நடிகர் ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் என்று அன்போடு கொண்டாடப்படுபவர். இவரை வைத்து படம் எடுத்தால் புகழின் உச்சிக்கே சென்று விடலாம், பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து விடலாம் என்று இவர் தேதிகளுக்காக ஏராளமான இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் காத்திருக்கிறார்கள். ஆனால் இவரோ ரஞ்சித் தான் தன்னை இயக்க சரியான நபர் என்ற முடிவில் இருக்கிறார் போல.

காலா, ஒரு வரியில் சொன்னால், தாராவியில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் கதை. அவர்கள் நிலத்தை பறிக்க துடிக்கும் ஒரு அரசியல்வாதி, அந்த அரசியல்வாதியிடமிருந்து மக்களை காப்பாற்றும் தாதா தான் நமது ‘நாயகன்’ காலா. ஆமாம், தமிழர்களை காப்பாற்றிய வேலு நாயக்கரே மீண்டும் காலாவாக தோன்றி இருக்கார். இந்த முறை தமிழர்கள் என்ற பொது அடையாளம் இல்லை, மாறாக சாதிய குறியீடுகள் அதிகம் இடம் பெறுகின்றன. காலாவின் தந்தையாக காட்டப்படும் வேங்கையன், ஈ.வெ.ரா(பெரியார் என்று அவர் ஆதரவாளர்களால் அழைக்கப்படுபவர்) போலவே தோற்றமளிக்கிறார். ஈ.வெ.ராவின் பகுத்தறிவு கோஷங்கள், தமிழர் என்ற பொது அடையாளத்தை சாதிய பிரிவுகளாக மாற்றி விட்டது என்பது தான் இதற்கு காரணமோ என்னவோ.

Advertisement

வயதான தாதாவாக ரஜினி அழகாக தெரிகிறார். ஆனால், துணை நடிகர்கள் பட்டாளமும் அவர்களது நடிப்பும் நம் பொறுமையை சோதிக்கும் வகையில் தான் அமைந்திருக்கிறது. யதார்த்தமான நடிப்பு என்ற பெயரில் ஈஸ்வரி ராவ் போடும் கூச்சலும், நகைச்சுவை என்று சமுத்திரக்கனியின் நடிப்பையும் பார்க்கும் போது, ரஞ்சித்துக்கு படம் பார்க்க வரும் ரசிகர்கள் மீது அப்படி என்ன கோபம் என்ற கேள்வி எழுகிறது.  இது போதாதென்று ஹிப் ஹாப் பாடும் குழுவினர் தம் பங்குக்கு நம்மை சோதிக்கிறார்கள். ஒரு காட்சியில், ஒரு இளைஞனை கொலை செய்து தூக்கிலிட்டிருப்பார்கள். ரஜினி கோபமாக பார்த்துக் கொண்டிருக்க, இந்த ஹிப் ஹாப் குழுவினர் ‘இப்போ என்ன செய்ய சொல்லு காலா இப்போ என்ன செய்ய’ என்று ராகமாக கூச்சலிடுவது எரிச்சலைத் தான் ஏற்படுத்தியது.

பார்த்து பழக்கப்பட்ட கதை தான் என்றாலும், விறுவிறுப்பான திரைக்கதை இருந்தால் ரசிக்கலாம். திரைக்கதையிலும் ரஞ்சித் கோட்டை விட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ‘வேங்கை மவன் ஒத்தையிலே நிக்கேன், தில்லிருந்தா மொத்தமா வாங்கல்லே’ காட்சி, ரஞ்சித் காட்டும் வட சென்னை பாஷயில் சொன்னால் ‘ரொம்ப சப்பையா போச்சு பா’. ஆமாம், வேங்கை மகன் ஒத்தயில் நிற்கிறார், ஆனால் வேங்கையின் பேரன்கள்(கலாவின் மகன்கள்) மொத்தமாக அவரை சூழ்ந்து நிற்கிறார்கள், எதிரிகளிடமிருந்து காலாவை காப்பாற்றுகிறார்கள்.

