மைதானத்தின் உள்ளே செருப்பை வீசினார்கள். மத்திய அரசை மட்டுமே அனைத்து பிரச்சைகளுக்கும் குறிவைத்து தாக்கி வந்தனர். அந்த சமையத்தில் காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் கர்நாடக அரசு தமிழகத்துக்கு எதிர்மாறான கருத்தை தெரிவித்துக் கொண்டிருந்தது. ஆனாலும், அன்றைய கர்நாடக காங்கிரஸ் அரசை இங்கு உள்ள அரசியல்வாதிகளோ ஊடகங்களோ பெயருக்கு கூட தாக்கவும் இல்லை, சீண்டவும் இல்லை.

பிறகு, காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை அமைத்தது மத்திய அரசு. இதை பற்றி எந்த ஒரு அரசியல்வாதியும் பேசவில்லை. ஊடகங்களோ இதை மேலோட்டமாக தான் தான் மக்களுக்கு எடுத்து சொன்னார்கள். இந்த வாரியத்திற்கு கர்நாடக மற்றும் கேரளா மாநிலங்கள் கூறிய பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கவில்லை, ஆனால் தமிழகம் கூறிய பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றது. தமிழ்நாட்டை மோடி அரசு ஆதரிக்கிறது என்று சொல்வதற்கு, மத்திய அரசு பரிந்துரைகளை ஏற்ற விதமே போதுமானது.  இந்த வாரியம் தமிழகத்துக்கு சாதகமாக அமைந்தும் போராட்டங்களில் ஈடுபட்ட எந்த ஒரு அரசியல்வாதியும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கவில்லை, ஏன் இதை பற்றி பேசவே இல்லை.

ஆனால், கர்நாடகாவிலோ குமாரசாமி ஆட்சி அமைத்ததற்கு தமிழக அரசியல்வாதிகள்  தங்களது வெற்றி போல் கொண்டாடினார்கள். குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கடந்த தேர்தல் அறிக்கையில் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக இருந்ததும் தமிழக அரசியல்வாதிகள் பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக குமாரசாமியை ஆதரித்தது, அவர்களது போலித்தனத்தை, இரட்டை வேடத்தை தோலுறித்து காட்டியது.

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் காவிரி பிரச்னைக்கு தீர்வு கொண்டு வருகிறேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்தார். சட்டரீதியாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ள பொழுது, தமிழக அரசிற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லாத கமல்ஹாசன் குமாரசாமியை சந்திப்பது ஒரு அரசியல் நாடகமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

காவிரி நீர் மேலாண்மை வாரியத்திற்கு ஒவ்வொரு மாநிலமும் தங்களது உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். இதில் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உறுப்பினர்களை நியமித்தது. ஆனால், கர்நாடகாவோ கடைசி தேதி 12-ஆம் ஜூன் முடிந்த பின்னும் தங்களது உறுப்பினர்களை நியமிக்கவில்லை. இதை எந்த ஒரு தமிழக அரசியல்வாதிகளோ, ஊடகங்களோ, சமூக ஆர்வலர்களோ, போராட்டகாரர்களோ, சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போராட்டத்தை முழு நேர தொழிலாக கையில் எடுத்திருக்கும் போலி போராளிகளோ ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? கமல்ஹாசன் குமாரசாமி காவிரி பிரச்சனையில் தீர்வை நோக்கி செல்கிறார் என்று கூறினாரே, ஆனால் கர்நாடக அரசால் உறுப்பினர்களை கூட நியமிக்க இயலவில்லை, இதை பற்றி ஏன் கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் கேள்வி கேட்கவில்லை? மழையால் அணை நிரம்பியதால் கர்நாடக அரசு கபினி அணையை திறந்து விட்டது. ஆனால், கமல்ஹாசனோ குமாரசாமியின் நல்ல மனது தான் இதற்கு காரணம் என்று வழிகிறார். ஆனால், குமாரசாமி ஏன் இன்னும் உறுப்பினர்களை நியமிக்கவில்லை என்ற கேள்வியை கேட்காமல் இருக்கிறார். தமிழக சட்டசபையில் கூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினிடம் அவரது கூட்டாளி கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் ஸ்டாலின் காவிரி வாரியத்திற்கு உறுப்பினர்களை நியமிக்க  ஏன் கூறவில்லை என்று கேள்வி கேட்டார்.

சில மாதங்களுக்கு முன் சிறிய பிரச்சனைகளை பெரிதாக்கி மக்களுக்கு எடுத்து சென்ற அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் மற்ற சமயங்களில் அமைதியாக இருப்பது அவர்களது இரட்டை வேடங்களை காட்டுகிறது. இவர்களது போலி முகங்களையும், சந்தர்ப்பவாத போராட்டங்களும் மக்களுக்கு தெரியாமல் இல்லை என்பதே நிதர்சனம்.

Photo Credits – The Indian Express.

Share