தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பரிதாபமாக 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியிலும் மிகுந்து சோகத்திலும் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து நிரந்தரமாக மூடியது.

இந்த சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சியான தி.மு.க, ஆளும் அ.தி.மு.க அரசை மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை பற்றி பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வர துவங்கியுள்ளன.

ஸ்டெர்லைட் விவகாரத்தை பற்றி சட்டசபையில் கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்,  “எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடி சென்ற போது, அவர் பின்னால் சென்ற கார்கள் மீது, போராட்டக்காரர்கள் கற்களை வீசி, தி.மு.க., ஒன்றிய செயலரின், ‘ஸ்கார்பியோ’ காருக்கு தீ வைத்தனர். இதிலிருந்து, மக்களுக்கு யார் மீது கோபம் என்பது அப்பட்டமாக தெரிகிறது. இந்த சம்பவத்தில், போராட்டக்காரர்கள், 58 பேர்; போலீசார், 72 பேர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு, 1995-ல், காங்கிரஸ் ஆட்சியில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. ஆலையை எதிர்த்து, பொது நல வழக்குகள் தொடரப்பட்ட போது, தி.மு.க., அரசு சார்பில், ‘அனைத்து விதிகளையும் பின்பற்றியே, ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது’ என, தெரிவிக்கப்பட்டது. ஆலையின் இரண்டாவது விரிவாக்கத்திற்கும், தி.மு.க., அனுமதி அளித்தது. ‘ஆலையை மூட வேண்டும்’ என, கபட நாடகமாடும் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சராக இருந்த போது, ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கினார். ஆனால், 2013-ல், மக்கள் கோரிக்கையை ஏற்று, ஆலையை மூடியவர், புரட்சித்தலைவி செல்வி. ஜெயலலிதா. தற்போதும், அ.தி.மு.க., அரசு ஆலையை மூடியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த உண்மைகளையெல்லாம், சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது போல் மறைத்து,  தி.மு.க-வினர், அ.தி.மு.க-வையும்,  ஸ்டெர்லைட்டிற்கு எள்ளளவிலும் சம்பந்தம் இல்லாத பா.ஜ.க-வையும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நாடகத்தையெல்லாம் மக்கள் புரிந்துகொள்வார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share