நானா படேகர் ஒரு மிகச்சிறந்த நடிகர். ஹிந்தி படங்களை பார்த்திருந்தால் அவர் எப்படிபட்ட திறமைசாலி என்பது புரியும். ஆனால் காலாவை பொறுத்தவரை அவரை வீணடித்திருக்கிறார்கள். அவருக்கு பெரிய முக்கியத்துவம் ஒன்றும் இல்லை. முதல் காட்சியிலிருந்து இறுதி வரை அவர் சிரிக்கும் சுவரொட்டிகளும் பேனர்களும் காண்பிக்கப்படுகின்றன. அழுத்தமான ஒரு காட்சி கூட அவருக்கு கொடுக்கப்படவில்லை. இடைவேளைக்கு முன் காட்சி ரஜினிக்கான மாஸ் காட்சி என்றே சொல்ல வேண்டும். மொத்தமாகவே அந்த ஒரு காட்சி தான் அவருக்கு அப்படி அமைந்திருக்கிறது.

சந்தோஷ் நாராயணின் இசை, எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் அமைந்துள்ளது. இளையராஜாவோ, தேவாவோ, ஏ.ஆர்.ரகுமானோ ஏன் வித்யாசகரோ ரஜினி படங்களுக்கு இசையமைத்த போது ரசிகர்களை பரவசமடைய செய்யும் விதமாகவே இசை அமைத்திருப்பார்கள். சந்தோஷ் நாராயண் இரண்டாவது முறையாக வாய்ப்பை வீணடித்திருக்கிறார்.

ஹுமா குரேஷிக்கு படத்தில் என்ன வேலை? ரஞ்சித் தான் விளக்க வேண்டும். கபாலி படத்தில் ரஜினி ராதிகா ஆப்தேவை தேடி செல்லும் காட்சிகளை அழகாக படமாக்கி இருந்தார் ரஞ்சித். ஆனால் இங்கே ஹுமாவோடு ரஜினி செய்யும் ரொமான்ஸ் சகிக்கவில்லை. ஹுமாவும் புரட்சி செய்ய நினைக்கிறார். தாராவி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நினைக்கிறார். ஆனால் அதற்கு அவர் எடுக்கும் முயற்சிகள், சிறுபிள்ளைத்தனமாகவே தெரிகிறது. நானா படேகரை அவர் சந்திக்கும் காட்சியில், நானா படேகரை ஏதோ கோமாளியைப் போல் சித்தரித்திருப்பது வியப்பை தான் உண்டாக்குகிறது. வில்லன் கதாபாத்திரம் வலுவானதாக இருந்தால் தானே, அதை எதிர்க்கும் கதாநாயகனுக்கு மதிப்பு?

திராவிடர் கழகம் மற்றும் சார்பு இயக்கங்கள் நடத்தும் பொதுக் கூட்டங்களை பார்த்தவர்களுக்கு புரியும், காலாவின் இலக்கு யார் என்று. அந்த பொது கூட்டங்களில் தான் முட்டாள்தனமான கருத்துக்களை பகுத்தறிவு என்ற தலைப்பில் பேசுவார்கள். அவர்களை பொறுத்த வரையில் ராமர் கற்பனை, ஆனால் ராவணன் ஒரு உண்மையான திராவிடன், அந்த ராவணன் வணங்கிய சிவபெருமான் ஆரிய திணிப்பு. காலாவை பொறுத்த வரையில் நானா படேகர் தான் ராமர், ரஜினி ராவணன். ரஜினி வீட்டில் ராவண காவியம் புத்தகத்தை கூட காணலாம். அதாவது ராவணன் என்ற நல்லவனை ராமர் சூழ்ச்சியால் வீழ்த்தி விட்டாராம். இதே தமிழகத்தில் திராவிட இயக்கங்கள், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட போது, ‘ஒரு முறை தான் ராமனை இராவணன் கொன்றான் என்று இருக்கட்டுமே’ என்று நியாயப்படுத்தினார்கள். அதாவது ராமர் ஆரியனாம், இராவணன் திராவிடனாம்.

உண்மையில் இராவணன் தான் பிறப்பால் பிராமணன். திராவிட போராளிகளை பொறுத்த வரை, பிராமணர்கள் ஆரியர்கள், ஆனால் ராவணன் மட்டும் திராவிடன். முரண்பாடுகளின் மொத்த உருவம் தானே திராவிட அரசியல்? கலவிக்கு அழைத்த சூர்ப்பனகையிடமிருந்து விலகியவர் தான் ராமர். சூர்ப்பனகை, லட்சுமணரை அழைத்த போது, கோபம் கொண்ட லட்சுமணர், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து விடுகிறார். சகோதரியின் மூக்கை அறுத்தவனை பழி வாங்கவே, ராமரின் மனைவி சீதா தேவியை கடத்திச் சென்றவன் ராவணன். ராமர் ராவணனுடன் நேருக்கு நேர் போர் புரிகிறார். நிராயுதபாணியாக நிற்கும் ராவணனை கொல்லாமல், இன்று போய் நாளை வா என்று அவகாசமும் அளிக்கிறார். எந்த நிலையிலும் நேர்மை தவறாமல் வாழ்ந்து காட்டியதாலேயே அவரை அவதார புருஷன் என்று உலகம் போற்றுகிறது. ஆனால் வெறும் தவறுகள் மட்டுமே செய்த ராவணனை திராவிட இயக்கங்கள் கொண்டாடுவதில் நமக்கொன்றும் வியப்பில்லை. அவரவர் போல் இருப்பவர்களை தானே அவரவர்கள் கொண்டாடுவார்கள்?

ராவணன் எப்போது புத்த மதத்திற்கு மாறினான் என்பது வால்மீகி மகரிஷியே கூட அறிந்திராத ஒரு ரகசியம். ஏனென்றால் நமக்கு ராவணனாக காட்டப்பட்டிருக்கும் காலா வீட்டில் புத்தர் சிலை இருக்கிறது, அடிக்கடி புத்த விஹாரத்திற்கும் சென்று வருகிறார். இதே புத்த மதத்தைச் சேர்ந்த புத்த பிட்சுக்களை தமிழகத்தில் ஓட ஓட அடித்தார்கள், அதையும் திராவிடம் பேசுபவர்கள் நியாயப்படுத்தினார்கள். ஏனென்றால் அவர்கள் ஈழத் தமிழர்களின் அழிவுக்கு காரணமானவர்களாம். இன்று அதே திராவிட போராளிகளுக்கு அவர்கள் நல்லவர்களாக தெரிகிறார்கள்.

இவ்வளவு சாமார்த்தியமாக திராவிட சித்தாந்தங்களை புகுத்திய ரஞ்சித், தன்னையும் அறியாமல் ஒரு உண்மையை காட்டி விட்டார். தாராவி பகுதியில் மக்களுக்கு சரியான வீடுகள் இல்லை. ஒரு காட்சியில் ஒரு பெண்மணி சொல்லுவார் ‘கைய புடிக்கவே 12 மணி ஆகுது, இதுல முத்தம், சுத்தம்’ என்று. அந்தளவுக்கு தனிமை என்பதே இல்லை என்று பொருள்பட அந்த காட்சி அமைந்திருக்கும். பொது கழிவறை மட்டும் தான் அங்கே உண்டு, வீட்டுக்கு வீடு கழிப்பறை கூட இல்லை.

ஆனால், பல ஆண்டுகளாக இவர்களுக்கு தலைவனாக இருக்கும் காலாவுக்கு இந்த பிரச்சினைகள் இல்லை. அவர் வீடு விசாலமானாதாகவே இருக்கிறது. தனக்கென தனி வாகனம் வைத்திருக்கிறார், பணக்காரராகவே தெரிகிறார். இவருக்கு 4 மகன்கள். வன்முறையை கையிலெடுக்கும் எந்த ஒரு போராட்டத்திலும் தலைவன் சொகுசு வாழ்க்கையை தான் வாழ்வான், அவனை கண் மூடித்தனமாக நம்பும் தொண்டன், தன் எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்காமல் வாழ்ந்து மடிவான். ரஞ்சித், தன்னை அறியாமலே காட்டிய ஒரே உண்மையான குறியீடு இது தான்.

ஒரு காட்சியில் ரஜினி இஸ்லாமியர்களோடு நமாஸ் செய்கிறார். ஒரு இஸ்லாமியரை கொல்ல வரும் இந்துவிடமிருந்து, அவனை காப்பாற்றுகிறார். இஸ்லாமியர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் அண்ணன் தம்பி என்று பொருள்பட வசனமும் பேசுகிறார். அதெல்லாம் இருக்கட்டும் ரஞ்சித் சார், பொம்மி நாயக்கன்பட்டியில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணின் இறுதி ஊர்வலம், அவர்கள் தெரு வழியாக செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கொடி பிடித்த இஸ்லாமிய சகோதரர்களை பற்றி படம் எடுக்கும் திராணி இருக்கிறதா உங்களுக்கு? அதன் தொடர்ச்சியாக அப்பாவி மக்கள் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தினார்களே. அதுவாவது தெரியுமா உங்களுக்கு?

பொதுவாகவே தமிழ் திரைப்படங்களில் பகுத்தறிவு என்ற போர்வையில் ஹிந்து மத எதிர்ப்பே பிரதானமாக இருக்கும். தமிழ் திரைப்படங்களில் மட்டும் தான் ‘அம்பாள் எந்த காலத்தில டா பேசி இருக்கா’ போன்ற வசனங்கள் முக்கியத்துவம் பெரும். அதை எழுதியவர்கள் முதல்வராக முடியும். இப்படி இருந்த நிலையில், நெற்றி நிறைய திருநீறு பூசுவதையே ஸ்டைலாக  செய்தவர் தான் நம் சூப்பர் ஸ்டார். தான் நடிக்கும் 100-வது படம் ஸ்ரீ ராகவேந்திரர் பற்றிய படமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். பகவான் ஸ்ரீ ராகவேந்திரராகவே நடித்தார். அந்த சாந்தமான நடிப்பு இன்றளவும் பேசப்படுகிறது.

தன்னை பா.ஜ.க-வின் அடிவருடி என்று மற்றவர்கள் கூறுவதால், தன் நிறம் காவி அல்ல, தானும் பச்சை தமிழன் தான் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே காலா படத்தில் நடித்திருக்கிறாரோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. நேரடியாகவே ‘Clean Mumbai, Digital Mumbai’ போன்றவற்றை எதிர்க்கிறார்.

ஒரு கட்டத்தில், தன் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில், தன்னை வைத்து படம் தயாரிக்க வேண்டுமென்று கேட்ட பாலசந்தர் அவர்களிடம் தெளிவாக சொல்லிவிட்டாராம் ரஜினி, ‘கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் தலைப்பு அண்ணாமலை என்று தான் இருக்க வேண்டும்’ என்று. ரஜினி பா.ஜ.க-வை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ அவரது தனிப்பட்ட உரிமை, அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் தான் எந்த ஹிந்து மதத்தை நேசிப்பதாக மேடைகளில் காட்டிக் கொண்டாரோ, அதே ஹிந்து மதத்தை அவமதித்து ஒரு படம் நடித்திருக்கிறார். அண்ணாமலையாக உயர்ந்து நின்ற ரஜினி, இன்று இப்படிப்பட்ட ஒரு காலாவாக மாறி இருப்பது, அவரது வீழ்ச்சி என்றே சொல்ல வேண்டும்.

காலா ஒரு புரட்சி படமாகவும் மனதில் நிற்கவில்லை, ஒரு பொழுது போக்கு படமாகவும் ஜொலிக்கவில்லை. தன் நிறம் காவி இல்லை என்று காட்டிக்கொள்ள நினைத்த ரஜினி, தான், தன் சுயநலத்திற்காக அடிக்கடி நிறம் மாற்றிக்கொள்ளும் ஒரு பச்சோந்தி என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

நீங்கள் திராவிடர் கழகம் போன்றவர்களின் பொது கூட்டங்களை ரசிப்பவரென்றால், காலா நிச்சயம் நீங்கள் பார்க்க வேண்டிய திரைப்படம் தான். மற்றபடி இது ஒரு குப்பை திரைப்படம் தான் என்பது நம் கருத்து.

Share